+குறை கூறும் உலகம்+

குறை கூறி குறை கூறி
நிறை காண்பதென்ன‌!!

பிறை கூட குறை தானே!
அது அழகில்லையா என்ன?

மழலைப்பேச்சு கூட குறை தானே!
அது இன்பமில்லையா என்ன?

பல் விழுந்த பாலகனின்
முகம் கூட ஒரு அழகே!

சிலர் முகத்தில் திருஷ்டியாய் வீற்றிருக்கும்
கறு மச்சம் கூட ஒரு அழகே!

குறை கண்டு குறை கண்டு
சாதித்ததென்ன!!

எனக்கு நீ தப்பு!
உனக்கு நான் தப்பு!
எனக்கும் உனக்கும் அவன் தப்பு!
அவனுக்கு எவன் தப்பு?
என வாழ்வில் தப்பு சொல்லியே
ஓடுது ஓட்டம்!

உன்னைச் சார்ந்தவர்களெல்லாம் தப்பு!
எனவே நீயும் தப்பு!
உனக்கு வைக்கப்போறேன் ஆப்பு.. என‌
உருட்டுக்கட்டையை தூக்கிக்கொண்டு
அவரவர் சொந்தங்களையே துரத்திக்கொண்டுள்ளது
ஒரு கூட்டம்!

சிலரின் பார்வையில் தப்பானது
சிலரின் பார்வையில் சரியாகுது
இதில் யார் சரி யார் தவறு என‌
முடிவது செய்வது யார்?

சிறு சிறு குறைகளை மன்னிப்போம்!
மன்னிக்க முடியாத குறைகளை மறப்போம்!
மற்றவரின் குறை காண்பதிலேயே
நேரத்தைக் கடத்தினோமானால்
நமது குறை நம் கண்ணில்
படாமலேயே போய்விடும்!

அது பெரிதாய் வளர்ந்து
நம்மை விழுங்கும் நேரத்தில்
நம்மால் விலகவும் முடியாது!
விலக்கவும் முடியாது!

நம்மை தின்று அது
ஏப்பம் விட்டு போய்விடும்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Sep-14, 7:04 am)
பார்வை : 2430

மேலே