இடைவெளி

“பயணிகளின் இனிய கவனத்திற்கு. ரயில் எண் 6010 மும்பாய் மெயில் மூன்றாவது பிளாட்பாரத்திலிருந்து இன்னும் சற்று நேரத்தில் புறப்பட இருக்கிறது” ஒலிபரப்பாளர் தேவையான ஏற்ற இறக்கங்களுடன் கணீர் என்று உச்சரித்தார். சபாபதி கடிகாரத்தைப் பார்த்தார். மணி இரவு ஒன்பது ஐம்பத்தைந்து. ஜன்னலின் வழியாக ரகுவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு “ரகு, பார்த்துடா. அடிக்கடி போன் பண்ணு” சபாபதியின் வார்த்தைகள் சோகத்தில் சுருங்கின.
எந்தச் சந்தர்ப்பத்திலும் கண்களில் நீரை வரவழைக்கவோ அல்லது கவலையை முகத்தில் அப்பட்டமாகக் காட்டக் கூடாது என்று பிடிவாதமாக இருவரும் இருந்தனர். மனது முரண்டு பிடித்தது. அப்பா சில நாட்களில் எப்படி இவ்வளவு மாறிவிட்டார் என்று ரகு வியப்படைந்தான். அண்ணாசாலையில் இருக்கும் நூலகத்திற்குப் போக வேண்டும் என்றால் கூட, எந்த பேருந்தில் ஏற வேண்டும், எந்த இடத்தில் சாலையைக் கடக்க வேண்டும் என்று பல விஷயங்களை மணிக் கணக்காக பல முறை என் மனதில் திணித்து என்னை திக்குமுக்காடச் செய்து விடுவார். இன்று நான் முதன் முறையாக வேலை நிமித்தம் மும்பாய்க்கு அதுவும் தனியாகச் செல்லும் என்னை வழியனுப்ப வந்த போது எதுவும் கூறாமல் மௌனமாக என் கண்களையே ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்! அப்பாவின் மாற்றம் ரகுவிற்கு மிகுந்த வியப்பை தந்தது. அப்பாவின் இடுப்பை வளைத்துப் பிடித்தபடி ரகுவையும் அப்பாவையும் மாறி மாறிப் பார்த்து, புறங்கையால் கண்ணீரை அடிக்கடி துடைத்துக் கொண்டிருந்தாள் ரகுவின் தங்கை மாலு.
“கவலைப்படாதே மாலுக்குட்டி. ஒரே வருடம்தான். கண் மூடித் திறக்கும் முன் போய்விடும். வேண்டிய பணம் சேர்த்து பெரிய மேற்படிப்பு படிக்க வைத்து, நல்ல வரனாகப் பார்த்து”...மனம் பந்தயக் குதிரை போல மிகவும் வேகமாக ஓடியது.
“நீ பத்திரமா போண்ணா” என்று தேம்பியபடி ரகுவை சமாதானப்படுத்தினாள் அந்த பத்து வயது குட்டித் தேவதை. தங்கையின் அன்பான அக்கரை ரகுவின் மன இறுக்கத்தை சற்றே தளர்த்தியது.
ரயில் கிளம்பும் போது ரகு சபாபதியைப் பார்த்து “அப்பா, உடம்பை கவனிச்சுக்கோங்க. அடிக்கடி செக்கப்புக்கு போங்க. நேரத்துக்கு சாப்பிடுங்க” என்று அவசர கதியில் சற்றை இரைந்து பேசினான்.
ரகுவின் பார்வை தெரியும் வரை சபாபதியும் மாலுவும் இணைந்தே கையாட்டிக் கொண்டிருந்தார்கள். ரகு கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு தன் இருக்கையில் சரிந்தான். இடையில் எப்படியோ தப்பித்து கண் ஓரங்களில் தேங்கி இருந்த கண்ணீர்த் துளி ரயிலின் எதிர்க் காற்றில் ஜில்லென்று கரைய, ரகுவின் நினைவுகளும் பின்னோக்கி நகரத் தொடங்கியது.
கனகசபாபதி ஐம்பத்தி ஆறு வயது இளைஞர். நண்பர்களின் வட்டாரத்தில் “சதா” என்று தான் மிகவும் பரிச்சயம். வாழ்க்கையில் இவருக்கும் மிகவும் பிடித்தது இரண்டேதான். ஒன்று அவருடைய சிறிய அழகான குடும்பம். அடுத்தது பறவைகளைப் பற்றிய அவரின் அனுபவ ஆராய்ச்சி. பறவைகளின் உலகத்தைப் பற்றி அவருக்குத் தெரியாததே இருக்கமுடியாது என்று உறுதியாக நம்பலாம். “ஆக்” பறவைக் குடும்பத்திலிருந்து “ரென்” குடும்பம் வரை பறவைகளை இனம் பிரித்துக் காட்டிடுவார். கன்னிமாரா, பிரிட்டிஷ், அமெரிக்கன் நூலகங்கள் என்று அவர் அலைந்து திரிந்து பறவைகளைப் பற்றிச் சேகரித்து வைத்த குறிப்புகள் இருக்கும் ஏழடி மரப் பீரோ நடுக் கூடத்தில் மிகவும் கம்பீரமாக இருக்கும். சதாவின் திறமையான பேச்சு, அடுத்தவர் மனத்தில் தன் கருத்துக்களை காயப்படுத்தாமல் விதைக்கும் பக்குவமான தேற்சி, அவருக்கு ஏராளமான நண்பர்களை பெற்றுக்கொடுத்தது. பத்துவயதுக் குழந்தையிடம் கிளிகள் அறுபது வயது வரை உயிர் வாழ்ந்திடும் என்று வியப்பிலாழ்த்துவார். பதினாறு வயதுப் பையனிடம் நூற்றைம்பது மில்லியன் வருடங்களுக்கு முன்பே பறவைகள் ஊர்வன இனத்திலிருந்து தோன்றியவை என்று ஆரம்பித்து தன் பேச்சில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்துவார். தன் வயதொத்த நண்பர்களிடம் பறவைகள் தன் சூட்சுமம் அறிவால் ஒரு நொடியில் பல பிரபஞ்சங்களுக்கு போய் வருவதாகக் கூறி ஆன்மீகவாதியாக மாறிடுவார். நாளேடுகள் மற்றும் பத்திரிக்கைகளின் வரும் பறவைகள் பற்றிய செய்திகளை அவருடைய முது நிலைப்பட்டதாரி ரகு அழகாக வெட்டி அப்பாவிற்கு உதவுவான். கடைக்குட்டி மாலு அண்ணன் செய்வதை உபத்திரவம் எதுவும் செய்யாமல் வியப்போடு ரசிப்பாள்.
அன்று வெள்ளிக் கிழமை. ரகு வாசலில் தபால்காரர் மணி அடிப்பதைக் கேட்டு விரைந்தான். தபால்காரர் கை நிறைய வைத்திருக்கும் கடிதங்களை நொடியில் ஸ்கேன் செய்து இடையிலிருந்து ஒரு நீல நிறக் கவரை ரகுவிடம் கொடுத்து “ என்ன ரகு, இண்டர்வியூவா? நல்லா பண்ணுய்யா” என்று கண்ணை இடுக்கிக் கொண்டு தேவையான அளவு சிரித்தார்.
ரகு கவரைப் பார்த்தான். அது மும்பாயிலிருந்து வந்திருந்தது. இரண்டே தாவலுடன் வராண்டாவை அடைந்தான். பத்து நாட்களுக்கு முன்பு தான் வேலைக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் நடந்தது. மிகவும் நன்றாகச் செய்திருந்தான். அம்மாவை வேண்டிக் கொண்டு சிறிது நேரம் அமைதியாக பிரார்த்தித்தான். மெதுவாகக் கவரைப் பிரித்தான். ஆயிரம்பட்டாம் பூச்சிகள் சிறகக்டித்தது. அந்த அதிர்வுக் காற்றைக் கூட அவனால் உணர முடிந்தது. அப்பா வெளியே போயிருந்தார். மாலு பள்ளிக்குச் சென்றிருந்தாள். யாரிடமாவது தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்திடத் துடித்தான். அம்மாவின் படத்திற்குச் சாற்றியுள்ள சந்தன மாலையை எடுத்து ஈரத்துணியால் துடைத்தான். கை, கால் கழுவி படத்தின் கீழ் உள்ள காமாட்சி விளக்கை ஏற்றி மௌனமாக அம்மாவிடம் மனம் விட்டுப் பேசினான். சற்றே பதட்டம் குறைந்தது போலத் தெரிந்தது. சதா மாலை வீட்டிற்கு வந்தார். அதற்கு முன்பே ரகு அப்பாவிற்கு மிகவும் பிடித்த உருளைக் கிழங்கு சிப்ஸை கடையில் வாங்கி சற்று சிரமப்பட்டு பில்டர் காபி போட்டிருந்தான். சதா வந்தவுடன் “ அப்பா! காபி” என்று சிப்ஸ் தட்டத்துடன் மேஜையில் வைத்தான். தண்ணீர் கூட சூடு பண்ணத் தெரியாதவன், எப்படி காபி போட்டான் என்று வியப்பிலாழ்ந்தார் சதா. காபி தொண்டையில் மெல்ல இறங்க அவருடைய அன்றைய அசதி சற்றே குறைந்தது போல உணர்ந்தார்.
“அப்பா, எனக்கு அப்பாயிண்ட்மேண்ட் ஆர்டர் வந்திருக்கு. சம்பளம் ஐயாயிரம்”
வியப்பினை கண்களில் தேக்கியவாறு அப்பாவிடம் கடிதத்தைக் காண்பித்தான் ரகு.
“பகவானே!” என்று கூறியவாறு கடிதத்தை படிக்கலானார் சதா. இடை இடையே அப்பாவின் முகத்தில் தெரியும் ஏற்ற இறக்கங்களை ரகு கூர்ந்து கவனித்தான்.
“அப்பா, ஒரு வருடம்தான் மும்பாயில் வேலை. அங்கே டிரெயினிங் மட்டும்தான். அப்பறம் சென்னைக்கு மாற்றலாகி வந்து விடலாம்.”
ரகு வேகமாகச் சொல்லி முடித்து அப்பாவின் பதிலுக்காகக் காத்திருந்தான்.
சதா உடனே ஒன்றும் கூறாமல் சற்றே தளர்வுடன் சேரின் பின்புறம் தலையைச் சற்று அழுத்திச் சாய்ந்து விட்டத்தைப் பார்த்தார். கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு,
“உன்னோட படிப்புக்கு சென்னையிலேயே வேலை கிடைக்கும்டா. போன வாரம் எழுதின பேங்க் எக்ஸாம் கூட நீ ரொம்ப நல்லாப் பண்ணியிருந்தியே. இப்போதானே படிப்பை முடிச்சே. அதுக்குள்ளே ஏன் அவசரப்படறே. பகவான் கண்டிப்பா நமக்கு உதவுவான். மும்பைக்கு உன்னை போகவிட்டுட்டு என்னாலும், மாலுவாலும் எப்படிடா தனியா இருக்க முடியும்? எப்பவும் என் கண்பார்வையிலேயே வளர்ந்த பிள்ளைடா நீ” என்றவாறு ரகுவின் பதிலுக்குக் காத்திருந்தார்.
அப்பாவின் கவலையை ரகு புரிந்து கொண்டாலும், அவனால் தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள முடியவே இல்லை. அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெற இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது. அதற்குள் தான் தலையெடுத்தால்தானே அப்பாவிற்கும் உதவியாக இருக்குமுடியும் என்று தன் பக்க நியாயங்களைக் கூறினான்.
இது நடந்து பதினைந்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் பதினைந்து நாட்களுக்குள் ரகு ஒப்புதல் கடிதத்துடன் வேலைக்குச் சேர வேண்டும். அப்பாவிடம் ரகு முன்பு போல் இயல்பாகப் பேசாமல் சற்று விலகியே இருந்தான். சதா எவ்வளவோ சமாதானங்கள் சொல்லியும் அவனை இயல்பு வாழ்க்கைக்கு மாற்ற முடியவில்லை. சதா முழுவதுமாக நொறுங்கிப் போனார்.

கடிதம் வந்து மூன்று வாரங்கள் கழித்து சதாவின் பால்ய நண்பர் ராமானுஜம் வீட்டிற்கு வந்திருந்தார். பெங்களூரில் இருக்கும் மகன் வீட்டில் கொஞ்ச நாள் தங்கி விட்டு சுவற்றில் அடித்த பந்து போல சென்னைக்கு வந்துவிடுவார்.. சதாவின் மௌனத்தைப் புரிந்து கொண்டு, ராமானுஜம்தான் பேச்சை ஆரம்பித்தார்.
“என்னடா சதா, ஏன் ஒரு மாதிரியா இருக்கே. எங்கிட்டே சொல்லுடா” என்று ஆதங்கமாகக் கேட்க சதா ஒரு மூச்சு கொட்டித் தீர்த்துவிட்டார். ரகுவின் போக்கு சதாவை வெகுவாகப் பாதித்திருப்பதை உணர்ந்த ராமானுஜம் ஒரு சிறு ஆறுதலான மௌனத்திற்குப் பிறகு
“தப்பா சொல்றேன்னு நினைக்காதேடா. பிள்ளைகளை எப்பவுமே நம் கைச் சூட்டிலேயே வைச்சிருக்கணும். நான் இப்பப் படற அவஸ்தை உனக்குத் தெரியாதா. ஒரு தடவை விட்டுட்டோம்னு வைச்சுக்கோ பின்னே எப்பவுமே விட்டதை பிடிக்கவே முடியாது. அப்புறம் ஆயுள் தண்டனைதான். அவ இல்லாம உம் புள்ளையை நீ எப்படி கஷ்டப்பட்டு வளத்தேன்னு எனக்குத் தெரிஞ்சதை விட ரகுவுக்கு பத்து மடங்கு தெரியும்டா. சமாதானமா அவனை உக்காரவைச்சுப் பேசு. நிச்சயம் அவன் மனசை மாத்திக்குவன்” என்று கூறியவாறு பாதுகாப்பாக சதாவின் கைககளை இறுகப் பிடித்துக் கொண்டார்.

ரகுவிற்கு மிகவும் பிடித்த பூரி மசால் செய்து, காபி போட்டு ரகுவையும் மாலுவையும் சாப்பிட அழைத்தார் சதா. வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு சுவர் கடிகாரத்தைப் பார்க்க மணி ஆறு அடித்து ஓய்ந்திருந்தது. ரகு அவனுடைய அறையில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தான். மெதுவாக கதவை முழுவதுமாகத் திறந்து “ரகு, மாடிக்கு வாடா. உங்கூட கொஞ்சம் பேசணும்” என்று பதிலுக்குக் காத்திருக்காமல் மாடி ஏறினார்.

அந்தி சாயும் நேரம். உயரமான மரங்களில் பறவைகள் விதவிதமாகக் கீச்சிட்டு தங்களின் இருக்கைகளுக்காக முன்பதிவு செய்து கொண்டிருந்தன. பறவைகளின் சப்தங்களும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. அடிவானத்தில் பறவைக் கூட்டங்கள் சம முக்கோண வடிவில் ராணுவ வீரர்களின் ஒழுங்குடன் ஒரே சீராகப் பறந்து கொண்டிருந்தது. அதன் நேர்த்தியைக் கண்டு எத்தனையோ தடவை சதா வியந்திருக்கிறார். இதில் எத்தனை தாய்ப்பறவைகள், தந்தைப்பறவைகள், பிள்ளைப்பறவைகள் இருக்கும் என்று வேடிக்கையாக இனம் பிரித்துப்பார்த்தார். எவ்வளவு நெருக்கமான சொந்தங்கள். அப்படியிருந்தும் ஒன்றோடொன்று துளியும் உரசிக் கொள்ளாமல் தனக்கென்று இருக்கும் இடத்தில் ஒரே சீராக இணைந்து போகும் அழகை ரசித்துக் கொண்டிருக்கும் போதுதான் அவருடைய பிரச்சினைக்கும் ஒரு விடை கிடைத்தது.
“ரகு சீக்கிரம் வாடா” என்று உற்சாகத்துடன் அழைத்தார்.
தளர்ந்தபடி வந்த ரகுவிடம் “ நீ எப்போடா ஜாயின் பண்ணணும். நாளைக்கே உனக்கு நான் டிக்கெட் எடுத்துடறேன். ஒரு வருஷம்தானே. நொடியில் பறந்துடும். மாலுவைப் பத்தி கவலைப்படதே. அவளை நான் பத்திரமா பாத்துக்கிறேன். வெளி வேளைக்கு வேணும்னா ஒரு ஆளைப் போட்டுக்கறேன். என்ன சொல்றே” என்று ரகுவுடைய பதிலுக்குக் காத்திருக்காமல் “நான் சொல்றது உனக்கு சம்மதம்தானே” என்று திணரடித்தார்.

“சரிப்பா” என்று ரகு தலையாட்டிக் கொண்டே அப்பாவின் தோளில் முகத்தை வைத்து சிறு குழந்தையைப் போல அழ ஆரம்பித்துவிட்டான். தந்தை மகனுக்கிடையே இருந்த பதினைந்து நாள் மனப் போராட்டம் பத்தே வினாடிகளில் கரைந்தே போனது.

சதா, அந்தப் பறவைக் கூட்டங்களுக்கு மனதாற நன்றி கூறியவாறு மகனைத் தேற்றினார். பறவைகள் கூட்டமாகப் பறக்கும் போது அதன் பாதுகாப்பே அந்த இடைவெளிதான் என்று சதாவிற்குப் புரிந்தது ரகுவிற்கு இன்று வரை தெரியவே தெரியாது.

எழுதியவர் : பிரேம பிரபா (27-Sep-14, 7:38 pm)
சேர்த்தது : பிரேம பிரபா
Tanglish : idaiveli
பார்வை : 203

மேலே