உன் காதல்

உன்னையே என்னவனாய்
உருவகித்து விட்டேன்..
உன் நினைவுகளில் கூட
பிறர் விம்பம் காணச் சகிக்கவில்லை ..

உனக்கும் எனக்குமோ
ஏராளம் ஏற்ற இறக்கங்கள்..
உன்னை சேரும் நாள்
வாழ்வின் எந்தப் புள்ளியிலும்
தென்படவில்லை - என்றாலும்
உன்னவளென்றே எனக்குள்
பெருமிதம்!
என்னவனென்றே உன்னை
நினைப்பதில் உள்ளே
ஓர் சுகம்!

காதலை விடவும்
உன்னதமான உறவை,
உன் இரு விழிகள்
எனை உரசும் நொடி
உணர்கிறேன்!..
காமத்தை விடவும்
இனிமையான நெருக்கத்தை
உன் சுவாசச் சூட்டில்
அறிகிறேன்!

ஓய்வின்றி இயங்கும்
இதயமும்
இடைவிடாது துடிக்கும்
இமைகளும் ,
அறியாத தருணங்களில்
பல கதைகள் பேசிச் போகும்
உனதான ஞாபகங்கள்!

என் பிறப்புக்கும் இறப்புக்கும்
இடையிலான வாழ்விற்கு
அர்த்தம் சொல்ல வந்த
உன் காதல்,
இறப்புக்கு மட்டுமே கல்லறை
கட்டிப் போய்விட்டது!

எழுதியவர் : கவிப் பிரியை - Shah (7-Sep-14, 9:18 pm)
Tanglish : un kaadhal
பார்வை : 118

மேலே