நானறிந்த கவிஞரெல்லாம்
நானறிந்த கவிஞரெல்லாம் முரண்பாடுகளின் மொத்த உருவமே...
உணர்ச்சி பிராவகமே
அவர்கள் எளிதில் ஏமாறுபவர்களாகவும்
ஏமாற்றத்தை தாங்க
இயலா மெல்லிய
மனத்தினராகவுமே இருப்பது வியப்பு
உறவு சிக்கலோடு உணர்வு சிக்கலிலும்
சிக்கி தவிக்கும் அவர்கள்
அய்யகோ பாவம்...!
ஏற்கவும் விரும்பாமல்
இகழவும் துணியாமல்
வீரம் கொண்ட கோழைகளாய் ஏனோ?
சட்டென கவி புனையும் அவர்கட்கு
சட்டென முடிவெடுக்க இயலாது
பொய்யுரைக்கும் இடத்தில்
மெய்யுரைத்து
மெய்யுரைக்கும் இடத்தில்
பொய்யுரைத்து
வளைய வேண்டிய இடத்தில் நிமிர்ந்து
நிமிர வேண்டிய இடத்தில் வளைந்து
வாயால் கெடும் தவளைகள்
வாழத் தெரியா பாவிகள்
இலக்கியம் பேசி
இலக்கணம் பேசி
தலைக்கணம் கூடி
பொருள் கணம் இழக்கும்
அப்பாவிகள்
மனைவி மதியாள்
பிள்ளைகள் வசை பாடும்
னண்பர்கள் துதி பாடுவார்கள்
காதலி கரம் பிடியாள்
பின்னே.... பிறந்த நாள் பரிசாக
ஒரு கவிதையை கொடுத்தால்?
இழவு வீட்டில்சிரிக்கவும்
கல்யாண வீட்டில் அழவும்
செய்யும் வித்தியாச சிந்தையே
அவர்கள் போக்கு....
வயிறு பசிக்கு
கவிதை புசிக்கும்
ஏழை கவிஞனை
எப்படி ஏற்கும் சமூகம்.....
கற்பனை வானில்
கவிதை குதிரை பூட்டி
சவாரி செய்யும் இவர்கள்
நிதர்சனம் அறியார்...!
பொருளீட்டும்
விந்தையை புரியார்...
வீணராய் காட்சி தந்து
விடுகதையாய் முடிந்திடுவார்....!