தலைவியின் காத்திருப்பு
முத்துமணி கோர்த்துவச்சி
மூனுவருசம் ஆகிடுச்சி
முத்தழகன் வருகைக்காக
முத்துமணி காத்திருக்கா...
கருகமணி கோர்த்துவச்சி
காலம் ஓடிப்போயிடுச்சி
கட்டழகன் வருகைக்காக
கயல்விழியோ காத்திருக்கா...
வைரமணி கோர்த்துவச்சி
வருஷம் கடந்து போயிடுச்சி
வாஞ்சிநாதன் வருகைக்காக
வஞ்சிக்கொடி காத்திருக்கா...
பாசிமணி கோர்த்துவச்சி
பத்துமாசம் ஆகிடுச்சி
பாரியவன் வருகைக்காக
பாசமுல்லை காத்திருக்கா...
செம்பவள மாலைக்கட்டி
சேர்த்துவச்சி நாளுமாச்சி
செந்தமிழன் வருகைக்காக
செங்கமலம் காத்திருக்கா...
துளசிமணி மாலைகட்டி
வச்சிருக்கா பூட்டுபூட்டி
துளசிதாசன் வருகைக்காக
துளசிபொண்ணு காத்திருக்கா...
அணிச்சைமலர் மாலைகட்டி
அத்தனையும் காஞ்சிபோச்சி
ஆணழகன் வருகைக்காக
அல்லிராணி காத்திருக்கா...
அன்பாலே மாலைகட்டி
ஆசைகளை நெஞ்சில்கட்டி
அத்தைமகன் வருகைக்காக
அன்னக்கொடி காத்திருக்கா...
கண்ணிரண்டில் தேடல்கொண்டு
மனதினிலே காதல்கொண்டு
மாலையிட மாமன் வரும்
நாளையென்னி காத்திருக்கா...
காலம் நீண்டு போகுதுங்க
கைவளையல் கழலுதுங்க
பசலைநோயால் தான் மெலிந்து
பாவிமக காத்திருக்கா...!
பிரியாராம்.