ஊரான்

அவன் கவிதைகள் நிறைய எழுதி இருக்கிறான் . கட்டுரைகளும்தான் .அவ்வபோது நகைச்சுவை துணுக்குகளும் எழுதுவான் .ஆனால் சிறுகதை எழுதினதே இல்லை.

சிறுகதை வடிவம் அவனுக்கு கொஞ்சம் பயமாக இருந்தது . கவிதை , கட்டுரையை விட ஒரு பத்து மடங்கு பெரிதாக எழுத வேண்டும் . கதை நடக்கும் இடங்கள் பற்றியும் எழுத வேண்டும் . அதீத உரையாடல் செறிவு வேண்டும் . ரொம்ப கூச்ச சுபாவம் உள்ளவனால் உரையாடல் பற்றி நினைக்கக் கூட முடியாது ...அவன் அந்த ரகம்.
தகவல்கள் வேறு இருக்க வேண்டும் என அவனுக்கு தெரிந்த எழுத்தாளர்கள் அடித்துச் சொல்லி இருக்கிறார்கள் . தகவல்களுக்கு அறிவு இருக்க வேண்டும் ....அது கிஞ்சித்தும் இல்லாத அவன் குழம்பித்தான் போனான்.

எப்படி எழுதுவது புரியவில்லை.எதை எழுதுவது என்பது அதைவிடப் பெரிய கேள்விக்குறியாய் இருந்தது..ஆனால் எழுத வேண்டுமே ...எழுதி தன் பெயரை இந்த வருடத்தின் சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்று பிரணாப் முகர்ஜி அழைத்தே ஆக வேண்டும் ....
அவன் அறையில் சத்தம் போட்டுகொண்டிருந்த மின்விசிறி அவன் நினைவுகளை அடிக்கடி கலைக்கும்..இப்போது ஏனோ அவன் நிசப்தத்தை உணர்ந்தான் .அவன் வீட்டில் பின்னாலிருக்கும் இந்திக்கார குடும்பம் எழுப்பிகொண்டிருக்கும் பெரும் பண்டிகை டெசிபல்கள் அவன் காதை எட்டவே இல்லை ......
யோசி..க்...க ஆரம்பி..................
அவன் நினைவுகள் கொஞ்சம் கூட அடங்காமல் அவன் வாழ்ந்த வயதுகளில் , வளர்ந்த இடங்களில் அலைபாய ஆரம்பித்தது.


அன்று அவன் கிராமத்தில் இதேபோல் ஒரு பண்டிகை தினம்தான் . அவன் எப்போதும் போடும் காக்கி ட்ரவுசர் இல்லாமல் , நீலக் கலரில் போட்டிருந்தான் .பக்கத்து வீட்டு கருணாவுடைய சைக்கிள் ஓட்டிப்பழகிக் கொண்டிருந்தான் ரோட்டில்.
செம்மண்ணும் கல்லும் போட்டு இறைத்திருப்பார்கள். அதுதான் ரோடு.
'அது போடப்பட்டதா அல்லது ஆதிகாலத்தில் இருந்து அப்படிதான் இருக்கிறதா ? ' என்று அவனுக்கு மூன்றாம் வகுப்பு படிக்கும்போது வந்த சந்தேகம் சைக்கிளை ஓட்டும்போது இன்னும் அதிகமாகிறது.
அப்போதெல்லாம் ஊரில் சைக்கிள் வைத்திருப்பவனுக்கு மவுசு அதிகம் .அதனாலோ என்னோமோ அவன் எப்போதும் கருணாவோடே சுற்றி கொண்டிருப்பான்.

' டேய் கருணா , இன்னும் ஒரே ஒரு ரவுண்டு .ரீடிங் ரூம் வரைக்கும் போயிட்டு வந்து குடுத்துறேண்டா ' என்று கெஞ்சுவான் . கருணாவுக்கு கொடுக்க இஷ்டம்தான் .
ஆனா அவங்கப்பா விட மாட்டங்க .இவனை அவங்கப்பா கொஞ்சம் ரப்பாதான் பார்ப்பார்.
என்ன செய்வது . கருணாவோட அப்பா அப்பவே ஊர்ல சைக்கிள் இல்ல புல்லெட்டே வச்சிருந்தாரு .
மெட்ராஸ்லருந்து வர்ற கலர் துணிகள்ல பூவேலைல்லாம் செஞ்சு கொடுப்பாரு நெறைய ஆளுங்கள வச்சு...நல்ல துட்டு.

இவனோட அப்பா விவசாயம் ...அது இல்லாத நேரத்துல ஜோசியம் பார்ப்பார்.
ஜோசியக்காரர் பையன்னு யாராவது சொன்னா இவனுக்கு கோவம் வரும் .விவசாயி மகன்னு ஏன் யாரும் யாரையும் சொல்ல மாட்டேன்கறாங்க ? ... ஏன் யாரும் சொல்லிக்கவும் மாட்டேன்கறாங்க ?

மை பாதர் இஸ் எ இஞ்சினியர் , மை பாதர் இஸ் எ போர்டர் னு கூட சொல்றாங்க . பட் ஒரு படிச்ச பய கூட மை பாதர் இஸ் எ பார்மர் னு சொல்ல மாட்டேன்றான் . மை பாதர் இஸ் எ லேண்ட்லார்டுனு தொழில மாத்தி சொல்றானுங்க ....அந்த பூமாதேவி தான் இவனுங்கள காப்பாத்தனும்னு பின்னாட்களில் அவன் நினைத்ததுண்டு.

இரண்டு வருடங்கள் கழித்து ....அந்த சைக்கிள் பயணமெல்லாம் அவனுக்கு போர் அடிக்க ஆரம்பித்து விட்டது . அவன் சென்னையில் பெரிய பாலிடெக்னிக்கில் , பத்தாவதில் ஐநூறுக்கு 428 எடுத்து சேர்ந்து விட்டான் .
அவன் அம்மா" டேய் நம்பளுக்கு மார்க் ஷீட் தவிர வேறு சிபாரிசு கெடயாதுடா . அதுதாண்டா பேசனும்.உனக்கான அட்மிஷனுக்காக ' னு சொல்லி சொல்லி வளர்த்தா.
அதேமாதிரி அவன் மார்க் ஷீட் பேசியது .

இங்கு அவனுக்கு வேறு பிரச்சனை . எல்லோரும் பெரும்பாலும் தினம் தினம் விதவிதமாக டிரஸ் போட்டு வந்தனர்.இவனுக்கு ரெண்டு பேண்ட்டு , ரெண்டு சட்டை தான் இருந்தது .எப்பவாவது இவன் அண்ணனும் , இவனும் டிரெஸ்ஸ மாத்திப்போட்டுப்பாங்க . அப்பதான் கொஞ்சம் பரவாயில்லைன்னு நெனப்பான் .
மத்த சமயம் எல்லாம் அந்த ரெண்டு செட்டுதான்... கூட தாழ்வு மனப்பான்மை மட்டும் எக்கச்சக்கமாக வைத்திருந்தான் ...ஐநூறுக்கு 428 என்ற அளவில்.

அது தாழ்வு மனப்பான்மை என்பது கூட அவனுக்கு தெரியாது .
அந்த தாழ்வு மனப்பான்மை வெறும் உடைகளால் மட்டும் வருவதில்லை.
அந்த நகரத்து மாணவர்கள் உணவு , சாப்பிடும் முறை , இவன் பேசும் பேச்சு நடையை அவர்கள் அங்கிகரிக்காதது , அவர்கள் பார்க்கும் படங்கள் , குளுகுளு தியேட்டர்கள் , சரளமாய் பேசும் பெண்கள் ...எதுவுமே அவனை ஏற்க வில்லை , அவனுக்கும் எதுவுமே ஏற்க வில்லை.

எல்லாவற்றயும் விட அந்த ஆங்கிலம்.பத்தாவது வரை தமிழ் மீடியம் படித்தவர்களை அழைத்து , பிறகு இங்கிலீஷ் புத்தகங்கள் கொடுத்து இதை படித்தால்தான் நீ உருப்படுவாய் என்று சொல்வதை அவனால் அவன் படிக்கும் டிப்ளோமா மேல் சத்தியமாய் ஏற்க முடியவில்லை.

ஆனா அவன் அண்ணன் மட்டும் அடிக்கடி சொல்வான் .." டேய் தம்பி ...அன்னிக்கி பட்டணமா இருந்தபோதும் சரி , இன்னிக்கி மாநகரமா இருக்கும்போதும் சரி ...இந்த சென்னைய திரும்பி பாக்க வச்சவங்க எல்லாம் ஊர்லந்து வந்தவங்கதான்.அவங்க பஸ் ஏறும்போதே ஊர் கூட்ரோட்லேயே தாழ்வு மனப்பன்மைய வுட்டுட்டு வந்தவனுங்கடா ."

அட . ஆமாம் இல்ல.! நெறைய நம்பிக்கை வரும்.

"அப்ப இங்க்லிஷு ? " இவன் தலைய சொறிவான்.
"பொழப்புக்காக கத்துக்கனுமடா " என்று முதுகில் தட்டிவிட்டு போவான்.

அன்று வகுப்பறையில் தீடிரென சலசலப்பு ...இந்த வருட அனைத்து கல்லுரி விழா.சீனியர் ஒருத்தன் ஆங்கிலத்தோடு தமிழை கலந்தபடி சொல்லிக்கொண்டிருந்தான்.
" கமிங் ட்வென்டி சிக்ஸ்த் காலேஜ் பங்க்ஷன் . பேச்சு போட்டி , பாட்டு போட்டி இன்னும் நெறைய இருக்கு .நாளைக்குள்ள நேம்ஸ் கொடுத்துடுங்க ' ன்னு பெண்கள் கிட்ட மட்டும் அதற்கான அறிவிப்பேடுகளை கொடுத்து சென்றான்.

இப்ப அவனுக்கு பாட்டு போட்டில கலந்துக்கனும் போல இருந்தது .அவன் நல்லா பாடக்கூடியவன்னு ...அவன்தான் நம்பினான்.
"எப்புடி பேர கொடுக்கறது ...ஏற்கனவே நம்பள இவனுங்க "ஊரான்"னு கிண்டல் பண்றானுங்க .இதுல இந்த பாட்டு வேற பாடி .. புதுசா வேற எதாவது பேர் வைப்பானுங்க.
இப்பதான் ஜோசியக்கார பையன்ல இருந்து ஊரான் ஸ்டேஜ்கு வந்திருக்கோம் . இப்ப பாடறதுக்காக
ஸ்டேஜ் ஏறினா ... என்ன பேரு வப்பானுன்களோ தெரியாது .இப்பதான் மைக் மோகன் போய் ராமரஜன்னு ஒருத்தர் பசுவோட என்ட்ரி ஆயிருக்கார் ..." ன்னு கலக்கமாய்.... சென்னை மொழியில் அவன் நண்பர்கள் அவனை 'கேனை" என்று சொல்வார்கள் .அந்த மாதிரி விழித்துக் கொண்டிருந்தான்.

இங்கு அவன் ரொம்ப நேரமா கேனையாய் விழித்துக் கொண்டிருந்தது அவனுக்கு அனுகூலமாய் போனது .
. " என்ன இவ்வளவு நேரமா பேந்த பேந்த பாத்துக்கிட்டு இருக்கே" னு ஒருத்தி கேட்டா.
இவன் மெதுவா "நான் பாட...னும்னு நெனை..கிறேன்... போட்டியில " ன்னு கேனை மாதிரி பேசவும் செஞ்சான் .

"சரி ஓகே பாடிடுவோம் ".............
"என்றவள் என்ன பாட்டு பாடப்போகிறாய் " என்றும் கேட்டாள்.

"தெரியல ... ஆனா நல்லா பாடுவேன் "

"ஹே லுக்.முதல்ல நீ என்ன பாட்டு பாடப்போறன்றத முடிவு பண்ணு .அப்புறம் நீ நல்லா பாடிறியா , இல்லியான்றத ஜனங்க முடிவு பண்ணுவாங்க "

" ராஜா ராஜ சோழன் ..பாடட்டுமா ?"

" ஏன் . எதாவது பொண்ண மடிக்கவா ? ... இத பாரு ஊரான் ..' அவள் ஊரான் என்ற போது அதில் கொஞ்சம் கரிசனம் தெரிதது'...இந்த சோழன் , பாண்டியன் இதெல்லாம் இருக்கட்டும் .புதுசா எதாவது பாடு .நீயா ஒன்னு ரெடி பண்ணு .அதுல ஒரிஜினாலிட்டி இருக்கணும் .அது இப்ப இருக்கிற சூழலுக்கு சரியா இருக்கணும் .எல்லாத்த விட முக்கியம் நீ அத தைரியமா பாடனும் ' என்றாள்.

பிறகு பாடினான் . பரிசு வாங்கினான் என்பதெல்லாம் அவன் நினைத்துக்கொண்டே இருந்தபோது ...
அந்த மின்விசிறி அவன் நினைவுகளை கலைத்தது....

"எப்படி எழுதுவது புரிய வில்லை. எதை எழுதுவது என்பது அதைவிடப் பெரிய கேள்விக்குறியாய் இருந்தது." என்ற அவன் கேள்விகளுக்கு விடை கிடைத்த மாதிரியும் இருந்தது .
அவன் எழுத ஆரம்பித்தான்.

"ஊரான்" என்று தலைப்பிட்டான்...................

எழுதியவர் : ராம்வசந்த் (27-Sep-14, 11:21 pm)
Tanglish : ooraan
பார்வை : 265

மேலே