விதி காட்டிய வழி
வாழ்க்கை என்றால் என்ன?
வாழ்வது என்றால் என்ன?
வசந்தம் என்றால் என்ன?
வலி என்றால் என்ன?
இவை என்னை வாராவாரம்
வந்து வருத்தும் சில வினாக்கள்....!
காலம் காலமாய் நான் முயன்றும்
விடை கண்டறியமுடியா வினாக்கள்....!
எனக்கும் வெற்றிக்கும் இடையே பெரும்
வெற்றிடத்தை தோற்றுவிக்கும் வினாக்கள்....!
மதிப்பெண் அதிகமாய் வாங்கியும் என்னை
மக்கு பெண் ஆக்கிய வினாக்கள்....!
வசந்தமும் வலியும் இரண்டற கலந்தது
வாழ்க்கை எனில்
ஒவ்வொரு வசந்தமும் என்ன
வலிகளின் வழிகாட்டியா?
வசந்தம் காணும் ஒவ்வொரு நொடியும்- வரும்
வலியை எண்ணியும் எமை வதைத்தல் வேண்டுமா?
எனில் வசந்தத்தில் வரும் ஆனந்தத்தின்
அளவை அல்லவா அது குறைக்கப்போகிறது?
ஆக வலியின்றி வசந்தம் தரும் வாழ்க்கை தான்
உலகில் வலியதாய் நிலை பெறுமா?
எண்ணற்ற கேள்விகள் என் மனதுள்
வாரி வாரி இறைக்கப்பட்டன.
ஏனோ விடைகள் மட்டும் வெறும்
வங்குரோத்து நிலையை அடைந்தன?
முடிவு ஒன்றை கண்டேன் ஈற்றில்.
எல்லாம் விதி வழியே
முயற்சியே நம் கையில்
காலத்தை பற்றி எண்ணி
கலங்குதல் பெரும் தவறாகும்
எதிர் காலமும் இறந்த காலமும்
எல்லோருக்கும் உண்டு.
எனவே
நிகழ் காலத்தில் வாழ்வதே என்றும் நிஜமான இன்பம்..!