பரிதி தனராஜ்
காந்தியும் மனிதர்தானா ,அவரைப்
படைத்ததும் கடவுள் தானா ,
கூம்பிய வாளின் உறையாம்-அவர்
கொள்கைகள் நிரம்பிய மறையாம் ! 1
சத்தியம் வழியே நின்றார் -காந்தி
சாத்தியக் கொள்கையை ஈன்றார் !
கத்தியும் பணியக் கண்டார் ,அவரைக்
குத்திய நெஞ்சையும் வென்றார் ! 2
எல்லாம் இருந்தும் ஏழ்மை ஏற்றார்
எளிய வாழ்வில் தனையே வதைத்தார் !
பொல்லா சிறைகள் முள்ளாய் வருத்தியும்
விடுதலை ஒன்றே தான் விரும்பிய தென்றார் ! 3
இம்சைகள் கோடி இமயமாய் நின்றார்
அகிம்சை ஒன்றே ஆயுதம் என்றார் !
அந்நிய ஆங்கில ஆலமரத்தை அதன்
அடி வேரறுத்து வீழச் செய்தார் ! 4
விடுதலை பெற்ற பாரதம் கண்டார்
மத வெடிப்பில் மனம் துடிக்க நொந்தார் !
படு கொலையாகிப் பலியானார்
பாரினுள் ஒளி தரும் பரிதி ஆனார் !