ஓர் காதலின் கடைசி நிமிடங்கள்

((ஓர் உண்மை காதலில் தோற்ற காதலன் தனது வாழ்நாள் இறுதி நிமிடத்தில் சாய்வு நாற்காலியில் படுத்துக்கொண்டு காதலியின் வருகைக்காக காத்திருந்த தருண நிமிடங்கள்....))

என் வயதை விட
சற்று வயது அதிகம்தான்
என் சாய்வு நாற்காலிக்கு....

நான்கு கால்களில்
இரண்டு கால் என்
கடைசி இழுவை சத்தம் போல்
அதுக்கும் இழுத்துக் கொண்டுள்ளது....

நான் இறந்துவிட்டால்
என் நாற்காலிக்கும் அதுவே
இறுதி நாள் எனக்கு தெரியும்....

என்னை சுற்றிலும்
ஏக்கத்துடன் நிற்கும்
எனது உறவினர்கள்
இன்னும் சில மணி நேரம்
என் மூச்சு காற்று நீடித்தால்
அவர்களே நிறுத்தி விடுவார்கள்....

ஏன் இந்த போராட்டம்
எனக்கும் எமனுக்கும்.??...
எனக்கும் தெரியும் எமனுக்கும் தெரியும்
அது என்னவள் வருகைக்காக என்று....

என் கடைசி மூச்சு காற்றால்
தகவல் சொல்லி அனுபிருக்கேன்
அவள் நிச்சயம் வருவாள்....

இந்த நாற்காலிக்கு
அருகில் இருக்கும் ஜன்னல்
யாருக்கு தெரியும் அது பலநாள்
என்னவள் வருகைக்காக திறந்தே இருந்தது
இன்றும் அப்படிதான் திறந்திருக்கிறது....

அவளுக்காய் காத்திருப்பது சுகம்தான்
ஆனாலும் இன்று
கொஞ்சம் கஷ்டமாக உள்ளது.....

என உயிர் போகும் நேரம்
அவளை பார்த்துக்கொண்டே என்றால்
அவளிலாமல் நான் வாழ்ந்த
நரக வாழ்க்கையும் சொர்க்கமாகும்....

என் காதலின் முதல் நிமிடம் முதல்
அவளுக்காய் சில சேமிப்புகள் என்னிடத்தில்
அதை அவளிடம் சேர்த்துவிட்டால்
இனிதே முடியும் என் காதலின் கடைசி நிமிடம்...

மூன்று வயதில்
விழுந்த அவளின் தெத்து பல்
எனது முதல் சேமிப்பு
பதினாறு வயதில் அவளின்
திருமண அழைப்பிதல்
எனது கடைசி சேமிப்பு....

இப்போது தெரிந்திருக்கும்
என் காதலுக்கு வயதென்ன என்பது.....

இதற்கிடையில்
அவள் வளையலின் சிறு துண்டு
இலவம்பஞ்சு முடி கொஞ்சம்
கால் தவறிய கொலுசு மணி
அவள் பருவ புருவத்திற்க்கு மை
தடவிய சிறு குச்சி
என் விரல் பட்டு கிழிந்த அவள் தாவணியின்
சிறு பாகம்
இதுவே எனது கூடுதல் சேமிப்புகளாய்.....

இன்று இவை அனைத்தையும்
கைப்பற்றி போக அவள் வருவாளா.?...
இல்லை என் உயிர் போகும் நேரம்
அவளும் இப்படி சேமிப்பேன என் கையில் தருவாளா...?..

அவள் வரும் வழி பார்த்தே
என் உயிர் போகும் வழி காத்துகிடகிறது
காலம் கடந்து அவள் வந்தால்
எங்கள் காதல் மெல்ல தவழ்ந்து எனை எழுப்பும்….

ஒருவேளை நான்
இறந்துவிட்டால் இன்றும்
அவள் மௌனமாய் அழுவாளோ
இல்லை வாய்விட்டு கதறி அழுவாளோ.?..
என்று எண்ணி கொண்டே என்னுயிர் பிரிந்தது.....

இன்றும் என்னை ஏமாத்திவிட்டாள்
எப்போதும் போல....

என் உடல் போகும்
வழியெங்கும் அவளை திட்டிக்கொண்டே சென்றது
என் பாடை சத்தமும் மேள சத்தமும்....

எங்கள் காதல் வளர்ந்த தெருமுழுவதும்
என் உடலின் இறுதி ஊர்வலம்
அவளை மட்டும் காணவில்லை....

இறுதியாய் சுடுகாட்டில்
என் உடல் தீமூட்டபட்டது....

என் உடல் எரியும் பக்கத்தில்
ஓர் உடல் எரிய கண்டேன்
விரைத்து எழுந்து பார்த்தேன்
பாவிமக எனக்கு முன்னாடியே
எரிந்துகொண்டிருந்தாள்....

எழுதியவர் : பாலமுதன் ஆ (29-Mar-11, 9:22 am)
பார்வை : 1299

சிறந்த கவிதைகள்

மேலே