விசாலாச்சி அம்மா

சந்தித் திருப்பம்
தாண்டி ஒலிக்கும்
சைக்கிள் மணிச்சத்தம்.
கண்ணில் ஏக்கம்கலந்த
எதிர்பார்ப்புக்களோடு
வாசலில் காத்திருக்கும்
விசாலாச்சி அம்மா.
எப்போதாவது வருடத்தில்
ஓரிரு நாள் அந்த
வீட்டு முகவரிக்கு வரும்
தன் ஒரேயொரு மகனின்
கடல் கடந்த கடிதத்துக்காக
ஒவ்வொரு காலையும்
திண்ணையில் காத்துக் கிடக்கும்
ஒற்றைச் சீவன்.

தம்பி கடதாசி ஏதும்?
இண்டைக்கு இல்லையம்மா.....
எனக்குத் தெரிந்த நாளில் இருந்து
இதே கேள்வி அதே பதில்
நெடு நாட்களின் பின்
விசாலாச்சி அம்மாவுக்கு
மகனின் தபால்.
சந்தித் திருப்பத்தில் சைக்கிள்
வரும்போதே வாசலில்
தெரியும் அந்த வதங்கிய உருவம்
இன்றுமட்டும் இல்லை ...
வேப்பம்பூ உதிர்ந்து
மூடிக் கிடந்த திண்ணை
வெறுமையாய் கிடக்க
வெளியே சிலர்
பேசும் ஒலியையும் மீறிச்
சைக்கிள் மணிச் சத்தம்.......
விசாலாச்சி அம்மா இல்லை
ஏதோ விபரீதம் ....

பேரக்குழந்தைக்குப் பிறந்த நாள்
கோயிலுக்கு அர்ச்சனை செய்யப்
போய் வரும்போது வழியில்
வேகமாக வந்த உந்துருளி
விசாலாச்சி அம்மா
உயரைக் காவு கொண்டு விட்டதாம்
யாரோ கதைப்பது அரை குறையாக
காதில் விழுகிறது.
கடிதத்தை இறுகப் பற்றியவாறு
அருகில் செல்கிறேன்


அழுகையினூடே அருகில் வந்த
அந்த நெருங்கிய உறவுக் காரர்
தபால் காரத் தம்பி
அந்த கடிதத்தை கொஞ்சம் படி
எனக் கூற
எத்தனையோ நாளாய்
ஆவலுடன் எதிர்பார்த்த
அவள் மகனின் கடித்ததை
நடுங்கும் விரல்களால் பிரித்துப்
படிக்கிறேன்
நாலு வரிகளில் அந்தக் கடிதம்....
"அன்புள்ள அம்மா
நலமா நாம் நலம்
ஊருக்கு வரமுடியவில்லை
வேலை வீடு பிள்ளைகள்
பொழுது போவது தெரியவில்லை
உங்கள் துணைக்கு யாரும் இல்லை
நீங்கள் விரும்பினால்
முதியோர் இல்லத்தில்
வருகிற மாதத்தில் இருந்து சேர்க்க
முயற்சி செய்கிறோம்."
இப்படிக்கு மகன்..

விசாலாச்சி அம்மா
சலனம் இன்றி
தூங்கிக் கொண்டு இருந்தாள்
சந்தித் திருப்பம்
சைக்கிள் மணி
இந்தக் கடிதம் இனி
எதுவுமே அவளுக்கு
தெரியப் போவது இல்லை

எழுதியவர் : சிவநாதன் (18-Sep-14, 1:48 am)
பார்வை : 143

மேலே