ஒரு வசீகரமான பொம்மை

அந்தப் பொம்மையை
அவன்
திருப்பித் திருப்பிப்
பார்க்கிறான் !
பொம்மையின்
வெகு நேர்த்தியும்
தன் மற்றப் பொம்மைகள்
யாவற்றிகுமில்லாத
அதன் கனமும்
அவனை
வசீகரிக்கின்றன,
குறிப்பாக
அதன் கண்கள் !
சில்லென்றிருக்கும்
அதன் தன்மை
அவனுக்கு
செத்துப் போன
ஓர் உறவினரின்
கைகளை
ஞாபகப்படுத்துகிறது !
நச்சுப்பாம்பின்
தோல் போலிருக்கும்
அதன்
மினுங்கும் தன்மை
அவனுக்கொரு
புன்னகையைத் தருகிறது !
தன்
மூத்த சகோதரன்
அடிக்கடி
அப்பொம்மையை
வெளியே எடுததுப்போய்
விளையாடிவிட்டு
வருவதை
அவன் நினைவுகூர்கிறான்,
சிலசமயம்
தன் தந்தையுங்கூட
என்பதையும் !
அந்தப் பொம்மையின்
கண்கள்
தன்னை
ஆர்வமாய்ப் பார்ப்பது
அவனுக்குப்
பிடித்திருக்கிறது !
அதனுடன்
எப்படி
விளையாடுவது
என்றுதான்
தெரியவில்லை !
தன்னை நோக்கிப்
பிடித்தபடி
எப்படியும் தன்னுடன்
அந்தப் பொம்மையைப்
பேசவைத்து
விடவேண்டுமென்கிற
முயற்சிகளிலிருக்கும்
அவனைப் பற்றிய
மூன்று உண்மைகள் .........
அவனுக்கு வயது
நான்கு !
அவன்
சிரியாவின்
ரக்கா நகரைச் சேர்ந்தவன் !
அவன்
கையிலிருக்கும்
அந்தப் பொம்மையின் பெயர்
துப்பாக்கி !
===========================
- குருச்சந்திரன்