சுசீந்திரனின் -சித்திரத்தின் விலை இரண்டு கண்கள் பகுதி2-பொள்ளாச்சி அபி

சித்திரத்தின் விலை இரண்டு கண்கள் பகுதி.2-பொள்ளாச்சி அபி
--------------- ----------- ----------- --------- ----------- ---------------------------
கவிஞர் சுசீந்திரன் எழுதிய குங்குமம் இல்லாத குங்குமச்சிமிழ்கள்..கவிதை முதிர் கன்னிகளின் துயரைப் பற்றி பேசுகிறது.
பட்டாடை உடுத்தி வந்த வாரிசுகள் வாலில்லாமல் வந்தன தலையில் இரண்டு கொம்புகளுடன்..என அங்கதத்துடன் துவங்கும் வரிகள்,பகட்டான உடையணிந்து வரும் மாப்பிள்ளை,பெற்றோர் சொல்படி கேட்கும் பூம்பூம் மாடு போல இருக்கிறார்..என்று சுட்டிக்காட்டிப் போகிறார்.

தனக்குப்பிடித்த உடை,தனக்குப் பிடித்த வாகனம்,தனக்குப் பிடித்த படிப்பு..என பல வகையிலும் தனது விருப்பத்தை சாதித்துக் கொள்ளும் ஆண்கள்,திருமண விஷயத்தில் மட்டும் பெற்றோரின் சொல்படி கேட்கும் மாடுகளாக இருப்பது ஏன்..? என்ற கேள்வியை முன்வைக்கும் இந்த வரிகளின் பின் நமது பதில் என்னவாக இருக்கப் போகிறது.?

பெற்றோருக்கு மதிப்பளித்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால்கூட,அந்த மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாத பெற்றோர்,வரதட்சணைக்காகப் பேரம் பேசும்போது,அதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பது,ஒரு ஆணுக்கு அழகா..?. இதன் மூலம்,கனவுகளுடன் வாழும் ஒரு பெண்ணின் துயரை அறிந்து கொள்ளாமல் இருப்பது அறிவா.?

இதில்,துயருறும் முதிர்கன்னிகளின் மனவோட்டத்தை,ஜன்னல்களைத் தேய்த்து நிற்கும் பொட்டிட்ட பௌர்ணமிகள்.., கவலைகளை வைத்து கண்ணீர் வாங்கினாள் கன்னிப் பெண்.., வெள்ளைப் பூக்களைக் காணாமல் கறுப்புக் காடுகள் மணப்தை நிறுத்தின..எனச்சுட்டுவதும் மிக நன்றாக இருக்கிறது.

வரதட்சணையால் மணம் தள்ளிப் போகும் பெண்கள்,பாதை தவறிப் போகும் வாய்ப்புகளையும்,அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் விஷப் பாம்புகளையும் வருத்தத்துடன் சுட்டும் வரிகளைத் தொடர்ந்து,
“தலைகுனிந்து நின்றது அப்பன் மட்டுமில்லை.சமூகமாகிய நாமும்தான்..!” என்று முடிக்கப்பட்ட இந்தக் கவிதையிலிருந்து நீளும் குற்றம் சுமத்தும் விரல்கள்,நம் கன்னத்திலும் அறைகின்றன.

சாத்தானின் அம்மா..எனும் கவிதையில்,மனிதன் தினம் என்று ஒன்று உருவாக்கு..என்ற கோரிக்கையைத் தொடர்ந்து அன்றொரு நாளாவது மனிதனாக இருந்து வாழு..என்று துவங்கிச் செல்லும் வரிகள் முதல் இறுதிவரையும் பல்வேறு சிந்தனைகளுக்கு இடம் கொடுக்கிறது.

மனிதனாகப் பிறந்துவிட்டு,மனிதத் தன்மையே இல்லாமல் வளரும்,வாழும் மனிதர்கள் அனைவருக்குமான பொது விமர்சனமான இந்தக் கவிதை,மதம்,கடவுள்,சூழல் என அனைத்தும் மனிதர்களின் சுயநலத்துக்கு பலியாவதை,ஒரு தாயுள்ளத்தோடு எடுத்துக் காட்டுகிறது.


சுதந்திரம் எனும் தலைப்பிலான கவிதையும்,சமூகத்தில் நீடிக்கக் கூடாத யதார்த்தங்களை சுட்டுவதாகவும் கண்டிப்பதாகவும் நகர்ந்து சென்று,இவையெல்லாம் தீரும்வரை சுதந்திரத்தை நான் எவ்வாறு போற்றுவது.? என கேட்கிறது.

தீண்டாமையும்,பிரிவினைகளும்,நிலவும் நாடு மற்றொரு கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டிருந்தால் மட்டும் போதுமா..? என்று நியாயமான கேள்வியையும் முன்வைக்கிறது.

இந்த சித்திரம் விலை இரண்டு கண்கள்..எனும் கவிதை, அங்கதமும்,நையாண்டியும்,படிமங்களும் மிளிரும் கவிதையாக இருக்கிறது.
கணினியையே சுற்றிக் கொண்டிருக்கிற செக்கு மாடுகளைப் போலாகி விட்டார்கள் மனிதர்கள்,என்று சொல்லும் கவிஞர்,இம்மனிதர்களின் நிலை இப்போது என்னவாக இருக்கிறது என்றும் சுட்டிச் செல்கிறார்.இதனை வாசிப்பவர்கள்தான்,தங்கள் வசதிக்கேற்பப் பொருளைப் புரிந்து கொள்ளவேண்டும் எனும் இக்கட்டிலும் தள்ளிவிட்டிருக்கிறார்.எனவே வாசகர்களின் பார்வைக்கே அதனை விட்டுவிடுகிறேன்.

பொதுவாக கவிஞர் சுசீந்திரனின் கவிதைகளில்,இன்னும் பலவிதமான படைப்புகள் இருக்கலாம்.நான் சமீபத்தில் வந்த சில கவிதைகளை மட்டுமே பார்க்கவும் உங்களோடு இங்கே மிக அவசரமாகப் பகிரவும் முடிந்தது.
காரணம் என்னவெனில்.. “கண்ணில் படவில்லையா இல்லை கண்ணில் படாதது மாதிரி நடிக்கிறார்களா.....கருத்துக்கூறும் அளவுக்கு இவனெழுத்து எழுத்தே அல்ல என்று நினைத்திருக்கலாம்......சந்தனத்தை பூசாவிட்டாலும்......சேற்றையாவது என் மீது தெளியுங்கள்....அதை சந்தனமாக்கும் ஆற்றல் எனக்குண்டு .... என்றைக்கு நான் உங்களைப்போல் வளர்வது.....மௌனம் கொலை செய்வதை விட கொடூரமானது..., என்று சில வரிகளை எண்ணத்திலோ,கேள்வி பதில் பகுதியிலோ பதிவு செய்திருந்ததை எதேச்சையாகத்தான் பார்க்க முடிந்தது.

அவர் எழுதியிருக்கும் இந்த வரிகள்,ஏறக்குறைய இந்த தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் 99 சதவீதத்தினருக்கும் இருக்கும் உள்ளக் குமுறல்கள்தான் என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.ஆனால்,இதில் எந்த அளவிற்கு உண்மையிருக்கிறது என்று யோசிக்கும்போதே,தன்னைப் பற்றிய சுயவிமர்சனத்தையும் அவர் தனக்குள்ளாகப் பண்ணிக் கொள்ளத்தான் வேண்டும்.

மேலும் சில எதார்த்த நிலைகள் குறித்து படைப்பாளிகள் எல்லோரும் கருத்தில் கொள்ளவேண்டியதும் அவசியமாகிறது.

பொதுவாக தனது படைப்பு பதியப்பட்டவுடன்,கருத்துக்களும் பார்வைகளும் வந்து குவியவேண்டும் என்று நாம் நினைப்பதில் தவறில்லை.ஆனால்,நாம் அப்படித்தான் அனைவரின் படைப்புகளையும் சென்று பார்த்து கருத்திட்டு ஊக்கப்படுத்தி வருகிறோமா..?

கண்ணில் படவில்லையா..? படாமலும் போயிருக்கலாம்.ஒரே பார்வையில் அன்றைக்கு பதியப்பட்ட அத்தனை படைப்புகளும் கண்ணில் படுவதில்லை.அதற்கான வசதிகள் தளத்தில் இல்லை.

கண்ணில் படாத மாதிரி நடிக்கிறார்களா..? ஏன் நடிக்க வேண்டும்.நமது கவிதை பிடித்தால் கருத்து சொல்லத்தான் போகிறார்கள்.இல்லையெனில் நகர்ந்து போய்விடுகிறார்கள்.அதுவும் பிடிக்காத கவிதையென்று எதற்கு கருத்து பதியவேண்டும்.பின் அதற்காக எழும் வாதப்பிரதிவாதங்களில் நேரத்தை செலவிடவேண்டும்..? அந்த நேரத்தில் இனனொரு படைப்பை பார்க்கலாம்,படைக்கலாம் என்று கருதுவதே இயல்பு.

“கருத்து கூறும் அளவுக்கு இவனெழுத்து எழுத்தே அல்ல என்று நினைத்திருக்கலாம்..” மற்றவர்கள் அப்படி நினைத்திருக்க வாய்ப்புகள் நிச்சயமாக உள்ளது.ஏனெனில் நமது கவிதையில் சொல்லப்பட்ட கருவில் ஏற்புடையவர்களாக எல்லோரும் இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்ப்பதே தவறு. சிலருக்கு காதல் கவிதைகள் மட்டுமே பிடிக்கிறது.சிலருக்கு காமக் கவிதைகள்,சிலருக்கு தத்துவங்கள்,சிலருக்கு பூடகங்கள்..என எத்தனையோ வகையுண்டே..!

இந்நிலையில்,நாம் நமது கவிதைகளைக் குறித்து என்ன நினைக்கிறோம் எதற்காக எழுதுகிறோம் என்பதே முக்கியம்.நமது கவிதைகளின் தகுதி என்ன என்பதைக் குறித்து இடைவிடாத சுயவிமர்சனம் மனதில் ஓடிக் கொண்டே இருக்கவேண்டும்.
நமது கவிதைக்கு,ஒரு கவிதைக்குரிய சகல தகுதிகளும் இருக்கலாம்.சிறந்த கவிதையை எழுதிவிட்டோம்.ஆனால், கண்டு கொள்ளப்படவில்லை..என்ற நினைப்பு மட்டும் நமக்கு கூடவே கூடாது.நம்மை முடக்கிப் போட அதைவிட சிறந்த தடுப்பு இல்லவே இல்லை.

சிலந்தி மனிதனாக நடிக்க,நடைபெற்ற நேர்முகத்தேர்வில்,நீ கல்லுளி மங்கனாக நடிப்பதற்குத்தான் லாயக்கு,என்று தள்ளிவிடப்பட்ட கடவுளின் தகுதியை கேள்விக்குரியதாக ஆக்கிய நாடுதான் நமது நாடு.

-- தகுதித் தேர்வில்
தள்ளுபடி செய்யப்பட்டார்
கடவுள்
சிலந்தி மனிதனாக [ SPIDER MAN ]
நடிப்பதற்கு .
நடுவர்கள் சொன்னார்கள் :
நீ -
கல்லுளி மங்கனுக்குத்தான் பொருத்தம்---- கவிஞர் சுசீந்திரன்.
எனவே நமது உண்மையான தகுதி குறித்து மற்றவர் சரியாக எடைபோடவில்லையே எனும் கவலை தேவையே அற்றது.

“சந்தனத்தை பூசாவிட்டாலும்......சேற்றையாவது என் மீது தெளியுங்கள்....அதை சந்தனமாக்கும் ஆற்றல் எனக்குண்டு ....”

கவிஞனுக்கு பாராட்டுக்கள் முக்கியமானதாயிற்றே..அப்போதுதானே தொடர்ந்து கவிதைகள் எழுத உத்வேகம் அளிக்கும் என்று நினைக்கலாம்.
நாம் என்ன பெட்ரோல் டீசலில் ஓடும் யந்திரமா..? அது தீர்ந்தவுடன் நின்று போக.?

பாரதி இருந்த காலத்தில் எவன் போய் பாராட்டிக் கொண்டிருந்தான்.? எழுதியது வெளிப்பட்டாலே,காவல்துறை கைது செய்யும் நிலையிலும்,அவன் தொடர்ந்து எழுதிக் கொண்டுதானே இருந்தான்.?

சமூக முன்னேற்றத்திற்காக எழுதப்படுகிற படைப்புகளை,சமூகமே திரண்டு வந்து பார்வையிட வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு அசாத்தியமானது.?

யாருடைய பாராட்டுக்காகவும்,கருத்துக்காகவும் எழுதுவது என்பதை அடியோடு மறந்துவிடுங்கள்.பிழைப்பிற்காய் எழுதியது பிரசுரமானது. சமூகத்திற்காய் எழுதியது சரித்திரமானது என்று அதற்காகத்தான் சொன்னேன்.

கருத்துக்கள் சொல்லப்படாததினாலேயே,அவை கவிதைகள் அல்ல என்றும்,கருத்துக்கள் சொல்லப்படுவதாலேயே அவைதான் கவிதைகள் என்றும் நாம் எண்ணிக் கொள்வது மடமையில்தான் முடியும்.இதில் எனது சொந்த அனுபவத்தையே முன்வைத்துக் கூட எனக்கு சொல்வதற்கு நிறைய இருக்கிறது.இந்தத் தளத்தில்,மூன்றுபேர்கூட கருத்து சொல்லாத படைப்பு,முப்பது லட்சம் பேர் பார்க்கும் இதழ்களில் பரிசு வாங்கியதும்,பாராட்டுக்கள் கிடைத்ததும் நடந்ததுதானே.? இன்னும் இதுபோல நிறைய உண்டு.அதனை வேறொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

என்றைக்கு நான் உங்களைப்போல் வளர்வது.....மௌனம் கொலை செய்வதை விட கொடூரமானது

நல்ல படைப்பை ரசித்து கருத்து சொல்லாமல் கடப்பதை நினைத்து,கடந்து செல்பவர்கள்தான் தோழரே வெட்கப்படவேண்டும்.நீங்கள் ஏன் கவலைப் படுகிறீர்கள்.? “சேற்றையும் சந்தனமாக்கும் வித்தை தெரிந்தவனான” படைப்பாளிக்கு அந்த எதிர்பார்ப்பு,அவனது தகுதிக்கு இழுக்கல்லவா.?

இவையெல்லாவற்றையும் கடந்து இன்னொரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.99 சதவீதம் பொழுது போக்கிற்காகவே இந்தத் தளத்தில் நுழைகின்றனர்.அவர்கள் அனைவரும் வந்து பார்த்து,கருத்தும் மதிப்பெண்ணும் அளிக்க வேண்டும் என்று இங்கு எவரும் எதிர்பார்க்கக் கூடாது.ஏனெனில்,அவர்களில் யாரும் நாம் சம்பளம் கொடுத்து அமர்த்தப்பட்ட பணியாளர்கள் அல்ல.அதனால்,அவர்களைக் குறித்து அங்கலாய்ப்பதோ,அவர்கள் மீது கோபப்படுவதோ எவ்விதத்திலும் நியாயமுமில்லை.தமது நேரத்தையும்,அதன் மூலம் ஏற்படும் பொருளாதார சிக்கலையும் கடந்து இங்கு வந்து,-அவர்களின் செலவில் என்றுகூட சொல்லலாம்-ஏதேனும் ஒரு சில படைப்புகளுக்காகவாவது கருத்தும் பார்வையும் குறைந்த அளவிலாவது, தந்து போகிறவர்கள் உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டியவர்கள்.அவர்களை
வாழ்த்துவோம்.வருகை தந்தபோதெல்லாம் மனமுவந்து முதலில் நன்றி சொல்லும் நாகரீகத்தை வளர்த்துக் கொள்வோம். ஏனெனில்..

“அந்நியப்படுதலின்
ஆரம்பப் புள்ளி
இன் சொல்லை
ஈய மறுப்பதிலிருந்தே
உருவாகிறது தோழரே..!”- -[ பொள்ளாச்சி அபி ]

எதெல்லாம் மற்றவர்கள் செய்ய வேண்டும் என நினைக்கிறோமோ, அதையெல்லாம் செய்வதற்கு நம்மால் இயன்றவரை நாம்தான் முன்கை எடுக்க வேண்டும்.இது ஒருவகையில்,பிறரை நோக்கி சுட்டுவிரல் நீட்டி குற்றம் சுமத்தும்போது,மற்ற மூன்று விரல்கள் நம்மை நோக்கியிருக்கின்றன எனும் சொற்றொடருடன் பொருத்திப் பார்த்துக் கொள்வதே நல்லது.
-இந்தக் கட்டுரையையும்,எல்லோரும் வந்து பார்த்து கருத்து சொல்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.நான்கு வரிகளுக்கு மேல் இருந்தாலே படிக்க சோம்பல் படுபவர்கள் இங்கு அதிகம் என்றும் எனக்குத் தெரியும்.ஆனாலும், கவிஞர் சுசீந்திரனாகிய நீங்கள் எப்போதேனும் வந்து பார்வையிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் மட்டுமே நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டுப் போவதே எனது வேலை என்று உணர்ந்ததினாலேயே இதனை எழுதிப் போடுகிறேன்.

“விதைத்துத் திரும்பு
முளைத்து வருபவை
உன்பேர் சொல்லும்.”-கவிஞர் சுசீந்திரன்.

இந்தக் கட்டுரை சித்திரத்தின் விலையும் இரண்டு கண்கள் மட்டுமே..! நீங்களே பாருங்கள் எவ்வளவு விலை போகிறது என்று.!

வாழ்த்துக்கள் தோழரே,மீண்டும் பேசுவோம்.!

அன்புடன்
பொள்ளாச்சி அபி.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (26-Aug-14, 12:46 pm)
பார்வை : 154

மேலே