விடியல் வந்திட இருளும் விலகும்
ஒடிந்த உள்ளத்தை ஒன்றாய் இணைத்து
>>>>ஒட்டிட முடியுமோ செல்லக் கிளியே ?
இடியாய்த் தாக்கும் துன்பங்கள் தொடர்ந்தால்
>>>>இன்பம் வருமோ செல்லக் கிளியே ??
நொடிக்குள் நூறு சலனங்கள் மனதை
>>>>நொந்திடச் செய்யும் செல்லக் கிளியே !
வடிக்கும் விழிகள் வஞ்சக சூழ்ச்சியால்
>>>>வதனமும் வாடும் செல்லக் கிளியே !!
குடிக்கும் மனிதன் திருந்த மறுத்தால்
>>>>குடும்பம் குலையும் செல்லக் கிளியே !
அடிதடி சண்டை அடிக்கடி நடந்தால்
>>>>அமைதி விடைபெறும் செல்லக் கிளியே !!
பிடித்த வாழ்க்கை அமையா விட்டால்
>>>>பிறவியும் சாபமே செல்லக் கிளியே !
துடிக்கும் இதயம் தன்பணி முடித்தால்
>>>>துக்கமே இல்லத்தில் செல்லக் கிளியே !!
படிக்கும் மனதில் அறியாமை அகன்று
>>>>பக்குவம் பெருகும் செல்லக் கிளியே !
முடியும் என்ற நம்பிக்கை இருந்தால்
>>>>முயற்சி கைகூடும் செல்லக் கிளியே !!
வெடிக்கும் பட்டாசு ஒளியில் மகிழ்ச்சி
>>>>வெள்ளம் பொங்கும் செல்லக் கிளியே !
விடியல் வந்திட விலகிடும் இருளும்
>>>>விரக்தி ஏனடி செல்லக் கிளியே ....!!!

