நாவின் நரம்பு

அங்கம் முறிந்து அவஸ்த்தை அனுபவித்துப்
பங்கப் படுவோரின் பாட்டுக்குத்- தங்கம்
பணமென்றுக் காப்புறுதி பக்குவமாய்க் கொடுக்கும்
குணத்தாலே கொள்ளை அடிப்பு.
படை,ஆள் பணத்தின் பலமெல்லாம் கொண்டே
தடைசெய்வோன் ஆணை தகர்த்து – விடைகொள்ள
வைத்தே விதிவரைந்த விலாசத்தை நீக்குகின்ற
மெய்தான் மரணம் மிடுக்கு.
வாழ்ந்து உணர்வதற்கே வாழ்வின் ரகசியத்தை
ஏழ்மை செழிப்பு எனும்நிலைகள் – சூழும்
தருணங்கள் எல்லோர்க்கும் தத்தமதாய்க் கொள்ளக்
கருவாக்கி வைத்தோன் கருத்து
கண்ணாலே காணாதக் காட்சியினைக் கண்டதாய்ச்
சொன்னாலே நம்பும் உலகமென்று – எந்நாளும்
பொய்முடிச்சுப் போட்டு புகழ்தேடும் பேர்வழிகள்
தைரியமே நாவின் நரம்பு.
*மெய்யன் நடராஜ்