மேக குரு

சுற்றிச் சுழன்று நகர்ந்து நடனமிட்டுக்
கொண்டிருந்த மேகக் கூட்டம் நிறுத்திக்
கேட்டேன் 'எங்கே பயணம்?'
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ....எங்கேயும் ..என்றன விகசிப்புடன்

இலக்கில்லையா? என்றேன் சற்றே நகைப்புடன் .
இலக்கும் இல்லை .
வேர்விடும் ஆவலும் இல்லை .
ஏன் என்ற கேள்வியும் இல்லை.
ஆனால் ஆனந்தமாய் அலைகிறோம் என
இயம்பின இயல்பாய் .

அட ....அப்படியானால் நீங்கள் யார் ?
வினவினேன் வியப்போடு
உ ற்றுப் பாருங்கள் ...நீங்கள்தாம் நாங்கள்
என்றார்கள் உறுதியைக் குரலிலேற்றி .
இடக்கோ? என்ற ஐயத்திற்குத் திரையிட்டு
எப்படி ?என்றேன் சற்று பணிவு கூட்டி!
திரை விலக்கி இடக்கில்லை இது மெய்தான்
என்று சொல்லித் தொடர்ந்தார்கள் !!!!

நாங்கள் மழை ,அருவி ,நதி .கடல் என உருமாறி
மீனுக்குள் ,நண்டுக்குள்
கடல் உப்புக்குள் ,சிப்பியின் முத்துக்குள்
ஏன் ...விதை,செடி ,கொடி,மரம்
மலர் ,காய் ,கனியென வியாபித்து
ஏதோ ஓர் உருவில் உங்களை வந்தடைந்து
இணையலாம் தானே ?என்றது கேட்டு
கண்கசிய மேக குருவே !என்றேன்

'இல்லையில்லை
வேர்விட முனையாது,எல்லைகளற்று
வியாபிக்க முயன்றால் பிரபஞ்சத்தின்
எல்லா உயிரும் ஓருயிர்தான் 'என்றனர்
விடை பெறுமுகமாய்நகர்ந்து கொண்டே.

சிரம் தாழ்த்தி கரம் குவித்தேன் நன்றிப் பெருக்குடன் !

எழுதியவர் : சித்ரா ராஜாசிதம்பரம் (26-Sep-14, 1:47 pm)
Tanglish : maega guru
பார்வை : 107

மேலே