கருத்திலே படைத்த கவி-11-09-14

211329-பழனிகுமார்.அவர்களின் கவிதைக் கருத்தின் மறு உருவம் இது.

இலக்கறியாத பயணம்-இது
இடறிவிழாத பயணம்.

கடந்ததை மறந்த பயணம்-இனிக்
காண்பன நலமாம் பயணம்!
கெடுதல்கள் நினையாப் பயணம்-பலர்
கிளையாய் உடன்வரு பயணம்!

பழுதுகள் இல்லாய் பயணம்-அதில்
பரவசம் கிடைக்கும் பயணம்!
முழுதும் அறவழிப் பயணம்-ஆயுள்
முழுதும் இனிக்கும் பயணம்!

பண்படப் பண்பட நடந்து-நான்
பயணிக் கும்,என் பயணம்!
புண்பட நடக்காப் பயணம் -நான்
பொழுதும் ரசிக்கும் பயணம்.

படிதொறும் அறிந்த பயணம்-நான்
பட்டுத் தெளிந்த பயணம்!
முடிவினை நினைக்காப் பயணம்-புது
விடிவே தினம்,என் பயணம்.

முழுதாய் இருக்கும் பயணம்-நீயும்
முயல்வாய்! தோற்கும் மரணம்!
=====

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (11-Sep-14, 10:34 am)
பார்வை : 171

மேலே