யாரிவள்
சுகமான காலையில்
சூரியன் வருகையில்
கண் கூசும் படியாக
கன்னித் தேர் யாரிவள்?
ஞாயிறை தோற்றடிக்கும்
ஒளிக்கீற்றைப் பார்த்தேன்
கண் கொட்ட முடியாமல்
கண்ட படி தவித்தேன்
அலைபோல நடையிட்டு
என் நெஞ்சை கொய்தாளே
அளவான அழகாலே
அல்லாடச் செய்தாளே
பூப் போன்ற புதுமைப்பெண்
யாரிவளோ நானறியேன்
அதை நானும் அறியுமுன்னே
என் மனதை நானறியேன்!!
காற்றாக உருமாறி
அவள் கேசம் கலைத்திடவா
தலை கோதும் விரலாக
இங்கே நான் மாறிடவா?
தூரத்தில் பார்த்ததற்கே
உளறல்கள் ஆயிரம்
நெருங்கி அவள் வந்துவிட்டால்
உதறல்கள் ஆரம்பம்!!
தொலைதூர பார்வைக்கே
தொலைத்துவிட்டேன் என் மனதை
கிட்டத்தில் வந்துவிட்டால்
கேட்டுருப்பேன் என் வயதை!!
அவள் வாசம் எனைமோத
என்னருகே வந்துவிட்டாள்
மயக்கமது தெளியுமுன்னே
அவள் என்னை கடந்துவிட்டாள்!!!