+நிலா நட்சத்திரம் வானம் வானவில் மேகம் கதிரவன்+

+நிலா  நட்சத்திரம் வானம் வானவில் மேகம் கதிரவன்+

உலவிடும் வானில் உல்லாச இரவில்
களவிடும் மானிடர் கண்ணை ‍- பலருக்கு
கவிதரும் காதல் ரசம்தரும், ஆதலால்
ஆவியாய் கலந்திட்ட நிலா!

மின்னிடும் பூக்களாய் மீட்டிடும் பாக்களாய்
தன்னிடம் சிறப்பாக தவித்திடும் - என்னிடம்
தினம்தினம் பேசியே தித்திப்பு தந்திடும்
மனதினை கவர்ந்த,நட் சத்திரம்!

நீலமாய் காட்சி நீளமாய் ஆட்சி
நிலம்தாண்டி இதனதன் நீட்சி - பலவண்ணம்
சிலநேரம் மழைவர‌ சிந்திடும், அழகான‌
கோலமாய் அந்தரத்திலே வானம்!

வெயிலுடன் மழைபெய்ய வெளிவரும் புதிதாய்
மயில்வண்ண பெண்ணாகி மகிழ்ந்து - குயிலுக்கு
எதிரோநீ கருவண்ணம் ஏனில்லை என்பவர்க்கு
பதிலென்ன சொல்லுமோ வானவில்!

பஞ்சுபோல் மிதந்து பலர்மனதை கவர்ந்து
நெஞ்சினை நிறைத்திடும் நிதமும் - தஞ்சமே
அளித்திடும் நீரையே அளித்திடும் மழையாக‌
களிப்பூட்டும் கண்கவர் மேகம்!

ஒளிபரப்பும் நாள்முழுதும் ஒளிந்திருக்கும் மேகம்பின்னே
விழிதிறக்கும் காலையிலே வீடுவரும் - தளிர்களுக்கு
சக்திதந்து வாழ்வளித்து சகலருக்கும் இயக்கம்தரும்
பக்திசெய்ய நிகரான கதிரவன்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Sep-14, 1:28 pm)
பார்வை : 645

மேலே