அ ஃபார் அம்மா சிறுகதை
சில விநாடிகள் அழைப்புமணி அழுத்தலுக்கு பின் கதவை திறந்த வேலைக்காரியிடம் வினவிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தாள் ரம்யா.
" ஆயா .. அய்யா வந்துட்டாரா? "
" வந்துட்டாரும்மா . அவரு ரூம்ல கம்ப்யூட்டர்ல என்னவோ பண்ணிட்டிருக்காரு.." சொல்லி கொண்டே ரம்யாவிடம் இருந்து கைப்பையை வாங்கிகொண்டாள் ஆயா.
" சரி. சுஜி சாப்பிட்டாளா? "
" இல்லம்மா . சாப்டலை "
ரம்யா கடிகாரத்தை பார்த்தாள். .
" வாட் !.. இன்னுமா சாப்பிடலை.?மணி 8 ஆச்சு.போ..போய் சாப்பிடச்சொல்லு "
" இல்லம்மா. பாப்பா, நீங்க வந்ததும் சாப்பிடறேன்னு சொல்லுச்சு. அதான்..."
ரம்யா சலித்துக் கொண்டாள்.
" என்ன ஆயா இது... அவ என்ன பச்சை குழந்தையா ? அஞ்சு வயசாச்சு. நாளைக்கு ஒரு ஃபேமஸ் கான்வென்ட்ல சேரப் போறா. இன்னுமென்ன ? நான் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணிட்டு. போ. டிலே பண்ணாம போய் சாப்பிடச்சொல்லு."
" சரிம்மா. சொல்றேன். கேக்குமான்னு தெரியல . உங்களுக்கு டிஃபன் எடுத்து வைக்கவா? "
ரம்யா ஆயாசத்துடன் சோபாவில் விழுந்தமர்ந்தாள் .
" வேண்டாம் ஆயா. ஒரு கப் ஹார்லிக்ஸ் மட்டும் குடு போதும். நான் ஃப்ரெஷ் ஆயிட்டு வந்துடறேன். "
முகம் கழுவி பூத்துவாலையால் முகத்தை துடைத்தபடி ரம்யா , மோகனின் அறைக்கு திரும்பியபோது அவன் தன் லேப்டாப்பில் என்னவோ நோண்டிக் கொண்டிருந்தான் .
" என்ன மோகன் ... ட்விட்டரா ?
" எஸ் டியர் . நீ வர்ற வரைக்கும் என்ன பண்றது ? போர் அடிச்சுது . அதான். ஆமா என்ன இன்னைக்கு இவ்வளவு லேட் ...?
" என்னங்க பண்றது.. எங்க லேடீஸ் க்ளப்ல வர்ற சண்டே எலெக்சன் நடக்குது இல்லையா? அதனால நான் ஆபீஸ் முடிஞ்சுட்டு என் க்ளப் மெம்பர்ஸ் வீட்டுக்கு நேரா போய் கேன்வாஸ் பண்ணிட்டு வரேன். "
ஆயா, மோகன்-ரம்யாவுக்கு ஹார்லிக்ஸ் கொண்டு வந்து தந்து விட்டு " பாப்பாவுக்கும் பசி இல்லயாமாம்மா. டிபன் வேண்டாம்னு சொல்லிடுச்சு". என்று விட்டு நகர்ந்தாள்.
" ஓ நோ இவளோட..." என்று ஆரம்பித்த ரம்யா சட்டென்று நினைவு வந்தவளாக,
" ஏன் மோகன் நாளைக்கு நம்ம சுஜிக்கு ஸ்கூல் அட்மிசனுக்கு போகணுமே. கான்வென்ட்ல நடக்கப்போற இன்டர்வியூவுக்கு கொஸ்டின் பேப்பர் ரெடி பண்ணி தந்தேனே. சுஜி ஒழுங்க ஆன்சர் பண்றாளான்னு செக் பண்ணிட்டீங்களா ?." என்றாள்.
மோகன் உதட்டை பிதுக்கினான்.
" எங்கே ரம்யா எனக்கு அதுக்கெல்லாம் நேரம்? ஆபீஸ் வொர்க் சரியா இருக்கு. முக்கியமான ப்ராஜெக்ட் ஒண்ணு போய்ட்டிருக்கு. அதுக்கான பேப்பர்ஸ் ரெடி பண்றதுக்கே எனக்கு டைம் பத்தலே. இதுல இது வேறயா... ? ப்ளீஸ் சுஜி மேட்டரை நீயே பார்த்துக்கயேன். "
" ஓகே . வேற என்ன பண்றது . அவ சரியா ஆன்சர் பண்ணலைனா நம்ம ப்ரெஸ்டீஜ் தானே டேமேஜ் ஆகும். நானே பார்த்துக்கறேன். "
தோள்களை குலுக்கிக் கொண்டே ரம்யா , மோகனை விட்டு விலகி சுஜியின் அறைக்குள் நுழைந்தபோது சுஜி கட்டிலில் குப்புறப் படுத்து என்னவோ படித்துக் கொண்டிருந்தாள்.
" சுஜி... "
" என்னம்மா..." என்று எழுந்தவளை அதட்டினாள் ரம்யா.
" ஏய் சுஜி .. என்னை அம்மான்னு கூப்பிடாதேன்னு எத்தனை தடவை சொல்லிருக்கேன் . என்ன பழக்கம் இது ?. பட்டிக்காட்டு பசங்க மாதிரி அம்மா ஆட்டுக்குட்டினு... ச்சே... ஐ டோண்ட் லைக் தட் . ஸ்டைலா மம்மினுதான் என்னை கூப்பிடணும். ஓகே... "
" சரிம்ம்.. சாரி... சரி மம்மி.."
" அதென்ன கையிலே..." வாங்கி பார்த்த ரம்யா அந்த புத்தகத்தை ஓரமாய் விட்டெறிந்தாள்.
" நாளைக்கு கான்வென்ட்ல சேர போற நீ. இப்ப போய் இந்த மாதிரி தமிழ் புக் படிச்சிட்டிருக்கே. யார் குடுத்தா இதை? "
" ஆயா மம்மி. அவங்க வீட்டிலேயும் என்ன போல ஒரு பாப்பா இருக்குதாம். அதோடதுதான். "
" ஆயாவோட பேத்தியோடதா இருக்கும். லுக் சுஜி.. நீ இங்கிலிஷ் கான்வென்ட்ல படிக்கப் போறே. இது போல தமிழ் புக்ஸ் உனக்கு வேண்டாம். ஓகே. நாளைக்கு உனக்கு ஸ்கூல்ல இன்டர்வ்யூ இருக்கு. நான் குடுத்த கொஸ்டின் ஆன்சர் படிச்சிட்டியா.?"
" படிச்சிட்டேன் மம்மி .."
" எங்கே சொல்லு... வாட் இஸ் யுவர் நேம்...? "
" மை நேம் இஸ் சுஜிதா..."
" வாட் இஸ் யுவர் ஃபாதர்..."
ரம்யா கேட்டு கொண்டே போக... சாவி கொடுத்த பொம்மை போல சுஜிதா மனப்பாடம் செய்து கரைத்து குடித்ததை வாந்தி எடுத்துக்கொண்டே வர,... ரம்யா திருப்தியானாள்.
" இங்கே ஒப்பிக்கறது ஓகே. பட் அங்க வந்து ராங்கா ஆன்சர் பண்ணி மானத்தை வாங்காதே. சரியா. "
சுஜி யின் சின்ன பூ போன்ற முகம் சிறுத்து போக .,,,
" ஓகேம்... ஸாரீ ஓகே மம்மி..." என்றவளிடம், " குட் கேர்ள். டிஃபன் வேண்டாம்னு சொன்னியாமே. அட்லீஸ்ட் ஒரு கப் மில்க் குடிச்சுட்டு படுத்துக்கோ.." என்றுவிட்டு எழுத ரம்யா தங்கள் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள்.
================
மறு நாள்.
காலை 11 மணிக்கு ..
மோகன்-ரம்யாவோடு சுஜியும் , ஆயா உடுத்திவிட்ட அழகான உடையோடும்., பின்னிவிட்ட ரெட்டை பின்னலோடும் அந்த உயர் தரமான பள்ளியில் இருந்தாள். பியூன் கதவை திறந்து விட, அவர்கள் நுழைந்த அறைக்குள் நீள அகலமான மேசைக்கு பின்னால் இருந்து வரவேற்ற தலைமை ஆசிரியை வயதானாலும், ஒப்பனை இல்லாமல் அழகாக இருந்தார்.
" குட் மார்னிங் மேடம். ஐ யம் மோகன், ஷீ இஸ் மை வைஃப் ரம்யா... திஸ் இஸ் அவர் டாட்டர்."
அந்த அம்மாள் புன்னகையோடு சுஜியை அழைத்தார் .
" கம் டியர். "
" போ. மேடம் கூப்பிடறாங்க இல்லே. " தன் பின்னே மருண்ட விழிகளோடு ஒதுங்கிய சுஜியை இழுத்து முன்னே நகர்த்தினாள் ரம்யா.
ரம்யா அந்த அம்மாளின் முன் இருந்த சேரில் ஏ...றி அமர்ந்தாள்.
" வாட் இஸ் யுவர் நேம் டியர் ?"
" மை நேம் இஸ் சுஜிதா."
" வாட் இஸ் யுவர் ஃபாதர் நேம் ?"
" மோகன் "
" வாட் இஸ் யுவர் ஃபாதர் ?"
" ஹீ இஸ் ஏ பிசினஸ் மேன்."
" வெரி குட். நல்ல பதில் சொல்றாயே ." அந்த அம்மாள் பாராட்ட , ரம்யாவுக்கு பெருமை பிடிபடவில்லை.
" சரி . சுஜிக்கு என்னவெல்லாம் பிடிக்கும் "
அந்த அம்மாள் கேட்க சுஜி விழித்தாள்
" தெரியல மிஸ் "
" என்னது தெரியலயா? "
" மம்மி தந்த கொஸ்டின் ஆன்சர்ல இந்த கொஸ்டின் இல்ல மிஸ்."
" ஓ டியர் . இது இன்டர்வியூ கொஸ்டின் இல்லே. பயப்படாம சொல்லு. சுஜி குட்டிக்கு என்ன பிடிக்கும்?"
" ம்...மில்கி பார் சாக்லேட் , மஞ்ச பலூன் , கரடி பொம்மை , பட்டாம் பூச்சி , வெண்ணிலா ஐஸ்க்ரீம்.."
" அப்புறம்..."
" அப்புறம் எங்க ஆயாவை பிடிக்கும்.."
" ஆயான்னா உங்க பாட்டியா ?"
" இல்ல எங்க வீட்டுல வேலை செய்யறாங்க ஆயா."
" ஏன் உனக்கு அம்மா அப்பாவை பிடிக்காதா...? "
அந்த அம்மாள் கேட்டதும் முகம் இறுகிப்போய் சொன்னாள் சுஜி.
" பிடிக்கவே பிடிக்காது "
மோகனும் ரம்யாவும் முகம் வெளிறிப்போனார்கள்.
" ஏய் சுஜி... என்ன உளரறே? " ஆத்திரத்துடன் எழுந்த ரம்யாவை அடக்கினாள் அந்த அம்மாள்.
" பி காம். மிஸஸ் ரம்யா. சுஜி செல்லம் நீ சொல்லுடா. ஏன் பிடிக்காது..? " .
" அப்பா ஆபீஸ்க்கு போவாரு. வருவாரு. வந்தா கம்ப்யூட்டர்ல ஏதாவது பண்ணிட்டிருப்பாரு. அம்மாவும் வேலைக்கு போய்டுவாங்க. கிளப்னு எல்லாம் போய்ட்டு நைட்தான் வருவாங்க. என் கூட இவங்க இருக்கறதில்லே. பேசறதில்லே. நான் என்ன சொன்னாலும் கேக்க டைம் இல்லங்கறாங்க. அதனால இவங்களை எனக்கு பிடிக்கவே இல்ல. ஆனா எங்க ஆயாதான் என்னை குளிப்பாட்டும் . எனக்கு சோறு ஊட்டும். கதை சொல்லும்., என்கூட விளையாடும். நான் பேசினா நல்லாக் கேக்கும்.அதனால எனக்கு ஆயாவை மட்டும் தான் பிடிக்கும். அப்புறம்... "
" சொல்லும்மா."
" மிஸ் . வீட்டுல இவங்க என்னை மம்மி டாடினு கூப்பிட சொல்றாங்க. நான் அம்மா, அப்பானு கூப்பிட்டா திட்டறாங்க. எனக்கு அப்டித்தான் கூப்பிடப் பிடிக்குது. மம்மி டாடினு இங்கிலிஷ்ல கூப்பிடப் பிடிக்கல மிஸ். மிஸ் எனக்கு ஏ ஃபார் ஆப்பிள்.. பீ ஃபார் பாய் னு போட்ட புக் வேண்டாம் மிஸ். எங்க ஆயா தந்தது போல அ.... அம்மா ஆ.... ஆடுனு இ.... இலை னு போட்ட தமிழ் புக் தான் வேணும். அப்பாகிட்ட வாங்கி தர சொல்லுங்க மிஸ் ப்ளீஸ்..."
சுஜி வயதுக்கு மீறிய அறிவுடன் கெஞ்ச... ஸ்தம்பித்து போயினர் மற்ற மூவரும்.
(முற்றும்)