சிஷ்யன்
ஒருகுருவிடம் ஒரு சிஷ்யன் வேலை பார்த்தான். அவன் மிகவும் மரியாதை தெரிந்தவன். யார் வந்தாலும் எதைச் செய்தாலும் “திரு” என்ற அடை மொழி இல்லாமல் பேசமாட்டான். ஐயங்கார்கள் “திருக்கண்ணமுது” (பாயசம்?) என்று சொல்லுவது போல அஃறிணைப் பொருட்களுக்கும் கூட “திரு” போடுவான்.
குருவுக்குப் பெரிய எரிச்சல். அவனைக் கூப்பிட்டார். டேய், மடையா! இனி திரு என்று எதற்காவவது சொன்னால் உன்னை மடத்திலிருந்து தூக்கி எறிந்து விடுவேன் என்று கோபத்துடன் கூறினார்.
சிஷ்யன் பயந்து நடுங்கிக் கொண்டே “சுவாமி, இனிமேல் “திரு” என்பது வாயிலிருந்து வரவே வராது ,இது சத்தியம் ! என்று சொல்லிப் போய்விட்டு வேலைகளைச் செவ்வனே செய்து வந்தான்.
அன்று இரவு குருவின் ஆஸ்ரமத்தில் “திரு”டன் வந்து எல்லா பொருட்களையும் தூக்கிச் சென்றான. இதைப் பார்த்த சிஷ்யன் எல்லோரையும் எழுப்புவதற்காக,
“டன் வந்து “டிக்” கொண்டு போய்ட்டான்”,
“டன் வந்து டிக் கொண்டு போய்ட்டான்”,”
டன் வந்து டிக் கொண்டு போய்ட்டான்”,
என்று பலமுறை கூச்சலிட்டான். தூக்கத்தில் எழுந்த எல்லோருக்கும் மகா கோபம்.
ஏதேனும் கெட்ட கனவு கண்டாயா? ஏன் உளறுகிறாய்? போய்த்தூங்கு என்று விரட்டினார்கள். அவர்களைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று நடந்ததைக் காட்டினான். அப்போதும் அவனுக்கு செமை அடிதான் கிடைத்தது. “சனியனே, வாயைத் திறந்து ஒழுங்காகக் கூறியிருந்தால் திருடனைப் பிடித்திருப்போமே” என்றார்கள்.
அவனோ பய பக்தியுடன் குருவின் உத்தரவை நினைவு படுத்தினான். குரு இனிமேல்– திரு– சொல்லக் கூடாது என்றதால் நான் ‘’திரு’’டன் வந்து ‘’திரு’’டிக் கொண்டு போய்விட்டான் என்பதில் திரு எல்லாவற்றையும் விட்டுவிட்டேன் என்றான்!!!!