என்னோடு நீ-6

முதன்முறைவந்த கோபமே
வெட்கமாய் மாறிப்போன
அதிசயம் நீ...!
எட்டிஎட்டி எனைப்பார்த்து
சிரிக்கும் குழந்தையின்
விளையாட்டு நீ...!
பட்டுப்போன மரத்திலும்
புதிதாய் துளிர்த்த
பசுமை நீ...!
உயிராவிவெளியேறி உருவான
முகிலிலிருந்து சிந்திய
முதல்மழைத்துளி நீ...!
அத்தனை தவிப்புகளையும்
புரிந்துக்கொள்ளும் ஒற்றை
விழியசைவுகள் நீ...!
எனக்கான ஏக்கங்களை
அதிகமாகவளர்த்தே உதிர்ந்துபோன
கூந்தல் நீ...!
தொலைதூர மலையில்மிளிரும்
விளக்காய் மாறிப்போன
மூக்குத்தி நீ...!
பூவில்விழுந்து தேனைப்பருகி
அதிலேயே சிக்கித்தவிக்கும்
எறும்பு நீ...!
இதுவரை நானே
அறிந்திடாத தன்னம்பிக்கையின்
சிறுபுள்ளி நீ...!
அதிகாலை விடியல்களில்
இமைகளுக்குள் ஊடுருவும்
சூரியக்கதிர்கள் நீ...!
எனதுஎழுத்துக்களுக்காக உருகிப்போகும்
முதன்முதல் ரசிகனான
எழுதுகோல் நீ...!
விலகிநின்ற புள்ளிகளை
ஒன்றிணைத்த கோலத்தின்
கோடுகள் நீ...!
தினந்தோறும் கனவுகளில்
எனதுவிரல்கள் பறித்த
குறிஞ்சிமலர்கள் நீ...!
எனதுதோல்விகளின் கதைகளில்
நீயாகவே எழுதிவிட்ட
கடைசிவரிகள் நீ...!
எவரும் கண்டிராத
கருமை வெண்மையின்
அழகியஉருவம் நீ...!
பாடுகையில் தவறுதலாக
வந்துவிடும் குரலின்
தேய்மானம் நீ...!
இவள்நடனத்தை பார்த்துரசிக்கும்
நான்குபேராய்(சுவர்கள்) மாறிப்போன
எனதறை நீ...!
சோகத்தின் சாயலாய்
முகத்தில் வழிந்தோடும்
எண்ணெய் நீ...!
காதில் எதைசொன்னாலும்
கேட்பதைபோலவே அமர்ந்திருக்கும்
நந்தி நீ...!