ஒளி கொடுத்த கதிரவன்களே

ஒளி கொடுத்த கதிரவன்களே..
வழி காட்டிய உலகங்களே..
ஒருமைகளை உவமைக்காக
பன்மையாக பாடுகின்றேனோ?
அழகாய் நீவீர் சொல்லிய
இலக்கணங்கள் மறந்தேனோ..?
தலைக்கனம் இல்லா உங்களை பாட
இலக்கணம் உடைப்பதில் தவறில்லை..
தான் பார்த்து வளர்ந்த பிள்ளைகள்
வான் போல உயர்வதை கண்டு
வீண் பொறாமை கொள்ளாமல்
ஊன் போல் தினம் அறிவூட்டிய
நாட்கள் எண்ணி பெருமை கொள்ளும்
அன்பு நெஞ்சங்கள் உங்களுடையது..
பாதையில்லாமல் பயணமில்லை
காதையில்லாமல் காவியமில்லை
காதையோடு பாதையும்
காவியம் போல் வாழ்க்கை பயணமும்
கற்று தந்தீர்கள்...
கட்டிய தேர்வு தாள்களை
கட்டுக்கட்டாய் கொண்டு சென்று
இட்ட மதிப்பெண்கள் எல்லாம்
இன்று மதிப்பாய் மாறியது எங்களுக்கு..
ஊட்டிய அறிவெல்லாம்
உயிரோடு கலந்தது..
தேற்றிய வார்த்தைகளில்
தோல்விகள் தொலைந்தது..
தேன் தமிழ் கற்றபோது
செவிகள் நிறைந்தது..
அறிவியலும் பாலியலும்
ஆங்கிலமும் அரசியலும்
கணிதமும் கணிப்பொறியும்
கட்டுரையும் கவிதைகளும்
இலக்கணமும் இலக்கியமும்
கதைகளும் காவியங்களும்
இவைகளோடு வாழ்க்கையும்
கற்றதெல்லாம் உங்களிடம்..
பெற்றதெல்லாம் உங்களிடம்..
பட்டம் வாங்கி பட்டமாகி
வானிலே பறக்கிறோம்..
ஏற்றி விட்ட உங்களை
என்றும் நாங்கள் மறந்திடோம்..
இதயம் கனிந்த இனிய
ஆசிரியர் தின வாழ்த்துக்களுடன்
ஆசியும் வேண்டிடும்
உங்கள் மாணவன்..