பேசும் மழைத்துளி

கார்மேகங்களுக்கு உள்
உறைந்து கொண்டிருந்தேன்
குளிர்க் காற்று வீசி
நீர் இல்லா வானில்
நீந்தி வந்தேன்
அடையும் இடம் தெரியாது
சில தெரியாமல் இருத்தலே நன்று
எங்கும் விழலாம்
காட்டிடை பொந்திடை விழலாம்
மலையின் உச்சியில் விழலாம்
மென் இதழ் மலரிலும் விழலாம்
பளிங்கு நதியிலும் விழலாம்
வயல் என்ற கருப்பையிலும் விழலாம்
இறைவனை ஆராதிக்கும் கிணற்றிலும் விழலாம்
பாலைவனத்திலும் விழலாம்
கழிவுநீர் பாதையிலும் விழலாம்
வந்த இடத்திற்கே மீண்டும் செல்லலாம்
விழுவதும் அடைவதும்
என் செயல் அல்ல
இயற்கையே எல்லாம்
உன் செயல் அன்றோ
வீழ்ச்சியும் எழுச்சியும்
பேர் உண்மையின் நிலைபாடு