வெடிச்ச விளைநிலம்

வெய்யில் பட்டு வெடிச்சு துடிக்குது
இங்கே விளைநிலம்
விண்ணை விட்டு இறங்க மறுக்குது
அந்த மழை வளம்
வெதநெல்லு கருகி சாகுது
விவசாயி நெஞ்சு நோகுது
வானமே கண்ண தொறப்பாயா
வந்து இந்த மண்ண நனைப்பாயா.. (வெய்யில்)
ஏர் பிடிப்போன் உழைப்பை நம்பி உலகம் இருக்குது
ஏழை அவன் துன்பம் பார்த்து விலகி ஒதுங்குது
ஊர் பசிக்கு உழைச்சி உழைச்சி ஓடாய் தேஞ்சவன்
உண்ண ஒரு பருக்கை இன்றி உள்ளம் குமுறுறான்
கொடி ஏத்தி கோஷம் போடும் கட்சித் தொண்டர்களே –
கட்சிக் கொடி கிழித்து அவன் கோவணம் மாத்துங்களே
கிழக்கிருந்தும் விடியாத உழவன் வாழ்வதற்கு
ஒரு சூரியனைக் கொண்டு வந்து தானம் பண்ணுங்களே... (வெய்யில்)
நீர் வழிஞ்ச வாய்க்கால் இப்போ நிலமா ஆயிடுச்சி
நெல் விளையும் காடு எல்லாம் தரிசா போயிடுச்சி
ஆறு குளம் ஓடை எல்லாம் தடமே மாறிடிச்சு
ஆன மட்டும் கேட்டுப் பார்த்தும் தெய்வம் தூங்கிடுச்சி,
மழை மேகம் திசை மாறி எங்கே போனதோ
மனம் சோக இசை பாடி இங்கே வேகுதே
உழைப்பிருந்து உழைக்காம் உழவன் வாடிவிட்டால்
இனி உண்பதற்கு உலகம் எங்கே போகும் சொல்லுங்களே..(வெய்யில்)
(ஒரு ஏக்கப்பாடல்)