அன்பெனும் மருந்து

கார்மேகம் மழை பொழிந்தே யெனை தழுவ
நனைந்தேன் நானும் மனமில்லை நழுவ..
நோய் சூல் கொண்டதில் வந்ததே மயக்கம்
சுற்றிய நடவுகள் எதுவுமே புரியவில்லை எனக்கும்!!!
மழலை சூல் பிரசவிக்க மாதங்கள் பத்து
நோய் சூல் பிரசவிக்க நாளில்லை கணக்கு
தேகமது காய்ச்சலில் இதழ் அனத்தல்களோடு
ஒவ்வாமை உடல் தழுவி உணவோடு பிணக்கு!!!
நோய்க்கரு குலைத்திட மருத்துவத்தின் நாடல்
ஊசியின் வலியோடு இம்சையின் தேடல்
பச்சை மஞ்சள் சிவப்பென எத்தனை மருந்து
உட்கொண்டும் கலையவில்லை சூலெனை பிரிந்து!!!
அசதியும் சோர்வும் நிதமெனை தாக்கி
கொல்கிறது கொல்கிறது மெதுவிடமாகி
நாளொரு பொழுதுமாய் நலிந்திடும் தேகம்
என்று சூல் பிரியுமோ அதுவரை ரோகம்!!!
நலமாவென்ற சொல்லது நோய் தீர்க்கும் மருந்து
உறவுகள் விளித்திட நோய் விலகியது சற்றே மறந்து
அன்பான வார்த்தையில் விலகிடும் பிணியும்
அதைவிட மருந்தில்லை அன்பால் எதுவும் தணியும்!!!