+குறும்பா பூச்சரம்+

+குறும் பா கொஞ்சம் குறும்பா - 1+

விளையாட ஆசைதான்
மைதானமோ சிறிது, என் செய்வது?
மொட்டைத்தலை...!!!
==============================
கவியெழுத ஆசைதான்
கருத்த அருவி என்று, என் செய்வது?
குட்டைச்சடை...!!!
==============================
காதல் சொல்ல ஆசைதான்
பேசாமலேயே சிரிக்கிறாள், என் செய்வது?
அட்டைப்பெண்...!!!
=========================
சிறை பிடிக்க ஆசை தான்
மேகத்துக்குள் ஒழிகிறாள், என் செய்வது?
வட்ட நிலா...!!!
=======================
உயிர்கொடுக்க ஆசைதான்
தினம்தினமும் நீரூற்றி, என் செய்வது?
ஓவியத்தில் பட்டமரம்...!!!
========================
மீசை முறுக்க ஆசைதான்
சிறுதீண்டலில் சொக்கிப்போனாள், என் செய்வது?
தொட்டியில் தொட்டாச்சிணுங்கி...!!!
========================

+குறும் பா இன்னும் குறும்பா - 2+

கிசுகிசுக்கள் பலவந்தும்
கவலையின்றி பாடம் நடத்தினார்
வகுப்பில் ஆசிரியர்
==============================
இரவெல்லாம் விழித்திருந்து
தேர்வு நேரத்தில் தூங்கிப்போனாள்
பரிட்சை மாணவியின் அம்மா
==============================
திரைமறைவு ரகசியங்கள்
வில்லியானாள் கதாநாயகி
இயக்குனருடன் சண்டை
==============================
கோணலான சாலையில்
நேர்மையாய் சிலர்
ஒன்றன் பின் ஒன்றாய் வாகனங்கள்
==============================
காதல் கடிதத்தில்
கையெழுத்திட மறந்தான்
அதன்பெயர் மொட்டைக்கடிதமானது
==============================
விருந்துக்கு வந்துவிட்டு
விழுந்துகிடந்தான் போதையில்
சொந்தக்கார பயபுள்ள‌
========================

+குறும் பா இனிக்கும் கரும்பா - 3+

மிகவும் இனித்தது
சர்க்கரையும் தோற்றது
மழலையின் முத்தம்
==========================
இசையைவிட ஆனந்தம்
சொர்க்கம்கண்ட பேரின்பம்
மழலையின் முதல் வார்த்தை
==========================
பனியைவிட குளுமை
மலரைவிட இனிமை
மழலையின் ஸ்பரிசம்
==========================
திட்டத்திட்ட சந்தோசம்
அடிக்கஅடிக்க உற்சாகம்
மழலையின் சுட்டித்தனம்
==========================
எல்லோருக்கும் இடவசதி
சாதியில்லை மதமுமில்லை
குழந்தைகள் பள்ளிவாகனம்
==========================
நிறுத்தாமல் தொடர்ந்தாலும்
கட்டணம் ஏதும் குறைவதில்லை
குழந்தைகளின் செல்ல செல்பேச்சு
==========================

+குறும் பா எண்ண எறும்பா - 4+

கால் கடுக்க நடந்தும்
ஊருவந்து சேரலையே
புலம்பின எறும்புகள்
=========================
வழிபாட்டுத் தலத்தில்
வன்முறையில் இறங்கின‌
இனிப்பைச்சுற்றி ஈக்கள்
=========================
சொந்தமாய் வீடு ஒன்று
வாடகை வீட்டில் கட்டியது
உழைப்பாளி தேனீக்கள்
=========================
இன்று நீ நாளை நானோ
சாமிக்கு வேண்டுதலாம்
சோகமாய் ஆட்டுக்குட்டி
=========================
நான் கத்த அதிஷ்டமாம் கதவிடுக்கில் அழுத்திவிட்டு
சிரிக்கின்ற மனிதனைப்பார்த்து
ஆதங்கத்தில் அழும் பல்லி
========================
பெரியோருக்கு அனாதை இல்லம்
எனக்கு மட்டும் தினம் விருந்து
எக்காளமாய் மொட்டைமாடி காக்காய்
========================

+குறும் பா இன்பம் தரும்பா - 5+

குளித்து இளைப்பாறின‌
நேற்று பெய்த மழையில்
வாடியிருந்த புற்கள்
==========================
கிணற்றுக்குள் குதித்து
தலைகுளித்து வந்தது
எங்கள் வீட்டு வாளி
==========================
முதல் மதிப்பெண் எடுத்தும்
முன்னேற்றம் குறைவாகவே
முதல் வகுப்பு மாணவன்
==========================
கடையில் விற்கப்பட்டது
வானவில்
வண்ணவண்ண வளையல்கள்
===========================
எவ்வளவு கத்தியும்
கைகொடுத்து காப்பாற்ற எவருமில்லை
எண்ணெய் சட்டியில் வடை
===========================
இனிப்பாய் உண்டும்
சர்க்கரை வியாதியில்லை
வண்ணத்துப்பூச்சிகளுக்கு
===========================

+குறும் பா தேர்தல் களம்பா - 6+

மக்கள் பிரதிநிதி மக்களை பார்க்கவந்தார்
ஐந்து வருடங்களுக்கு பிறகு
தேர்தல்
===================================
குளிர்சாதன அறையை விட்டு வராதவர்
வெயிலில் வாடினார் வியர்வையால்
பிரச்சாரம்
===================================
அள்ளிவிட்டார் வாக்குறுதிகளை
ஜெயித்தால்தானே நிறைவேற்ற‌
சுயேட்சை வேட்பாளர்
===================================
சொன்னதையே சொன்னான் கிளிப்பிள்ளை போல‌
போன தேர்தலிலும் இந்தத் தேர்தலிலும்
மீண்டும் ஜெயிக்கப்போகும் அரசியல்வாதி
===================================
பிரியாணி உள்ளே போகாமல் குமட்ட‌
இலவசத்தை வாங்க சக்தியின்றி ஒட்டிய வயிற்றுடன் விவசாயி
தேர்தல் காலம்
===================================
குப்பையில் கிடக்கட்டும் கொள்கை
சொகுசாய் நடக்கட்டும் வாழ்க்கை
கணவன் ஒரு கட்சி மனைவி ஒரு கட்சி
===================================

+குறும் பா சரித்திர தொடர்பா - 7+

தேரா மன்னன் எதிர்வீட்டில்
தேர்வில் தவறிய மாணவன்
பெயர் பாண்டியன்
==========================
மதுரையை அழிக்காமலேயே
நீதியை நிலைநாட்டினாள்
நாடகத்தில் கண்ணகி
==========================
வரலாறு படைத்துவிட்டு
மதுவாகிப் போனோமே
வருந்தினார் நெப்போலியன்
==========================
ரோமியோவும் ஜுலியட்டும்
தமிழகத்தில் பிறந்தார்கள்
உலக மயமாக்கல் வாழ்க‌
==========================
முதல் உலகப்போரும் இரண்டாம் உலகப்போரும்
ஒரே நேரத்தில் நடந்தது கனவில்
நாளை வரலாறு பரிட்சை
==========================
புது வரலாறு படைத்தது
கின்னஸில் வரவேண்டிய சாதனை
தமிழக நேற்றைய மது விற்பனை
==========================

+குறும் பா அச்சம் தரும்பா - 8+

நள்ளிரவு நேரம்
பயத்தில் கட்டிக்கொண்ட இருவர்
பெரியமுள்ளும் சின்னமுள்ளும்
===============================
சிரிப்பொலி திகிழூட்ட‌
திடுக்கிட்டு விழித்தான்
பக்கத்தில் மனைவி
===============================
கண்ணாடிக்குள் இன்னொரு உருவம்
உற்றுப்பார்த்தால்
தலையில் அமர்ந்திருந்தது ஒரு கொசு
===============================
கையும் காலும் தனித்தனியே
தலையும் எடுக்கப்பட்டது சிரித்தபடியே
குழந்தைகையில் பொம்மை
==========================
வெட்டுவாங்கி வெட்டுவாங்கி
உடல் சிறுத்து போனது
எழுதுகோல்(பென்சில்)
==========================
சதையையும் ரத்தத்தையும்
ருசித்துச் சாப்பிட்டான் மனிதன்
இளநீர்
==========================

+குறும் பா தீயாய் சுடும்பா – 9+

அழுது அழுதே
அழித்துக்கொள்கிறான்
மெழுகுவர்த்தி
=========================
எண்ணெய் ஊற்றாமலே
எரித்துக் கொள்கிறான்
தீக்குச்சி
=========================
சுட்டு சுட்டே
அழவைக்கிறான்
பனியைச் சூரியன்
=========================
தன்னை மாய்த்து
பலர் வயிறு நிர‌ப்புகிறான்
விறகு
=========================
எண்ணெய் குடித்தே
ஏப்பம் விடுகிறான்
விளக்கு
=========================
வாசம் கொடுத்தே
வாழ்வை தொலைக்கிறான்
ஊதுவர்த்தி
=========================

+குறும் பா சின்ன அரும்பா – 10+

மூர்த்தி சிறிது
கீர்த்தி பெரிது
குறிஞ்சி மலர்
==========================
தலைவனைத் தொழுதாலும்
தலை நிமிர்ந்து நிற்கும்
சூரிய காந்தி
==========================
இருவகை நிலங்கள்
பூக்களாய் சிரித்தன‌
குறிஞ்சியும் முல்லையும்
================================
மென்மையான பெண்ணைப்பார்த்து
பயப்பட்டது வண்ணப்பூக்கள்
பறித்துவிடுவாளோ என்று
================================
ஒவ்வொரு சொந்தக்காரனும்
ஒவ்வொரு நிறம்
ரோஜாக்கூட்டம்
================================
உனக்கும் எனக்கும் பாசம்
இப்பூவுக்கோ அனைவரையும் கவரும் வாசம்
மல்லிகை
=================================

+குறும் பா காதல் தவிப்பா - 11+

அவளும் நோக்கினாள்
அவள் அண்ணனும் நோக்கினான்
காதல் முடிந்தது
==============================
போறாடித்தான் பெறமுடிகிறது
விடுதலையை இல்லை
காதலை இளசுகளுக்கு
==============================
கண்ணாடி வாங்க கடைக்குப்போனாள்
ஏழை இளம்பெண்
காதல் வந்தவுடன்
==============================
அம்மாவையும் அப்பாவையும்
பிரித்தே விட்டது
காதல் கல்யாணம்
==============================
காதல் கனவுகளும்
பெரும் தொல்லையே
திருமணத்திற்கு பின்பு
==============================
இதில் விழும்போது
எவருக்கும் வலிக்காது
காதலில்..........
==============================

+குறும் பா போதும் வரேம்பா – 12+

மலையடிவாரத்திலே
ஒளிந்துகொண்ட திருடன்
அந்திமாலை சூரியன்
=========================
பல அணிகலன் அருகிருந்தும்
எதுவும் அணியாமலேயே
நிலாப்பெண்
=========================
ஒளியைக் கொடுக்கின்றான் சரி
நிழலை எங்கிருந்து கொடுக்கின்றான்
சூரியன்
=========================
இருட்டிய பின்பு
மறுபடி உதித்தான் சூரியன்
கவிஞனின் சிந்தனையில்
=========================
வெள்ளைப்புடவையில்
கண் மையை அப்பிவிட்டாள்
கார்மேகம்
=========================
வானிற்கும் பூமிக்கும்
திடீர் பாலம் போட்டான்
மின்னல்
=========================

((எனக்கு பிடித்த எனது குறும்பாக்களின் தொகுப்பு))

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Aug-14, 6:27 pm)
பார்வை : 191

மேலே