பைய தாங்க அண்ணே
விடுமுறை நாட்களை வீட்டில் கழித்து விட்டு கல்லூரி விடுதிக்கு பேருந்தில் சென்ற போது நடந்த சம்பவம் இது. நானும் என் சக தோழிகளும் நாகர்கோவில் செல்லும் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தோம். வழக்கம்போல நடத்துனர் "சரியான சில்லறை கொடுத்து டிக்கெட் வாங்குங்க" என எல்லாரிடமும் கூறிக்கொண்டிருந்தார். அதிகாலை நேரம் வேறு. சில்லரையின்றி வந்த அனைவர்க்கும் அர்ச்சனை. அர்ச்சனைகளுக்கிடையே "டிக்கெட் டிக்கெட்" என கூறிக்கொண்டு எங்கள் இருக்கைக்கு அருகில் வந்தார் நடத்துனர். சில்லறை இல்லா காரணத்தினால் எங்களனைவருக்கும் சேர்த்து பயணச்சீட்டுக்கான தொகையை என் தோழி ஒருத்தி கொடுத்தாள். மீதி சில்லறை உடனே கொடுக்க முடியாது என கண்டிப்பான குரலில் கூறினார் நடத்துனர். என் தோழியும் பிறகு வாங்கிக்கொள்கிறேன் என்பது போல கூற நினைத்தவள் "பைய தாங்க அண்ணே" என்று திருநெல்வேலி வழக்கு தமிழில் கூறிவிட்டாள். 'பைய' என்றால் பொறுமையாக/அப்புறமா எனும் அர்த்தம். அனால் இது நடத்துனருக்கு தெரியவில்லை. இவள் தனது பணப்"பை"யை கேட்கிறாள் என நினைத்துகொண்டு "சில்லறை இல்லைன்னு நா என்ன பொய்யா சொல்ல போறேன். என்ன தைரியம் இருந்தா நீ 'பை'ய கேப்ப" அப்படி இப்படின்னு இடைவிடாமல் அவர் திட்டிக்கொண்டே போக என் தோழி திரு திருவென விழித்துக்கொண்டிருந்தாள். மொழிப் பிரச்சனையில் முழி பிதுங்கியது. உடனே மற்றொருத்தி எழுந்து "அண்ணே!! பைய தாங்கன்னு அவ சொன்னது சில்லறைய பொறுமையா அப்புறம் வாங்கிக்குறோம் எனும் அர்த்தத்தில் தானே தவிர உங்க 'பை'யை குடுங்கன்னு அவ கேக்கல" என்று சொன்னாள். 'பைய' எனும் வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் இருப்பதறியாமல் தான் எட்டு கட்டையில் திட்டியதை நினைத்து அசடு வழிய சிரித்துக்கொண்டே சொன்னார் "சில்லறை பைய தாரேன் மா" என்று. இந்த நிகழ்வுக்குப் பின் இன்றளவும் பைய எனும் வார்த்தை கேலிக்குரிய ஒன்றாகிவிட்டது.