மனம் எனும் அதிசயம்
மனம்
ஒரு அதிசய ஆடை.
துவைத்து அலசி
பிழிந்து உலர்த்தி
பெட்டிபோட்டு
மடித்துவைத்த
மறுகணமே
அழுக்காகும்.
வெளுப்பதிலேயே
விரயமாகும் காலம்.
கிழியும்வரை
அழுக்காகும்.
கிழிந்தபின்
அணிந்துகொள்ள
அழுக்குச்சேராது
அழகு மிகவாகும்.
மனம்
ஒரு அதிசய சமையற்கூடம்.
எப்பொழுதும்
எரியும் அடுப்பு.
எதையுண்டாலும்
அடங்காப் பசி.
கழுவி நறுக்கி
துருவி அரைத்து
உலையிட்டு
உணவாக்கி
உண்டு கழுவி
சமைத்துச் சமைத்தே
கழிகிறது காலம்.
அடுப்பெரியும்வரை
பசியிருக்கும்
அடுப்பை யெரித்துவிட
அடங்கிடும் பசி.
மனம்
ஒரு அதிசய பாதை.
நீண்டும் குறுகியும்
வளைந்தும் பிரிந்தும்
வட்டமாயும்
வகைதொகையற்ற பாதை.
முன்னும் பின்னும்
நகரும் பாதையில்
இலக்கை மறந்து
நடந்தே கழியும் காலம்
நடக்க நடக்க
நீளும் பாதை.
நடத்தல் நிறுத்த
இலக்கையடையும்.
மனம்
ஒரு அதிசய கடிகாரம்.
நான் எனும் சாவியால்
முடுக்க முடுக்க ஓடும்
முன்னும் பின்னுமாய்
நேரம் காட்டும்.
குறிப்பறிந்தும் ஓடும்
விரும்பும் நேரம் காட்டும்.
சாவியைத் தொலைத்திட்டால்
சடுதியில் நின்றுவிடும்.
மனம்
ஒரு அதிசய திசைகாட்டி.
ஆசைத்திசை மட்டும்
எப்பொழுதும் காட்டும்.
காட்டுந்திசை போகச்சொல்லி
கட்டாயப் படுத்தும்.
மூடிவைத்துவிட
முடிந்துவிடும் குழப்பம்.
திசைகள் தெளிவாக
இசைவாகும் பயணம்.