முகமூடாத் திருடர்கள் சிறுகதை

இன்னும் விடியவே இல்லை. முன்னதாகவே எழுந்து விட்டான் முருகன். செல்போனில் மணி பார்த்தபோது அது 4.25 ஐ காட்டியது.
இப்போது கிளம்பினால் சரியாக இருக்கும். நினைத்துக் கொண்டவன் எழுந்து, நெகிழ்ந்த லுங்கியை இறுக்கிக் கொண்டே பின்புறம் சென்று விட்டு திரும்பியபோது செல்போனில் அலாரம் அடித்தது. 4.30.
பல் விளக்கி முகம் கழுவி பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டபோது சமையல் அறையில் விளக்கெரிந்தது. காபியின் மணம் முன்னால் வர , பின்னாலேயே வந்தாள் வள்ளி.
" இந்தாங்க " காபியை அவனிடம் தந்து விட்டு கூடத்து விளக்கை போடப் போனவளை தடுத்தான் முருகன் .
" வேண்டாம் . பையன் முழிச்சுக்கப் போறான். எந்திரிச்சா நானும் கூட வரேன்னு அழுவான் ".
மிதமான சூட்டுடன் காபி இதமாய் இறங்கியது.
வாயை துடைத்துக் கொண்டவனைக் கேட்டாள் வள்ளி.
" விடிஞ்சதும் போலாமே. எதுக்கு இவ்வளவு அவசரம்? "
" அது சரி. இதுவே லேட்டு. இப்போ கிளம்பினாதான் சீக்கிரம் வர முடியும். "
பேண்டை மாட்டிக்கொண்டவன் வண்டி சாவியை தேட , எடுத்துத் தந்துகொண்டே வள்ளி ,
" ஏங்க... இவ்வளவு அவஸ்தை தேவையா? . பேசாம நான் சொன்ன மாதிரி...." என்று தொடர்ந்தவளை அடிக்குரலில் அதட்டி அடக்கினான்.
" வாயை மூடு. போகும்போதே ஏதாவது அபசகுனமா பேசி எங்கிட்டே வாங்கிக் கட்டிக்காதே . எனக்கு நீ புத்தி சொல்ல வேண்டாம். உன் வேலையை பாரு. "
அடங்கிப் பழகி விட்டாள் வள்ளி.
வெளியே வந்து வண்டியை கிளப்பியவன் " கதவை சாத்திக்கோ... " என்று விட்டு வேகமானான். ஆள் நடமாட்டம் இல்லாத தெருவில் தனியே செல்லும் அவன் தலை மறையும்வரை பார்த்துவிட்டு திரும்பிய வள்ளிக்கு குமட்டல் வர.., வாஷ் பேசினுக்கு ஓடினாள்.

-------

10 நிமிஷங்களுக்குள் வந்து சேர்ந்துவிட்ட முருகன் திகைத்துப்போனான். அந்த கட்டிடத்த்தின் முன் ஓடிய ஐம்பதடி சாலையில் பைக், கார் என்று வாகனங்கள் கோணல் மாணலாய் நின்றிருக்க., அவன் வந்து சேர்வதற்கு முன்னமே காம்பௌண்ட் சுவரை ஒட்டி நீளமான மனித வரிசை உருவாகி இருந்தது. கைலி, பாண்ட் , வேட்டிகளில் ஆண்களும், நைட்டி (மேலே மறைக்க துண்டு) , முன் புறம் தொங்க விட்ட துப்பட்டாவுடன் சுடிதார், போர்த்திய சேலையுடன் பெண்களும் வரிசையாக நின்றிருந்தனர்.
இந்த நேரத்துக்கே இவ்வளவு கூட்டமா...! 200 பேருக்கு மேலே இருப்பாங்க போல இருக்கே..!. மலைத்துப் போனவன் வரிசையில் ஒருவனானான்.
" கேட் எப்ப திறப்பாங்க? "
" 9 மணிக்காம் "
" அடக்கடவுளே...அது வரைக்கும் நிக்கணுமா? "
" இல்லைங்க. 8 மணிக்கே ஆபீஸ் தொறந்துடுவாங்களாம். நான் வாட்ச்மேன் கிட்ட கேட்டேன்."
" ஏன் சார் முன்னாலே என்ன , 100 பேர் இருப்பாங்களா...?"
" இல்லே சார் . 147 . நான் வந்த உடனே எண்ணி பார்த்துட்டேன். நீங்க 148வது.
" 3 மணிக்கு வந்த நாமே இங்கதான் நிக்கிறோம். ஃபர்ஸ்ட் நிக்கிறவங்க எப்ப வந்தாங்களோ...?"
" அவங்க நைட் ஷோ போய்ட்டு வந்து அப்டியே நின்னுட்டங்களாம்..."
" அது சரி . ஒரு முடிவோடத்தான் வந்திருக்காங்க போல. "
" நாம் மட்டும் என்ன? "
முன் நின்றவர்களின் சம்பாஷனைகளை செவிமடுத்துக் கொண்டிருந்த முருகன் யோசனையில் ஆழ்ந்தான்.
' 8 மணிக்கு ஆபீஸ் தொறந்து இத்தனை பேரு முடிஞ்சு, நாம வாங்கிட்டு போறதுக்குள்ள 10 மணி ஆயிடும். 2 மணி நேரம் பர்மிஷன் , இல்லைன்னா அரை நாள் லீவ் போடவேண்டியதுதான்.'
சூரியன் சோம்பல் முறித்துக் கொண்டு விழிக்க துவங்கியதும் எதிர் புறம் இருந்த பேக்கரியில் ஜேசுதாஸ் ஹரிவராசனம் பாடி அழைத்தார். ஒரு பெரிய கல்லின் மீது உட்கார்ந்திருந்த முருகனை ஒரு அரை டவுசர் , டீ + பிஸ்கட் பாக்கெட்டுடன் தாண்டிச் சென்றது. வாட்ச் மேனுக்காம்.
வெளிச்சம் வரத்துவங்கியதும் அங்கு திடீர் சைக்கிள் கடைகள் முளைத்தன. சுக்கு காபி , இஞ்சி டீ வியாபாரம் சூடு பிடித்தது.
7.30க்கு பெரிய வாசல் கதவு திறக்கப்பட்டு வாசலில் நின்றவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அரை மணி நேரம் மறுபடியும் உள்ளே வரிசை தொடர்ந்தது . சரியாக எட்டு மணிக்கு ஆபீஸ் திறக்கப்பட்டது.
217 ஆவது ஆளாய் முருகன் 200 ரூபாய் கட்டி அந்த ஒற்றை தாளை வாங்கிக் கொண்டு சில விவரங்களை கேட்டு குறித்துக்கொண்டு வெளியே வந்து திரும்பிப் பார்த்தான். 'CVR இன்டர்நேஷனல் ஸ்கூல்' என்ற பித்தளை எழுத்துக்களான கிரீடத்தை தாங்கி 2 மாடிகளுடன் கம்பீரமாய் நின்றிருந்தது அந்த கட்டிடம்.
வாசலுக்குப் பக்கத்தில் சின்னதாய் ஒரு அட்டையில் 'மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் தரப்படுகின்றன'. என்று எழுதி தொங்க விடப்பட்டிருந்தது. முருகன், கையிலிருந்த அப்ளிக்கேசனை ஒரு முறை பார்த்து விட்டு நிம்மதியாய் ஏதோ சாதித்து விட்டதைப் போல் சிரித்து கொண்டான்.
-----------
முருகன் அதிகம் படித்தவனில்லை. 20 வருடத்திற்கு முந்தைய பத்தாவது. முக்கி முக்கி முடித்த கையோடு அவனை அவன் அப்பா ஐடிஐ இல் சேர்த்து விட்டார் . மொத்தமாய் எடுத்த 267 மார்க்குக்கு அந்த காலத்தில் அதுதான் கிடைத்தது. ஃபிட்டர் பிரிவில் சேர்ந்து ஸ்க்ரூ டிரைவரும் கட்டிங் ப்ளேயரும் பிடிக்கப் பழகிய 3 மாதங்களுக்குள் அங்கு நடந்த ஸ்ட்ரைக்கில் கலந்து கொண்டு இந்த படை போதுமா , இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று நிர்வாகத்திற்கு எதிராக கோஷமிட்டதில், நிர்வாகம் முழு நீள கடிதம் ஒன்றை அவன் வீட்டுக்கு அனுப்பி , அவனையும் வீட்டிற்கே அனுப்பி விட்டது . அப்பா , அவன் முதுகில் முறம் இல்லாமல் நையப் புடைத்தார் . மாடு மேய்க்கப் போக சொன்னார். அவன் வீட்டில் மனிதர்களை தவிர சின்ன கன்று குட்டி கூட இல்லாததால் போகவில்லை. முகம் வீங்கி கிடந்தவனை, அவனின் ஒன்று விட்ட சித்தப்பா , தான் பணிபுரிந்த லேத் வொர்க் ஷாப்பில் மிஷின் துடைக்க கூட்டிப் போனார்.
மெசின் சுத்தமானது . அவன்தான் வேஸ்ட் துணிபோல அழுக்கானான். கையில் காசு புரள ஆரம்பித்ததும் , படிப்பு பரண் மேல் ஏறியது.
தனியே லேத் ஓட்ட பழகி சேரன் மெசின்ஸ் என்கிற தனியார் கம்பெனியில் ஸ்திரமாய் நின்றபோது அவனுக்கு கல்யாண வயது ஆகி விட்டிருந்தது.
அவனுக்கு படிக்கத்தான் பிடிக்காதே தவிர படித்தவர்களைப் பிடிக்கும். இன் பண்ணிய சட்டையும், அயர்ன் செய்த பேண்ட் , முகம் தெரிய பளபளக்கும் ஷூ சகிதம் செல்பவர்களை மிக மிகப் பிடிக்கும். அதுவும் ஆங்கிலம் பேசுபவர்களை கண்டால் ரொம்ப இஷ்டம்.
நாமும் படித்திருந்தால்... என்று ஏக்க பெருமூச்சு வருமே தவிர இனியாவது மேலே படிக்கலாம் என்று தோன்றாது.
ஆனால் அவனுக்கு வாய்த்த வள்ளி படித்திருந்தாள். M.Sc., முடித்திருந்தாள். பெண் பார்க்கப் போன நாளன்று அவர்களின் பேர் பொருத்தத்தை சிலாகித்து பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க, தனியே விடப்பட்ட முருகன் வள்ளியிடம் , எடுத்ததுமே " நான் ரொம்ப படிக்கல . நீ படிச்சிருக்கே. என்னை பிடிச்சிருக்கா? " என்று சந்தேகமாக கேட்டான்.
" படிக்கல . அவ்வளவுதானே. ". என்று ஈசியாக எடுத்துக்கொண்டாள் வள்ளி.
சந்தோசமானான் முருகன்.
திருமணம் முடிந்த மறு வருடமே ஆனந்த் பிறந்து விட்டான். அன்றைக்குத்தான் பிறந்த மகனை தூக்கியதுமே முருகன் சொன்னான்.
" என் புள்ளைய எப்டி வளர்க்க போறேன் பாரு"
" எப்படி ? " பெற்றெடுத்த சோர்வு நீங்காமல் வள்ளி கேட்டாள்.
" பெரிய கான்வென்ட் பள்ளிக்கூடத்துல சேர்த்து பெரிய படிப்பு படிக்க வச்சு கெட்டிக்காரனா வளர்க்க போறேன். அவன் டாடிங்கணும்.மம்மிங்கணும். எல்லார்கிட்டேயும் இங்கிலிஷ்லதான் பேசணும். வாட் இஸ் யுவர் நேம் னு யாராவது கேட்டா மை நேம் இஸ்.... னு சொல்லணும் .. சொல்வியாடா? " என்று ஒரு நாளே ஆன குழந்தையிடம் கேட்க... அது வீறிட்டு அழுதது.
" ஏன் அம்மா அப்பானு தமிழ்ல சொன்னா ஒத்துக்க மாட்டீங்களா? " கேலியாக கேட்ட வள்ளியை முறைத்தான். "
"உன்னை வேணும்னா அம்மானு சொல்லட்டும். என்னை டாடின்னுதான் சொல்லணும். சொல்லலைன்னா வாய் மேலயே போடுவேன்." என்று சீரியஸ் ஆகி அவளையும் கலவரமாக்கினான்.
" ஏங்க.. இப்பத்தானே பொறந்திருக்கு. வளரட்டும். அப்புறம் பாக்கலாம். "
வள்ளி சொன்னதும் அப்போதைக்கு சமாதானம் ஆனான் முருகன். குழந்தை வளர்ந்தது . கூடவே முருகனின் ஆசையும். எல்லாம் இருந்தும் கலைத் துறையில் சேவை செய்ய முடியாமல் போன அம்மாக்கள் தங்கள் மகள்களை எப்பாடுபட்டாவது நடிகை ஆக்கி விட வேண்டுமென்று துடிப்பது போல , தான் கற்காத ஆங்கில வழி கல்வி ஆசையை , மகன் மூலம் தீர்த்து கொள்ள முயன்றான் முருகன்.
ஆனந்த் தவழ்ந்து , அமர்ந்து , எழுந்து, நடந்து வழக்கம் போல் "அம்மா" என்றுதான் பேசத் தொடங்கினான். ஒரு நாள் வள்ளியிடம் , "அப்பாவின் மூஞ்சியில் என்னம்மா?" என்று சைகையில் கேட்டான். அப்போது முருகன் தாடி வைத்திருந்தான். வள்ளி, "தாடிடா செல்லம்." என்றாள். பிள்ளை, அப்பாவின் முதுகு வழி ஏறி , முடியை கலைத்து , கை வழி இறங்கி , மடியில் விழுந்து முகத்தை தடவி " ஹையா ... தாடி.. தாடி " என்றது . அந்த தாடியை 'டாடி' யாக எண்ணி புளகாங்கிதம் அடைந்தான் முருகன்.
ஆனந்துக்கு 3 வயது முடிந்ததுமே அவனை பள்ளியில் சேர்த்துவிடத் துடித்தான்.
" இப்பவே எதுக்குங்க ஸ்கூலுக்கு அனுப்பிட்டு.? அடுத்த வருஷம் சேர்த்தலாமே." என்றாள் வள்ளி.
" அடி போடி. அக்கம் பக்கமெல்லாம் ரெண்டு வயசிலேயே ஸ்கூல்ல கொண்டு போய் விட்டுடறாங்க. இவனை இப்பவே LKG சேர்த்தினாத்தான் ரெண்டு வருஷம் கழிச்சு ஒண்ணாவது சேர்க்க முடியும்."
" ஏங்க... அவனுக்கு இனியும் பேச்சு கூட சரியா வரல. பச்சை புள்ள தலையில பாறாங்கல்லை வச்சது போல இப்பவே எதுக்கு அவன் மூளைக்குள்ள திணிக்கணும்.? வேண்டாமே. ப்ளீஸ். "
" ஆமா எல்லா பசங்களும் ஸ்கூலுக்கு போகும்போது இவன் மட்டும் வீட்ல இருந்தா பார்க்கிறவன் என்ன நினைப்பான், என்ன கையாலாகாதவன்னு நினைக்க மாட்டானா?"
" ஏங்க.. இப்டி அடுத்தவங்கள பத்தியே யோசிக்கறீங்க. நம்ம புள்ளை. நம்ம இஷ்டம். சரி. உங்க இஷ்டப்படியே பையனை ஸ்கூலுக்கு அனுப்புவோம். ஆனா கான்வென்ட் வேண்டாம். இங்கேயே பக்கத்துல பால்வாடி இருக்கு. போய்ட்டு வரட்டும்."
" என்னது பால்வாடியா? என்னவோ அசிங்கத்தை மிதித்தார்போல முகம் சுளித்தான்.
" இந்த... மூக்கு ஒழுகிட்டு பசங்க இருப்பாங்களே . அங்கேயா..?. அய்யே "
" ஏன் உங்க பையனுக்கு மூக்கு ஒழுகாதா?... குழந்தைங்கன்னா அப்டித்தான் இருக்கும் "
" வேண்டாம். என் புள்ளை கான்வென்ட்லதான் படிப்பான்."
" அப்டி அவன் சொன்னானா? ஏங்க.. நீங்க இப்டி கான்வென்ட் கான்வென்ட்னு அலையறீங்க... ஏன் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்தா என்னவாம்?"
" அது சரி. கவர்ன்மெண்ட் ஸ்கூல நீதான் மெச்சிக்கணும். பழசான கட்டிடம், வயசான டீச்சருங்க. பாதி நாள் வேலைக்கு வர மாட்டாங்க. வந்தா ஒழுங்கா பாடமும் நடத்த மாட்டாங்க. பசங்க எக்கேடு கேட்டு போனாலும் அவங்களுக்கு கவலை இல்ல. ஆனா சம்பளம் மட்டும் பத்தலைன்னா ஸ்ட்ரைக் பண்ணுவாங்க. இப்பவெல்லாம் எவன் கவர்ன்மெண்ட் ஸ்கூல்ல சேர்த்தரான். எந்த ஸ்கூலிலேயும் இடம் கிடைக்காதவங்க தான் சேர்த்தராங்க. நம்ம காலனியில எல்லா பசங்களும் கான்வென்ட்ல படிக்குதுங்க. நம்ம பையன் மட்டும் கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிச்சா அவங்க எல்லாம் இவனை கேவலமா பார்க்க மாட்டாங்களா? "
" இதுல கேவலமா பார்க்க என்ன இருக்கு? கார்ப்பரேஷன் ஸ்கூல்ல படிக்கறது கேவலமா? நாம ரெண்டு பெரும் அங்க தானே படிச்சோம்."
" ம்...நம்ம காலம் வேற. இப்ப வேற. இப்ப கான்வென்ட்ல படிச்சாத்தான் மதிப்பே . உலகம் எங்கியோ போய்ட்டிருக்கு. அதோட வேகத்துக்கு நாமளும் மாறிதான் ஆகணும்."
" எங்க இப்டி கான்வென்ட் கான்வென்ட்னு உயிரை விடறீங்க. இங்கிலீஷ்ல படிச்சாத்தான் படிப்பா? தமிழ்ல படிச்சா என்னவாம்."
" தமிழ்ல படிச்சுட்டு நாக்கு வழிக்க சொல்றியா.? தமிழ்ல படிச்சுட்டு வெளிய வந்தா குப்பை பொறுக்கத்தான் போகணும். தமிழ் படிச்சவன் தற்குறி. ஆங்கிலம் படிச்சவன்தான் அறிவாளி. தெரிஞ்சுக்க. "
" தாய் மொழியை கேவலப் படுத்தாதீங்க. அது தாயை கேவலப்படுத்தற மாதிரி . தமிழ்ல படிச்சவங்க என்ன முன்னேறாமப் போய்ட்டாங்களா? அப்துல் கலாம் சார் கூட தமிழ்ல படிச்சவர்தான்."
கேட்பவனா முருகன்?. புரையோடிப் போன புண்ணை , மருந்து போட்டு மாற்ற முடியுமா.? வள்ளியின் பேச்சிலிருந்த நியாயத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் முருகன் இல்லை.
" நீ என்ன சொன்னாலும் சரி. என் புள்ளையை எப்படி படிக்க வைக்கணும்னு எனக்கு தெரியும். நீ பெரிய புத்திசாலி மாதிரி எனக்கு அட்வைஸ் பண்ண வேண்டாம்." என்றதோடு அந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.
ஆனாலும் பள்ளி திறக்க இன்னும் ஆறு மாதம் இருந்ததால் வேறு வழியின்றி பொறுத்திருந்தான்.
================
நகரை விட்டு கொஞ்சம் தள்ளி திவ்யமாய் நின்றிருந்த அந்த இன்டர்‌நேஷனல் பள்ளியைக் கடந்துதான் முருகன் வேலைக்கு செல்ல வேண்டும். ஐந்து வருடத்திற்க்கு முன் அந்த இடம் புல் முளைத்து காடாய் கிடந்தது. பின் குழந்தைகளை கொஞ்சம் விளையாட வைத்து, கொஞ்சம் தின்ன வைத்து, நிறைய தூங்க வைத்து அனுப்புகிற ப்ளே ஸ்கூலாக ஆரம்பித்து நடுநிலை ஆகி , உயர் நிலை ஆகி , மேல்நிலை பள்ளி ஆகி இப்போது இன்டர்நேஷனல் ஸ்கூலாக வளர்ந்து நிற்கிறது.
அவன் வேலைக்கு செல்லும்போதெல்லாம் ஒருமுறைகூட அந்த பள்ளியை திரும்பி பார்க்காமல் சென்றதில்லை. என்னவோ அந்த பள்ளியை அவனுக்கு ரொம்ப பிடித்தது. அதன் அமைப்பு அப்படி. சில ஏக்கர்களை வளைத்து உயரமாய் காம்பௌன்ட் சுவர் எழுப்பி மையமாய் இரண்டு மாடி கட்டிடம். காம்பௌன்ட் சுவர் ஒட்டி பெயர் தெரியாத உயர உயர மரங்கள் . தனித்தனியாய் மைதானங்கள் , சுற்றிலும் வலை கட்டி கிரிக்கெட் பயிற்சி, .நீச்சல் குளம்.. தங்குவதற்கு ஹாஸ்டல்., கான்டீன்.. மினி தியேட்டர் , கலை அரங்கம் எல்லாம் உள்ளேயே இருந்தது. உடன் வேலை செய்தவரின் அப்பா அங்கு செக்யூரிட்டியாக இருந்தார். அவரைக் காண்பது போல் ஒரு முறை பள்ளியின் உள்ளே சென்று பார்த்து விட்டு முருகன் ஆச்சார்யப்பட்டுப்போனான். அது வேறு ஒரு உலகம்.
கார்களிலும் இதர வாகனங்களிலும் வந்திறங்கும் குழந்தைகளை கைப்பிடித்து கூட்டிச் செல்ல ஆயாக்கள், வாசலில் உண்டாகும் வாகன நெரிசலை சீர் செய்ய மாணவரின் சாரணர் படை. மடிப்பு கலையாத சேலையும், முடி கலையாத சிறு கொண்டையுடனும் டீச்சர்கள். ஒன்று போல் நிறமுடைய பூக்களை போல சீருடையில் மாணவர்கள் , எல்லா வகுப்பறைகளிலும் ஏ சி., காமிரா , ஸ்பீக்கர் என்று இருந்தது. தமிழ் என்றே என்னவென்று தெரியாதது போல பள்ளி மூச்சுக் காற்றில் கூட ஆங்கிலத்தின் வாடையே வீசியது.
அப்படிப்பட்ட உயர் தரமான பள்ளியில் மகனை சேர்ப்பதே தன் ஆயுள் கால இலட்சியம் என்று நினைத்துதான் CVR இன்டர்நேஷனல் பள்ளியில் அப்ளிகேசன் வாங்கி வந்‌திருந்தான் முருகன்.
இனிதான் அடுத்தடுத்த பணிகளை ஆரம்பிக்க வேண்டும்.
முதல் பணியாக ஒருவரை பார்க்க காளப்பட்டிக்கு விரைந்தான். அந்த முக்கியமான விஐபி , அவனுடன் பணிபுரியும் நண்பனின் அப்பா.
அவர்தான் அந்த பள்ளியின் தலைமை பாதுகாவலர். அட்மிஷனில் அவர்க்கு கோட்டாவில் 3 சீட் ஒதுக்கி இருக்கிறார்களாம். அதில் ஒன்றை தன் மகனுக்கு கேட்கவே இந்த விஜயம். முருகன் போன போது அவர் வாசலில் உட்கார்ந்து பல் விளக்கி கொண்டே பக்கத்தில் துப்பிக் கொண்டிருந்தார்.
முருகன் தனது தணியாத தாகத்தை சொன்னதுமே,
" அடடா நேத்து வந்திருக்க கூடாதா .? என் கோட்டா முடிஞ்சு போச்சே. என் தம்பி பேரனுக்கு ஒண்ணு, உன் ப்ரண்டோட ப்ரண்டுக்கு ஒண்ணு , நமக்கு வேண்டப்பட்டவருடைய பேத்திக்கு ஒண்ணுனு ஏற்கனவே சொல்லி வச்சுட்டேனே. இப்ப என்ன பண்றது..."
பெரியவர் அங்கேயே கொப்பளித்து துப்பி விட்டு யோசிக்கலானார்.
" எப்டியாவது ஒரே ஒரு சீட் பிடிச்சு குடுங்களேன்." முருகன் கெஞ்சினான்.
" இங்க பாருங்க தம்பி. எங்க ஸ்கூல்ல ஒரு பாலிசி இருக்கு. முதல்ல.. அங்க ஏற்கனவே படிக்கிற பசங்களோட தம்பி தங்கைகளுக்கு ஃபர்ஸ்ட் சீட்டு .உங்களுக்கு எப்டி...?"
ஆனந்த் தான் தன் ஒரே குலக்கொழுந்து என்று இயம்பினான்.
" அடுத்தது...., எங்களுக்கு வேற ஸ்கூல்ஸ் இருக்கு. அதுல படிச்சவங்களோட பசங்களுக்கு தருவாங்க. "
" என்னது இவங்களுக்கு வேற ஸ்கூல் எல்லாம் இருக்கா...? அது எங்கே...?' விழித்தான் முருகன்.
" அப்ப கஷ்டம் தம்பி.. நீங்க வேற ஸ்கூல் பார்த்துக்கங்க."
" அய்யா... "
" தம்பி... உங்களுக்கு தெரியாது. எங்க ஸ்கூல்ல சேர்றத்துக்கு எத்தனை போட்டி தெரியுமா.? இந்த மாதிரி ஸ்கூல் தமிழ் நாட்டிலேயே இல்ல தெரியுமா..?. அவனவன் லட்ச ரூபா ஃபீஸ் தரேன்னு ரெடியா இருக்காங்க. எங்க ஸ்கூல் அந்த அளவுக்கு தரம் நிறைஞ்சது ."
என்னவோ CVR பள்ளியின் இலவச விளம்பரதாரர் போல பேசினார் அந்த பெரியவர்.
" அப்ப முடியாதுங்களா.? ” ஏக்கமாக கேட்டான் முருகன். கொஞ்சம் விட்டால் அழுது விடுபவன் போல அவன் முகம் கோணலானது.
" முடியாதுன்னு ஏதாவது இருக்கா தம்பி.?. உன்ன பார்த்தாலும் பாவமாதான் இருக்கு.." என்றதும் இன்னும் பாவமானான் முருகன்.
" நான் ஒண்ணு பண்றேன். வேற இன்னொருத்தர் கோட்டாவுல உங்க பையனைத் தள்ளி விட முடியுதான்னு பாக்கறேன். ஆனா அதுக்கு கொஞ்சம் செலவாகுமே..."
" எவ்வளவுங்க ? "
" அதிகமில்லை. ஒரு ஐயாயிரம்.. இது கூட எனக்கில்ல. இன்னொருத்தர்னு சொன்னேனே . அவருக்கு. என்ன சொல்றே...?"
அந்த இன்னொருத்தரும் இவர் தான் என்று அறியாத முருகன்,
" சரிங்க நான் தந்துடறேன். எப்டியாவது என் பையனுக்கு சீட் கிடச்சா போதும்." என்றான் .
" சொல்லிட்டே இல்லே. சீட் கிடைச்ச மாதிரிதான் . நீ கவலைப்படாம போ."
" ரொம்ப நன்றிங்க " கும்பிட்டு விட்டு எழுந்த முருகனிடம், " தம்பி போகும்போது முக்கு கடைல நாலு இட்லி, ஒரு சாம்பார் வடை.,, கெட்டி சட்னியோட....சொல்லிட்டு போ. காசு குடுத்தீன்னா அவங்களே கொண்டு வந்து தந்துடுவாங்க." என்றார் அந்த பெரியவர் அல்பத்தனமாக.
-----------------
முருகன் வீடு திரும்பியபோது உச்சி வெயில் மண்டையை பிளந்தது. வீட்டினுள்ளே நுழைந்தவனைக் கண்டதும் கட்டிலில் படுத்திருந்த வள்ளி எழுந்தாள்.
" என்ன படுத்திருக்கே? பையன் எங்கே? "
" அவன் பக்கத்து வீட்ல விளையாடப் போயிருக்கான். நீங்க போனது என்னாச்சு...?
அப்ளிகேசன் வாங்கிட்டீங்களா? "
" பின்னே... அய்யாவை யார்னு நினைச்சே.. வாங்காம வருவேனா? அப்ளிகேசனும் வாங்கியாச்சு. சீட்டுக்கும் ஏற்பாடு பண்ணியாச்சு. " .
" என்ன சொல்றீங்க.? "
முன் கதை சுருக்கத்தைச் சொன்னான் முருகன்.
" எல்லாம் சரிங்க .. ஃபீஸ் எவ்வளவு? "
" வருஷத்துக்கு 65000 ரூபாய். அதுல 25000 ரூபாய் டொனேசன். ரசீது தர மாட்டாங்க . ஸ்கூல் பஸ்க்கு 12000 ரூபாய் . அப்புறம் டிரெஸ் , புக்ஸ்க்கு தனி. டியூசன் ஃபீஸ் தனி அங்கியே லன்ச் சாப்டா அதுக்கு தனி... வேற ஏதாவது கராத்தே , நீச்சல்னு கத்துக்கணும்னா அதுக்கு தனி .. "
அனுமாரின் சுருட்டாத வால் போல முருகன் சொல்லிக்கொண்டே போக வள்ளி வாயடைத்து போனாள்.
" என்னங்க சொல்றீங்க.ஒரு மூணு வயசு பையனை LKGல சேர்க்கறதுக்கு இவ்வளவு ஃபீஸா ?"
" ஆமாம். ஏன் ?"
" ஏங்க... சின்ன குழந்தைக்கு அ..னா ஆவன்னா வும் ABCD யும் கொஞ்சம் கணக்கும் பாட்டும் கதையும் சொல்லி தர லட்ச ரூபாயா. !? . பகல் கொள்ளையா இருக்கே.
" பின்னே அந்த ஸ்கூல்ல சேர்ககறதுன்னா சும்மாவா.? எப்பேர்பட்ட ஸ்கூல் அது.! நீ காலைல வந்திருக்கணும் அப்ளிகேசன் வாங்கறதுக்கே அந்த கூட்டம்.. அவனவன் எத்தனை செலவானாலும் பரவாயில்லன்னு சீட் கிடைக்க ட்ரை பண்றாங்க. நமக்கு பிரச்னை இல்லை. என் ப்ரண்டோட அப்பா கண்டிப்பா சீட் வாங்கி குடுத்துருவாரு."
" சும்மாவா.. 5000 லஞ்சமில்லே.
" வேற என்ன பண்றது வள்ளி. நமக்கு வேற யாரையும் தெரியாதே ".
" ஆனாலும் இது ரொம்ப ஓவர்ங்க. நம்ம நிலைமைக்கு இத்தனை ஃபீஸ் கட்டி படிக்க வைக்கணுமா.? நான் வேணாம்னு சொன்னாலும் கேக்க மாட்டேங்கறீங்க.."
" நம்ம பஞ்ச பாட்டு என்னைக்கு தீர போகுது? அதுக்காக பையனோட எதிர் காலத்தை யோசிக்க வேணாமா. ? கொஞ்சம் சிரமப் பட்டுத்தான் ஆகணும்."
" கொஞ்சமா.?! லட்ச ரூபா உங்களுக்கு கொஞ்சமா? உங்க பத்து மாச சம்பளம்ங்க "
" ஒரேயடியா ஃபுல் ஃபீஸ்சும் கட்டணும்னு இல்லே. மூணு மாசத்துக்கு ஒரு தடவை கட்டினா போதும்."
" அப்போ ஒரு 50000 ரூபாயாவது இப்ப தேவை. அப்படிதானே என்ன பண்ண போறீங்க? "
" கம்பனியில அட்வான்சு கேக்கறேன். உன் நகை எதையாவது அடகு வைக்கலாம் . இல்லே யார் கிட்டயாவது கை மாத்து வாங்கலாம் ".
" அது சரி. நீங்க கேட்டவுடனே உங்க கம்பனியில அட்வான்ஸ் தருவாங்களா.? உங்க தங்கச்சி கல்யாணத்துக்கு வாங்கின கடனே இன்னும் பாக்கி இருக்கு. என் நகைகூட பாங்க்லதான் இருக்கு."
" சரி . நான் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு பாக்கறேன். நீயும் உனக்கு தெரிஞ்சவங்க கிட்ட கேட்டு பாரு."
" எனக்கு யாரை தெரியும்.?"
" ஏன்.. உங்கப்பாவை கேட்டு பாரு." அசால்டாக முருகன் சொல்ல , அதிர்ந்தாள் வள்ளி.
" எங்கப்பாவையா..? அவரே ரிடையர்ட் ஆகி வீட்ல இருக்கார். பென்சன்லதான் ஜீவனம் நடத்தறார் . அவர்கிட்ட போய் எப்டி..?.
தயங்கியபடி வள்ளி கேட்க , எரிச்சலானான் முருகன்.
" அவரே குடுத்தாலும் நீ வேண்டாம்பே போல. பென்சன் எல்லாத்தையுமா செலவு பண்ணிட போறாரு. ஏதோ கொஞ்சமாவது சேர்த்து வச்சிருப்பாரு . கேட்டு பாரேன்,.
" உங்க வீண் ஜம்பத்துக்கு அவரை ஏங்க கஷ்டப்படுத்தறீங்க? "
" அவர் ஒண்ணும் சும்மா தர வேண்டாம். கடனா தர சொல்லு.".
" உங்களயும் கஷ்டப்படுத்திட்டு அடுத்தவங்களயும் எதுக்குங்க சிரமப் படுத்தறீங்க.? சொந்த காசுல படிக்க வைக்க கைலாகாத உங்களுக்கெல்லாம் எதுக்கு வெட்டி பந்தா.? அங்க காசு புடுங்கறாங்கன்னு தெரிஞ்சும் கொண்டு போய் கொட்டுகிற உங்களை மாதிரி முட்டாள்களை நினைச்சாலே எனக்கு பத்திட்டு வரு... "
வள்ளி முடிக்கும் முன்னரே முருகன் அவளை ஓங்கி அறைந்தான்.
" என்னடி ஏத்தமா ? நான் முட்டாளா? நீ பெரிய புத்திசாலியா?. ஓவரா பேசினே.. நாக்கை இழுத்து வச்சு அறுத்துடுவேன். ஜாக்கிரதை. இன்னைக்கே நீ ஊருக்கு கிளம்பறே .உங்கப்பா கிட்ட பணம் கேக்கறே. லேட் ஆனாலும் பரவாயில்லை. இருந்து வாங்கிட்டு வந்தா போதும். வரும்போது பணத்தோடதான் வர்றே. புரிஞ்சுதா.?" உறுமி விட்டு வெளியேறியவன் மாலை வீடு திரும்பும்போது வள்ளி அவள் அப்பாவைப் பார்க்க கிளம்பி போயிருந்தாள்.
அடுத்த ரெண்டு நாட்களிலும் அவன் பணத்துக்காக அலைந்ததில் வண்டி சக்கரம்தான் தேய்ந்தது. பணம் தேறவில்லை. கடன் கேட்டுப் போன இடங்களில் எல்லாம் எதற்கு என்று தெரிந்ததும் உனக்கு இது தேவையா என்பது போல் பார்த்தனர். ஆனாலும் கொஞ்சம் தேறியது . கம்பனியிலும் சொற்ப பணமே அட்வான்சாக கிடைத்தது. கிடைத்ததை நண்பனின் அப்பாவிடம் கொண்டு போய் சமர்ப்பித்து அட்வான்ஸ் புக்கிங் செய்துகொண்டான்.
வள்ளி போன மூன்றாம் நாள் காலை அவனைத் தேடி ஒரு கடிதம் வந்தது . வள்ளிதான் எழுதி இருந்தாள்
ஆனந்தின் அப்பாவுக்கு,
என் அப்பா 25000 ரூபாய் பணம் எப்படியாவது ஏற்பாடு செய்து தருகிறேன் என்றிருக்கிறார். வயதான காலத்தில் அவர்க்கு இது பெரும் சுமைதான். எப்படி இந்த கடனை அவர் அடைப்பார் என்று தெரியவில்லை. ஆனாலும் என்ன... அருமை மருமகன் , அவருடைய பேரனின் ஒளி மயமான எதிர்காலத்திற்காக கேட்கும்போது தட்ட முடியுமா? தருவார். நீங்கள் சொன்னது போலவே இருந்து வாங்கி விட்டுதான் வருவேன்.
முக்கியமாய் ஒன்று சொல்ல வேண்டும்.
இந்த விஷயத்தை போனிலேயே சொல்லி இருக்கலாம்தான். ஆனால் நீங்கள் உடனே தடுத்து நிறுத்த இங்கு வரலாம். அதனால்தான் கடிதத்தில் எழுதுகிறேன். நேற்றிலிருந்தே எனக்கு முடியவில்லை. தலை சுற்றலும் குமட்டலுமாக இருந்தது. ஏற்கனவே அனுபவம் இருந்ததால் எனக்கு புரிந்து விட்டது. நான் மீண்டும் கர்ப்பமாக இருக்கிறேன். அப்பாவிடம் சொன்னேன். அவர்தானே எனக்கு அம்மாவும் கூட. சந்தோஷப்பட்டார். ஆனால் எனக்கு சந்தோஷமில்லை .
ஒரு சாதாரண LKG படிக்க வைப்பதற்கே லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டி இருக்கும் இன்றைய சமூக சூழ்நிலையையும், கல்வி போதிப்பதை விபசாரம் போல் இந்த அளவுக்கு கேவலமாக்கி , கல்விக்கூடம் என்கிற பேரில் இயங்கும் முகம் மூடாத திருடர்களின் பகல் கொள்ளை என்று தெரிந்தும் கூட தமிழ் கற்பது கேவலம் , ஆங்கிலமே அறிவு தரும் என்கிற முட்டாள் தனமாக எண்ணி கொண்டு வெட்டி பந்தாவுடன் அங்கேயே சேர்க்க அலையும் நம்மை போன்றவர்களுக்கு , அரசு பள்ளிகளில் சேர்த்தால் தன்னை எவனும் மதிக்க மாட்டான். தன் பிள்ளைக்கு தாழ்வு மனப்பான்மை வரும் என்றெல்லாம் வீண் கற்பனைகளில் மூழ்கி நாசமாய்ப் போக தயாராய் இருக்கும் நமக்கு, ஒரு வருட படிப்பிற்கே மனைவியின் நகையை அடகு வைத்து , கம்பனியில் அட்வான்ஸ் வாங்கி, வயசான மாமனாரிடம் கடன் வாங்கினால்தான் முடியும் என்கிற நிலையில் உள்ள நமக்கு, தன்மானம் என்கிற முள் கிரீடத்தை தலையில் சுமந்து கொண்டு கீழே இறக்கி வைக்க மனமும் இல்லாமல், மேலே செல்ல பணமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் நடுத்தர திரிசங்குகளான நமக்கு, இன்னொரு குழந்தை தேவையா என்று எண்ணி பார்த்தேன் . தேவையே இல்லை என்று முடிவு செய்து... அழித்து விட்டேன். ஆம். அபார்ஷன் செய்து கொண்டேன். மேலும், இந்தக் குழந்தையென்ன.. இனிமேல் நமக்கு குழந்தையே பிறக்கக்கூடாது என்றும் முடிவு செய்து ஆபரேஷனும் செய்து கொண்டேன்.
நீங்கள் எதற்கும் கவலைப் பட வேண்டாம்
என் எழுத்து உங்களை வந்தடையும் போது நான் வீடு திரும்பிக் கொண்டிருப்பேன் அப்பா தந்த பணத்துடனும் , அபார்ஷன் செய்து கொண்ட உடம்புடனும்.. வள்ளி.

( முற்றும் )

எழுதியவர் : கே.ரவிச்சந்திரன் (29-Sep-14, 2:47 pm)
சேர்த்தது : k.ravichandran
பார்வை : 254

மேலே