வஞ்சி விருத்தம்
விவேக்பாரதியின் 'காப்பாள் சக்தி' என்ற வஞ்சி விருத்தப் பாடலை வாசித்தேன்.
விவேக்கை வாழ்த்துமுன் வஞ்சி விருத்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும்
என்று அறிய விரும்பி வலைதளத்தில் தேடினேன். கிடைத்ததைத் தருகிறேன்.
வஞ்சி விருத்தம் அளவொத்த சிந்தடிகள் நான்கு கொண்டது.
உதாரணம் 1:
இது புளிமா தேமா தேமாங்காய் என்னும் வாய்பாட்டில் அமைந்தது.
பொழுது போக்காய் இல்லாமல்
எழுதும் பாக்கள் எல்லாமும்
அழுது வாழ்வோர் நெஞ்சத்தின்
பழுதை நீக்கின் நன்றாமே
உதாரணம் 2:
விளம், விளம், காய் என்ற வாய்பாட்டிலான கி.சிவகுமாரின் வஞ்சி விருத்தப் பாடல்:
என்பது பெண்என எழுச்சியுறும்;
வன்கலும் புணைஎன மிதக்கலுறும்;
முன்சுவை மகவினை முதலைதரும்;
தென்தமிழ்த் திருமுறைச் செயலாலே;
(என்பது = எலும்பானது; கலும் = கல்லும்; சுவை மகவு = விழுங்கிய குழந்தை)
உதாரணம் 3:
விளம் விளம் தேமா என்ற வாய்பாட்டிலான விவேக்பாரதியின் வஞ்சி விருத்தப் பாடல்:
சக்தியின் பொற்பதம் தன்னை
பக்தியே மிக்கநெஞ் சோடு
இக்கணம் தொட்டுநாம் சேர்வோம்
முக்திதந் தேநமைக் காப்பாள்!
வாயினால் வாழ்த்துரை செய்தே
தூயிரும் மென்மலர் ஒத்த
தாயிவள் நாற்கரம் காண்போம்
நோயிலா தேநமைக் காப்பாள்!
இதுபோல எண்ணற்ற வாய்பாடுகளில் இதனைப் புனையலாம்.