நீராகாரம்

ஏனென்று புரியாமல்
எதற்கென்று தெரியாமல்
ஆட்டு மந்தையென
அடிவருடி ஒருவர்பின் ஒருவராக
டோமினோக்களிலும்
மெக்டொனால்டிலும்
தவம் கிடக்கிறோம்
காய்ந்து போன
பிட்சாவிற்கும்
அரைவேக்காட்டு பர்கருக்கும்
உஷ்ண நாட்டின்
பிரஜ்ஜைகள் நாம்....
வேட்டி மறந்தோம்
புடவை துறந்தோம்
மண்ணின் இசையை மறந்தோம்
மரபு விழாக்களை துறந்தோம்
அத்தனையும் கடந்து
மண் மனம் வீசும்
ஆரோக்கிய சமையல் மறந்தோம்
நூடுல்சும் மக்ரூனியும்
குழந்தைகளின் உணவானது
கெலாக்சும் ஓட்சும்
பெரியோர் உணவானது....
சுண்டி இழுக்கும்
பாக்கெட் உணவுகள்
எமனாவது அறியாமல்
நாகரிகமாய் கொறிக்கும்
கொடுமையை என் சொல்ல...
மரணம் தேடி வந்த
காலம் போய்
மரணத்தை நாம் தேடும்
இந்த மடமையை
கலியுக கொடுமையை
எப்படி சொல்லி
ஏற்க வைப்பது.....!
முதல் நாள்
இரவில் மீறும் சாதம்
மண் பாண்டத்திலிட்டு
தண்ணீர் விட
அது நீராகாரமாய் மாறும்
அத்தனை சத்துக்கள்
ஒருங்கே அமைந்த
அருமருந்து....
சில்லென்ற
நீராகாரத்தின் முன்னே
பெப்சியும் , கோக்கும்
பிச்சை வாங்கும்....!
இளம் புளிப்பான
நீராகாரத்தில்
சற்று தயிர் விட்டு
துளி உப்பிட்டு
வெங்காயம் வெட்டிப் போட்டு
மோர்மிளகாய் தொட்டுக்கொண்டு
குடிக்க குடிக்க ....
வயிற்றுக்குள் காஷ்மீரின்
குளிரடிக்கும்....!
உயிர்சத்து நிறைந்ததைf
ஓரங்கட்டிவிட்டு
உயிர் குடிக்கும் உணவிற்கா
ஒற்றைக் காலில் நிற்கின்றோம்
நாள் பட்ட அல்சரும்
ஓசையின்றி ஒதுங்கி கொள்ளும்
நோஞ்சான் பிள்ளைகளும்
பயில்வானாய் மாறிவிடும்...!
புத்துணர்வு குடிகொண்டு
புது ரத்தம் பாய்ச்சிவிடும்
அமெரிக்கன் கண்டுணர்ந்து
ஆய்வறிக்கை வெளியிட்டான்
நீராகாரம் சிறந்த உணவென்று!
இனி....அமெரிக்க வீதிகளில்
நீராகாரம் விற்கப்படலாம்....
அப்போதும் மமதை கொண்ட
நம் வீதிகளில்
துரித உணவுகளே
துடிப்புடன்
கோலோச்சும்....
நாம் நாகரிக மோகம் கொண்ட
ஏமாளிகள்...சொன்னாலும் ஏற்காத
கோமாளிகள்....!

எழுதியவர் : சித்ரா ராஜ் (25-Aug-14, 7:34 am)
பார்வை : 116

மேலே