அழகான வாழ்க்கை ஆனந்தமாய்

அழகான வாழ்க்கை ஆனந்தமாய் வாழ ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெற்றி ஒன்றே குறிக்கோளாய் வேண்டும்
வீரமெந்தன் வழித் துணையாய் வேண்டும்
அயாராத உழைப்பு அனுதினம் வேண்டும்
அன்பைக் கொண்டே வாழ்ந்திட வேண்டும்

முயற்சி ஒன்றே முதலீடாய் வேண்டும்
முடியும் என்றே போராட வேண்டும்
முனைப்பு கொண்டு நடைபோட வேண்டும்
வெற்றியும் எந்தன் விரலோடு வேண்டும்

இளமையும் காதலும் இணைசேர வேண்டும்
உள்ளமும் அன்பும் ஒருசேர வேண்டும்
உடலுக்கும் உயிருக்கும் உறவாக வேண்டும்
இன்பமே பொங்கும் இல்லறம் வேண்டும்

அன்பான துணைவி அமைந்திடல் வேண்டும்
பொறுப்பான பிள்ளை பிறந்திடல் வேண்டும்
அளவான செல்வம் அதுசேர வேண்டும்
ஒன்றாய் வாழ உறவுகள் வேண்டும்

பசுமை மாறா இயற்கை வேண்டும்
வஞ்சக மில்லா நெஞ்சம் வேண்டும்
போட்டி போடும் மனிதம் வேண்டும்
புறம்கூறா சொந்தம் வேண்டும்

உன்னத வாழ்வில் உயர்நிலை வேண்டும்
தன்னிலை உணரும் மனநிலை வேண்டும்
பிறர்நலம் பேணும் பண்புகள் வேண்டும்
தன்னல மில்லா தனித்துவம் வேண்டும்

தமிழே நீயெனக்கு தாயாக வேண்டும்
உனையே போற்றும் வரமொன்று வேண்டும்
பிள்ளையாய் மீண்டும் பிறந்திட வேண்டும்
மடிமீது தானமர்ந்து அமிழ்துண்ண வேண்டும்

குறள்வழி சென்றால் குறையொன்று மில்லை
அறிந்தோர் வாழ்க்கை ஆனந்தமாகும்
அய்யனின் மொழியே ஆனந்த வாழ்க்கை
அதைவிட ஆனந்தம் அகிலத்தில் இல்லை

படைப்பு - (அ.சு )

எழுதியவர் : அழகர்சாமி சுப்ரமணியன் (அ.ச (24-Aug-14, 6:37 pm)
பார்வை : 265

மேலே