மெழுகுவர்த்தி

ஒளிக் கர்ப்பத்திலிருந்து
உருப்பெற்ற குழந்தையே !
சூரியக் குடும்பத்தின்
தூரத்து சொந்தமே!

இங்கே மனிதர்கள்
தங்கள் பிறந்தநாளை மட்டும்
கொண்டாடுவதில்லை - அங்கே
உன்னையும் ஏற்றிவைத்து
உன் இறந்தநாளையும்
கொண்டாடி விடுகிறார்கள் !

ராத்திரி ரகசியங்களில்
நீ அணைக்கப்படுகிறாய்
ஏன் தெரியுமா ?
சந்தோஷமான நேரத்தில்
நீ அழுதுகொள்கிறாயாம்

நீ எப்போது மனிதர்களை
மகன்களாகப் பெற்றெடுத்தாய் ?
உன் தலையில்
கொள்ளிவைக்கிறார்களே !

உலக வரலாற்றில்
உனது பிரசவம் மட்டுமே
ஒருமுறை கூட
சுகப்பிரசவமாய் இருந்ததில்லை
ஏனெனில்
ஒளிக்குழந்தையைப்
பெற்றெடுக்கும் போதெல்லாம்
நீ இறந்துகொண்டே
இருக்கிறாயே !

கடவுளை நினைத்து
உருகுவதாகச் சிலர்
பொய் சொல்வார்கள்

உண்மையில்
நீ மட்டுமே உருகி நிற்கிறாய்
கடவுளின் முன்னிலையில்

உன்னைப் படைத்தவன்
ஒருவகையில் புத்திசாலி
ஏனெனில்
இருட்டில் தான்செய்யும் தவறுகளுக்கு
சாட்சிசொல்லக் கூடாதென்று
உன்னை ஊமையாக்கி
வைத்திருக்கின்றான்

உன்னைப் படைத்தவன்
தரத்தில் உயர்ந்துவிட்டான்
ஆனால்
அவனைவிட நீ
குணத்தில் உயர்ந்துவிட்டாய்
ஏனெனில்
இந்த உலகத்தில்
நீ மட்டுமே
உன் விழியால்
பிறருக்காக அழுகிறாய்

எழுதியவர் : ஜின்னா (3-Sep-14, 10:31 am)
Tanglish : meluguvaththi
பார்வை : 356

மேலே