ரசிக்க ஒரு வாழ்க்கை

மழை மரித்த மறுநொடியே
பிரிவின் துயரில்
தூங்கிப் போகும்
ஈரச் சுவற்றின்
தூக்கம் குலைக்கா
பறவைக் கூட்டத்தின்
கானக் கீச்சு...
நடுநிசி நேரம்
நடைபயிலும் நண்பனுடன்
பழகிப் போன
பாதையில் தொலையும்
குவளைச் சூட்டின்
தேநீர் ஆழம்...
மனம் உடைந்த மனிதனுக்கு
மேசைகளின் மீதசையும்
காகித கற்றைகளில்
காப்புரிமை கேட்கும்
வாழ்க்கை கவிஞர்களின்
வாசனை வரிகள்...
வாழ்வின் மகிழ்வுகளை
மறந்து போகும்
" Benz Car " மனிதர்களின்
கண்ணீர் ஆற்றுக்
கரைகளைத் தேடும்
ஏழை சிறுவனின்
காகிதக் கப்பல்...
பட்டாம்பூச்சி பெண்களின்
இமையசைவுச்
சுருதிநடையின்
இலக்கணம் வழுவாமல்
இன்னிசை மீட்டும்
மழலை ஆண்களின்
ஒரு தலை ராகம்...
அதிவிரைவு வாழ்க்கை ரயிலின்
பயணச்சீட்டை பறக்கவிட்டு
உறவு தண்டவாளங்களில்
ஒய்யாரமாய் உலாவரும்
முதுமை காதலரின்
மூச்சுமுகர் அரவணைப்பு...
மழைபொழிவினில் ஜன்னலோரம்,
பல்துலக்கா காப்பிச்சுவை,
இரவுநேர "இளையராஜா ஹிட்ஸ்",
பறவைகளின் முத்தமழை,
மணமகளின் சிரிப்பிசை,
தாய் ஊட்டும் உருண்டைச்சோறு,
காதலியின் " Miss You " பார்வை
என்று ரகசிய உலகில் ரசணைகள் ஆயிரம்...
ரசிக்க கிடைத்த
ஒற்றை வாழ்வை
வெல்லத் துடிக்கும்
மனிதன் மனம் தான்
ரசிக்கும் மனிதனை
மடையனாய் பார்கிறது...
போகட்டும்...!
அறிவுமான்களுக்கு
அமிர்தமும் நஞ்சுதான்...
ரசனை மடையனுக்குத்
தவிட்டுச்சோறும் தாய்பால் தான்...

எழுதியவர் : ஜெய்குமரன் (26-Sep-14, 5:25 pm)
பார்வை : 111

மேலே