ஜன நியாயகம்

வானத்தில் இருந்து
வந்தது ஒரு சிலந்தி
வசதியாக வலைப்பின்ன
நெஞ்சில்..

வாழ ஆரம்பித்த அது
தான் இறங்கிவந்த நூலேணி வழியாக
எனது சுவாசத்தை
ஏற்றி அனுப்ப முயலுகிறது...
முக்கலும் முனகலுமாய்த்
திக்கித் திணறியபடி நான்...

இறந்துபோன
பகுத்தறிவுச் சிலந்தியொன்றின்
கூடாக எனது மூளை...
ஊசலாடியபடி...

எங்கேயோ இருந்து
சிறு புள்ளியாய் ஒரு வெளிச்சம்..
இயேசுவைக் காட்டவந்த
விடிவெள்ளியாகக் கூட இருக்கலாம்...

புரியாத ஒரு புதிர்
புரிவது போலவும்
புரிந்ததுபோல் தெரிந்த ஒரு பதில்
மறைவது போலவும்..
கனவுக்கும் நனவுக்கும் இடையே
ஒரு போராட்டம்..

போராட்டம் என்றேனா
வாழ்வதற்கா
இல்லை
சாவை ஒத்திவைக்கவா
இந்த ஒத்திவைப்புப் பிரேரணை
இன்னும் எவ்வளவு நாளைக்கு

ஜனங்கள் தள்ளி வைப்பதா
ஜனங்களைத் தள்ளி வைப்பதா..
இது எந்தவகை ஜனநாயகம்!
இது எந்த வகை ஜன நியாயகம்?

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (6-Sep-14, 9:12 pm)
பார்வை : 68

மேலே