அழகான வாழ்க்கை ஆனந்தமாய் o0o போட்டிக் கவிதை

அழகான வாழ்க்கை ஆனந்தமாய்.....
தேடியும் ஓடியும் பொருளினை சேர்த்து
திண்ணைப் பேச்சினில் பொழுதினை கழித்து
தூங்கியும் விழித்தும் வாழ்ந்திடும் வாழ்க்கை
தினமே தொடர்ந்திட பிறவியும் வீணே!!!
அன்பொடு பண்பொடு நேசம் வளர்த்து
நித்தம் உறவொடு பாசம் பிணைத்து
மெய்தனில் மெய்யை நிதமும் குழைத்து
உய்த்திட வாழ்க்கை விளங்கும் சிறந்து!!!
இதயமும்துடிப்பு மெனவேயிணைந்து
ஒருவனுக் கொருத்தியாகவே வாழ்ந்து
ஈருடல் ஓருயிர் எனவாகிடும்போது
இடர் தொலைந்தோடும் இன்பங்கள் கண்டு!!!
வரவினுக்குள்ளே செலவினம் வைத்து
வரம்பு மீறிய ஆசைகள் தவிர்த்து
உள்ளதை கொண்டு வாழ்வினை வகுத்திட
உண்டோ வாழ்வினில் தீரா பேரிடர்???
குடிசையின் உள்ளும் நிம்மதி வாழ்க்கை
கூழும் தேனாய் உண்டு மகிழ்ந்து
கூடிக் களித்து குற்றம் விலக்கிட
தேடிச் சுற்றமும் வந்தே போற்றும்!!!
அடிக்கடி பிணக்குகள் அடித்து விரட்டிடு
என்றோ பிணக்கினில் இன்பம் நுகர்ந்திடு
புயல்போல் துன்பம் சூழ்ந்திடும்போதும்
நம்பிக்கை வடத்தினை இறுகவே பற்றிடு!!!
விட்டுக் கொடுத்தலில் துன்பமும் ஓடும்
விட்டுப் பிடித்தலில் கிடைத்திடும் பாடம்
புரிதல் கொண்டே வாழ்ந்திடும்போது
வானம், வைகுண்டம் கைதொடும் தூரம்!!!
வாழ்க்கைத் தோட்டத்தில் அன்பை விதைத்திடு
மகிழ்ச்சிப் பூக்களை மணக்கவே பறித்திடு
புன்னகை இதழில் என்றுமே ஏந்திடு
வானவில் வாழ்க்கை வசப்படும் களித்திடு!!!