என் உயிரில் கலந்த இசையே சஹானா கட்டிக் கரும்பே கண்ணா

என் உயிரில் கலந்த இசையே சஹானா  கட்டிக் கரும்பே கண்ணா

என் உயிரில் கலந்த இசையே சஹானா............
கட்டிக் கரும்பே கண்ணா........

என் பள்ளிப் பருவத்தில் ஒருநாள் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள மைதானத்தில் வீடியோ வைத்து சினிமா படம் திரையிட்டார்கள்! அப்பொழுதெல்லாம் எங்கள் ஊரில் யார் வீட்டிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லை! அன்று மூன்று படங்களில் ஒன்று சம்சாரம் ஒரு மின்சாரம்! என் பெற்றோர் எங்களை சினிமா பார்க்க அனுமதிக்க மாட்டார்கள் நாங்கள் அவர்கள் முன் மண்டியிட்டு மன்றாடுவோம்! சினிமா பார்த்தால் பிள்ளைகள் கெட்டுப்போய் விடுவார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை! அவர்கள் அன்று எங்களை கண்டிப்புடன் வளர்த்தது நல்லதென்று இன்று தோன்றுகிறது அன்று தோன்றவில்லை! ஒரு வேளை பல திரைப்படங்களைப் பார்த்திருந்தால் என் பாதை நிச்சயம் மாறிப் போயிருந்திருக்கும்! ஏனென்றால் பல திரைப்படங்களின் மூலக் கதைகள் என் வாழ்வில் நிஜமாகிப் போனதே காரணம் அப்படி நிஜமாகிப் போன பாடல் பற்றின தொகுப்பு தான் இது!

வழக்கம் போல அன்றும் என் பெற்றோரின் காலில் விழுந்து மன்றாடி ஆயிரத்தெட்டு கண்டிஷன்களுக்கு தலைவணங்கி ஒருவழியாக சினிமா பார்க்கப் போனோம் என் தம்பி தங்கை சேர்ந்து! மூன்று படங்களில் ஒன்று சம்சாரம் ஒரு மின்சாரம் மற்ற இரண்டின் பெயர்கள் நினைவில் இல்லை! ஒரு குடும்பப் பாங்கான படம்! கதை மனதில் நின்றது யார் யார் நடித்தது யார் டைரக்ஷன் என்பதெல்லாம் அன்று தெரியவில்லை! நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த நேரம் அது! பெரிதாய் மனதில் எதுவும் பதியவில்லை! கதையில் எதோ கொஞ்சம் பதிந்தது அவ்வளவு தான்!

நான் பத்தாம் வகுப்பில் படிக்கும் பொழுது எங்கள் பள்ளியில் வாரம் தோறும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இறுதி வகுப்பு நேரத்தில் இலக்கிய மன்றம் நடக்கும்! அதுபோல் ஒரு வெள்ளிக் கிழமையில் என் வகுப்பு தோழியொருத்தி ஒரு பாடல் பாடினாள்! அவள் அதிகமாக யாரிடமும் அவ்வளவு பேசமாட்டாள் அதற்காக அவள் அமைதியுமில்லை! ஆனால் அவள் பாடல் பாடுவாள் என்று எங்கள் யாருக்குமே தெரியாது திடீரென அவள் பாடிய பாடல் "கட்டிக் கரும்பே கண்ணா" என் வகுப்பு மாணவ மாணவிகள் எல்லோரும் ஒரு நிமிடம் வாய் பிளந்து விட்டோம் காரணம் அவள் அவ்வளவு அழகாய் பாடிவிட்டாள் இவளுக்குள் இவ்வளவு திறமையா என ஒவ்வொருவர் மனதிலும் கேள்வி? எங்கள் வகுப்பில் நான் உட்பட பலர் எங்கள் பள்ளி கொயரில் இருந்ததால் எங்களுக்கு யார் யார் பாடுவார்கள் என்ற பட்டியல் அத்துப்படி ஆனால் அன்று அவள் பாடியது எங்களுக்கு பெரிய கேள்வியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது! அவளின் பெயர் இன்று நினைவில் இல்லை எதோ மேரி என்று தொடங்கும் பெயர் என்று மட்டுமே நினைவிலிருக்கிறது! ஆனால் அவள் பாடிய பாடல் இன்றும் நினைவில் நிற்கிறது! அவள் எங்கள் வகுப்பின் ஹீரோயின் ஆகிப் போனாள் பல நாட்களுக்கு! பின் அவளிடம் அப்பாடலின் லிரிக்ஸ் வாங்கி அடிக்கடி பாடிப்பழகினேன்! இன்றும் அவ்வரிகள் மறக்கவில்லை......

ஏனோ என் அன்னை எனது பள்ளிப் படிப்பு முடிந்தவுடனே என்னை திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள்! மறுவருடமே என் முதல் குழந்தையான என் மகனுக்கு நான் தாயானேன்! ஒரு குழந்தை இன்னொரு குழந்தையப் பெற்றெடுத்தது போல் தோன்றியது என் மனதிற்கு! பிறந்த நேரத்தில் என் மகன் ரோஸ் கலரில் காட்சியளித்தான் இன்றும் ரோஸ் கலர் என்றால் என் மகனை மட்டுமே நான் நினைவில் கொள்வேன்! என் மகள் ஏதாவது குழந்தை அழகாய் கலராய் இருக்கிறது என்று சொன்னாலும் நான் அண்ணனைப் போல் வராது என்று பெருமை கொள்வேன்! காக்கைக்கும் தன குஞ்சு பொன் குஞ்சல்லவா? ஏனோ என் மகன் பிறந்த வேளைகளில் அவன் அழுதால் அவனுக்கு பசியமர்த்துவதொடு சரி மேற்படி அவனை தூக்கவோ கொஞ்சவோ என் மனம் இடம் தரவில்லை காரணம் என் மகன் பெண்ணாய் பிறக்கவில்லையே என்ற வருத்தம்! எனக்கு பெண் குழந்தைஎன்றால் கொள்ளைப்பிரியம்.....

அவன் பிறந்த வருடம் 1995 நவம்பர் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிறைய வருடங்களுக்குப் பிறகு பொதுத் தேர்தல் நடந்த நேரம் என் கணவர் துணை ராணுவப் படையில் பணி புரிந்ததால் அவர் தேர்தல் பணிக்காக காஷ்மீர் மாநிலம் சென்றிருந்தார்! அவர் மகன் பிறந்து மூன்று மாதங்கள் அவனை பார்க்கவேயில்லை! அப்பொழுதெல்லாம் இதுபோல் நெட் வசதிகள் இருந்திருக்கவில்லை! எங்கள் வீட்டில் மட்டுமே தொலை பேசி இருந்தது! குழந்தையை அழவைத்து அவன் அப்பாவிடம் பிள்ளையை பேச வைப்போம்! அப்பொழுது அவர் மனம் எவ்வளவு துடித்திருக்கும் என்று சொல்லத் தெரியவில்லை......

எதோ என்னுடைய போறாத காலம் என் கணவர் குடும்பத்திலிருந்து யாரும் என் குழந்தையையோ என்னையோ பார்க்கவரவில்லை இத்தனைக்கும் எங்களுக்கு பெரியவர்களால் நிச்சயிக்கப் பட்ட திருமணம்! என்ன மனக்கசப்பு என்று தெரியவில்லை! என் பெற்றோர் எங்களை எவ்வளவு தான் கவனித்துக் கொண்டாலும் எதோ தனிமையில் விடப்பட்ட ஒரு உணர்வு உள்ளத்திற்குள்! பல நாட்கள் என் குழந்தையைக் கையில் வைத்துக் கொண்டு அழுவேன்.... அவனை முதலில் எனக்குப் பிடிக்கவேயில்லை ஆனால் சிறிது நாட்கள் கழிந்தவுடன் என் மகன் என் முகம் பார்த்து சிரித்தான் அப்பொழுதான் நீ என் மகனல்லவா என்ற உணர்வு தோன்றியது! அதுவரை அவன் பசிமட்டுமே ஆற்றத் தெரிந்த எனக்கு என் மகன் என் முகம் பார்த்து சிரித்த அக்கணம் நான் ஒரு தாயான சந்தோஷத்தை அனுபவித்தேன்.....

நாங்கள் வசித்தது ஒரு சிறிய மலைகிராமத்தில் எல்லோரும் என்னிடம் உன் கணவர் வரவில்லையா? கணவர் குடும்பத்தார் வரவில்லையா என கேட்கும் பொழுது எனக்கு அழுகையைத் தவிர வேறொன்றும் வராது! அப்பொழுதெல்லாம் என் மகனை என் மடியில் வைத்துக் கொண்டு "கட்டிக் கரும்பே கண்ணா! கன்னம் சிவந்த மன்னா!" என்ற பாடலை பாடிக்கொண்டிருப்பேன்... பல நாட்கள் நாங்கள் இருவரும் சேர்ந்து அழுததாய் ஞாபகம்! அப்பாடலைக் கேட்டுக் கொண்டே அவன் தூங்கிப் போவான் அவனுக்கு இப்பாடல் தான் அடிக்கடி தாலாட்டு! அவனை கீழே நாங்கள் போட்டதில்லை! அவன் தூங்க மாத்திரம் பல பாடல்களை நான் தாலாட்டாய் பாட வேண்டும்! தூங்கி விட்டான் என்று நினைத்து மெதுவாய் தொட்டிலில் போட்டாலும் கழுத்தில் இறுக்கிப் பிடித்துக் கொள்வான் மெதுவாய் கரங்களை விடுவித்தால் உடனே விழித்து விடுவான்! அவன் தூங்கும் பொழுது நானும் தூங்கி அவன் விழிக்கும் பொழுது நானும் விழித்து அவன் என் மாடியிலிருந்து தானே இறங்கி விளையாடும் வரை காத்திருப்பேன் எனது வேலைகளை செய்ய! பல நேரம் இடுப்பில் வைத்துக் கொண்டு தான் அனைத்து வேலைகளும்!

அவன் பிறந்த நேரம் பொங்கல் பண்டிகையின் பொழுது எங்கள் ஊரில் பொங்கல் விளையாட்டுப் போட்டிகள் நடத்தினார்கள்! அதில் பலதரப்பட்ட போட்டிகள் நடக்கும்எங்கள் ஊர்க்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எல்லா போட்டிகளிலும் கலந்துகொள்வோம்! ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கும்! எங்கள் ஊரில் அனைத்தப் பிள்ளைகளும் தைரிய சாலிகள்! அதற்கு முதல் காரணம் என்னைத்தான் கூறுவார்கள்! எல்லா பெற்றோர்களும் அவர்கள் குழைந்தைகளிடம் என்னைக் காண்பித்து அக்கா மாதிரி பரிசு வாங்க வேண்டுமென்று கூறுவார்கள்! ஏனென்றால் எந்த போட்டிஎன்றாலும் முதல் பரிசு எனக்குத்தானே! என் மகன் பிறந்த பிறகும் கூட அன்று பேச்சுப் போட்டியும் பாடல் போட்டியும் நடந்தது! என் ஒருகையில் குழந்தையை வைத்துக் கொண்டு மறுகையில் பேப்பரையும் வைத்துக் கொண்டு பேச்சுப் போட்டிக்கு தயாரானேன்! எப்படியோ பேசியும் முடித்தேன்! அடுத்து பாடல் போட்டி பெயர் அறிவித்துவிட்டார்கள் நான் என்ன பாடல் பாடுவதேன தீர்மானிக்கவே இல்லை! மேடை ஏறியாகிவிட்டது என்ன பாட என்று ஒரு நிமிட யோசனை சட்டென்று நினைவிற்கு வந்த பாடல் என் மகனின் தாலாட்டு பாடலான கட்டிக் கரும்பே கண்ணா......

என் தங்கை கேட்டாள் அக்கா சமுதாய சீர்திருத்த பாடல் தானே பாடவேண்டும் நீ எதற்கு இதை பாடினாய் என்று? நான் சொன்னேன் இப்பாடலில் என்ன இல்லை கருத்தாழம் இல்லையா? சமுதாயத்திற்கு சொல்ல செய்தியில்லையா என்று? இதை நடுவர் ஒருவர் கேட்டுக் கொண்டிருந்தார்! என்ன நினைத்தார்களோ தெரியாது எனக்கே முதல் பரிசும் கொடுத்தார்கள்! அப்படி இப்பாடல் என்னோடும் என் வாழ்வோடும் என் மகனோடும் பின்னிப் பிணைந்து செயல் படுகிறது! லக்ஷ்மி அப்படத்தில் தன குடும்ப சூழ்நிலையை எண்ணி தன்மைகனுக்குப் பாடும் தாலாட்டாய் இப்பாடல் இருக்கும்! என் மகனுக்கும் இதுவே தாலாட்டாகிப் போனது.....

வைர முத்து என்ற அற்புத கவிஞன் அன்றே என் உள்ளத்துக்குள் எவ்வளவு லாவகமாய் நுழைந்திருக்கிறார்! அந்த தந்தையுமானவன் எப்படி தாயுமானவன் ஆகினான்? எத்தனை தாய்மார்களின் வாழ்வின் பின்னணிப் பாடலாய் இது ஒலித்திருக்கும் ? என் தாயுமனவனான வைரமுத்துவிற்கு நான் தலை வணங்குகிறேன்! இப்பாடல் வரிகளுக்காய்.......

இன்று இப்பதிவை நான் எழுதுவதாகாவோ இல்லை இப்பாடலை போஸ்ட் பன்னுவதாகவோ நான் நினைக்கவேயில்லை! ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மகனிடம் சாப்ப்பிட்டாயா என்று ஒரு கேள்வி போனில் கேட்கப் போய் என்னென்னவோ நினைவிற்கு வந்துவிட்டது இன்று எனது போஸ்டிங் என் மகனுக்காய் இருக்கவேண்டுமென தோன்றியது!

இது நான் என்ற பெருமையல்ல! இப்படி ஒவ்வொரு பாடலுக்குப் பின்னாலும் ஒவ்வொரு கதையிருக்கும்! ஒவ்வொரு பிள்ளைகளுக்குப் பின்னாலும் ஒவ்வொரு கதையிருக்கும்! உங்கள் பெற்றோரிடம் கேட்டால் சொல்வார்கள் ஆயிரம் கதைகள்! கதைகளல்ல நிஜங்கள்! பார்த்துப் பார்த்து வளர்க்கும் பெற்றோர்களை வளர்ந்த பின்னே அநாதை இல்லங்களுக்கு அனுப்பும் அவலங்களும் இங்கே தான் நிகழ்கின்றன! என்னைப்போல் தானே ஒவ்வொரு அம்மாக்களும் உங்களையும் வளர்த்தியிருப்பார்கள்! என் மனம் போல் தானே அவர்கள் உள்ளமும் துடிக்கும்! பாருங்கள் இப்பாடலை! கேளுங்கள் உங்கள் பெற்றோரிடம் நீங்கள் பிறந்த கதையையும் அவர்கள் உங்களை வளர்த்த விதத்தையும்.....

எத்தனைப் பிள்ளைகளுக்கு இப்பாடல் தாலாட்டாய் போனதோ தெரியாது...... இன்று என் மகனுக்கு இதுவே தாலாட்டு..... தூங்கடா செல்லமே பசிமறந்து.... என் கட்டிக் கரும்பே கண்ணா.... என் கண்ணில் வழியும் கண்ணீரை நீ படித்து முடித்து இச்சமுதாயத்தில் நல்ல குடிமகனாய் வாழ்ந்து தலை நிமிர்ந்து நின்று துடைப்பாயடா என்ற நம்பிக்கையில் நான்..... என் அன்பு மகனே இவ்வரிகள் மறுபடியும் உனக்காய்......

ஆரி ஆராரிரோ ஆரி ஆராரிரோ ஆரி ஆராரிரோ

கட்டி கரும்பே கண்ணா
கன்னம் சிவந்த மன்னா
நீ இங்கு வந்த நேரம்
சொந்தம் எல்லாம் தூரம்
ஏன் என்று கேட்க ஆள் இல்லை
வா என்று சொல்ல வாய் இல்லை

(கட்டி கரும்பே)

ஒப்புக்கு சொன்னேன் ஆராரோ
ஊமைக்கு சொந்தம் யார் யாரோ
பூ வைத்த நெஞ்சில்
தீ வைத்ததாரோ
உண்மையை சொல்ல வாராரோ
காளைக்கு தானே வீராப்பு
கன்றுக்கு ஏனோ பொல்லாப்பு
கன்றோடு பசு இன்று திண்டாடுது

(கட்டி கரும்பே)

சிப்பிக்குள் முத்து வந்தாலும்
அது சிப்பிக்கு சொந்தம் ஆகாது
நதியோடு போனால்
கரை உண்டு கண்ணே
விதியோடு போனால் கரை ஏது
கண்ணுக்குள் வெள்ளம் இப்போது
நாம் கரை சேரும் காலம் எப்போது
உன் தாய் பாலில் கண்ணீரை
யார் சேர்த்தது

............சஹானா தாஸ்

எழுதியவர் : சஹானா தாஸ் (15-Sep-14, 1:24 am)
பார்வை : 334

சிறந்த கட்டுரைகள்

மேலே