குப்பைத்தொட்டி பாடும் பாடல்

ஆரோ….ஆரோ…யாரிவரோ… யாரிவரோ…
குழந்தைகள் வேண்டும் என்றால்
அங்கே இங்கே சுற்ற வேண்டாம்
குப்பைத்தொட்டியைச் சுற்றி வாங்க

குப்பைத்தொட்டியிலே குப்பைகளைப் போடுங்க….
குழந்தைகளைப் போடாதிங்க….

இன்றுவிழுந்த குப்பைகளில்
விலை உயர்ந்த குப்பை இந்தக் குழந்தைதானம்மா…
விதி வசமோ பெற்றோரின் சதி வசமோ நானறியேன்…
நீ இப்போழுது என் வசம்

அழுகாதேன்னு பாடமாட்டேன்
அழுகண்மணி… அழுகண்மணி…
ஊர்முழுக்க உன்அழுகுரல் கேட்கட்டும்
குழந்தையில்லா மகராசி வரட்டும்
காசுள்ள மகராசி பார்க்கட்டும்
கருணையுள்ள மகராசி தூக்கிவளர்க்கட்டும்

கலவியில் மிஞ்சிய குழவி நீ
அன்புள்ளவள் உன்தாய் அறிவில்லாதவள் உன்தாய்
அன்பும் அறிவும் இல்லாதவன் உன்தந்தை

குப்பைத்தொட்டியில் வீசியப் பெற்றோரை
மன்னிக்கவும் பழகு மறக்கவும் பழகு

உனக்குப் பின்னால் ஒருதாய் மறைந்திருக்கிறாள்
முன்னால் ஒருதந்தை ஒளிந்திருக்கிறான்

கவிஞர்களே என்னை அஃறிணை என்று பாடாதீர்கள்
உயிரற்றதைச் சுமந்த இந்தக் குப்பைத்தொட்டி வயிறு
இன்றுதான் உயிருள்ளதைச் சுமக்கிறது
கவிஞர்களே என்னை உயர்திணை என்று பாடுங்கள்

கலங்காதிரு உனக்குக் காரணப்பெயர் வைக்கிறேன்
குழந்தாய் நீ ஆண் என்றால் உனக்கு குப்புசாமி
குழந்தாய் நீ பெண் என்றால் உனக்கு குப்பம்மாள்

ஞானப்பசிக்கு அழவில்லை வாழ்க்கைப் பசிக்கு அழுவுதம்மா
ஆகாயத்திலிருந்து ஆண்டவன் வரவேண்டாம்
அடுத்த விட்டிலிருந்து ஒருத்தியாவது வரக்கூடாதா…

உன் பெற்றோருக்குக்
காமம் அவசியத்தேவையாய் இல்லாமல் அவசரத்தேவையாய் இருந்தது

வீசியவளை எனக்குத் தெரியும் தெரிஞ்சாலும்
எம் பேச்சு எடுபடாது சாட்சிச் சொல்ல முடியாது

மனிதர்கள் எதை எதையோ குப்பையாகப் போடுவார்கள்
இன்றைக்கு மனிதனையே குப்பையாகப் போட்டார்கள்

உன்னை வேண்டும் என்றே வீசவில்லை
உன்னை வேண்டாம் என்றே வீசினாள்

குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி குண்டுமணிதான்
குப்பையில் கிடந்தாலும் குழந்தை குழந்தைதான்

எழுதியவர் : damodarakannan (23-Aug-14, 12:19 pm)
பார்வை : 119

மேலே