மரணித்த மரம்

அந்தக் காட்டில்
யாரோ மனிதர்கள் கதைக்கும்
ஒலி கேட்கிறது
எதையும் சட்டை செய்யாது
அது இன்னமும் சுவாசித்தபடியும்
தழுவுகின்ற காற்றை
சுத்தப் படுத்தியபடியும்
அசையாமல் நிற்கிறது.
கொப்புகளும் கிளைகளும்
குருவிகளின் சிரிப்பில்
தம்மை மறந்து நின்றவேளை
கோடரி ஒன்று குறி பார்க்கிறது.
குடலுள் பரவிய பதற்றம்
உச்சி வரை பரந்து செல்கிறது.
இலைகள் சல சலக்கின்றன
இறக்கப் போகும் உடலத்தின்
உறுப்புக்கள் ஒன்றன் பின் ஒன்றாக
பூமியை நோக்கி உதிரத்
தயாராக காத்திருக்கின்றன.
கூடுகட்டி வாழ்ந்த குடும்பங்கள்
குறிப்பறிந்து ஒலி எழுப்பின.
யார் காதிலும் அது வீழ வில்லை
ஆக்ரோஷமாக அதன் வைரத்தை
சுவை பார்த்துக் கொண்டிருக்கிறது
அந்த மின் அரிவாள் அங்கு எழும்
அவலக் குரலைக் கூடப்
பொருட் படுத்தாவாறு..
விருட்சத்திற்கும் விழுதிற்கும்
விசுவாசமான வேர்கள்
புதைந்து கிடக்கின்றன
இன்னமும் விவரம் புரியாமல்
தனக்கும் நிலத்திற்குமான கோணம்
சிறிது சிறிதாக குறைந்து
இறுதியில் சரிந்து குனிந்து
மண்ணை முத்தமிடுகிறது
அந்த ஆயிரம் காலத்து விருட்சம்
பூமியில் நிரப்ப முடியாத
துளையினை நிரந்தரமாக
தோற்றுவித்துக் கொண்டு..
அங்கே அந்த நிழல் தொலைத்த
வெளியில் அலுக்கோசுகள்
ஆர்ப்பரிக்கின்றன ஒரு
மரணதண்டனை நிறைவேற்றிய
பூரிப்பில்...

எழுதியவர் : சிவநாதன் (16-Sep-14, 1:59 am)
Tanglish : maranitha maram
பார்வை : 54

மேலே