தலைவியின் காத்திருப்பு - 2
பள்ளிக்கூடம் போகையிலும்
பார்த்து பார்த்து ரசிச்ச மச்சான்
பக்கத்துல வாழாம
பாவி நீயும் போனதெங்கே...
சிறுக்கி இவ சமஞ்சானு
சீர்செனத்தி கொண்டுவந்து
தென்னையோலை வீடு தந்த
மொரமச்சான் போனதெங்கே...
தெருவில் நடக்கையிலே
தெரியாத இளவட்டம்
ஜாடை பேசுதய்யா
காதல்வலை வீசுதய்யா...
ஒன்ன நெனச்சிதானே
உசுர வச்சிருக்கேன்
ஒலக மறந்துருக்கேன்
ஒடிஞ்சி மெலிஞ்சிருக்கேன்...
தலகுனிஞ்சி நடந்தாலும்
தரையெல்லாம் ஒம்முகம்தான்
தண்ணிநான் குடிச்சாலும்
தாகமெல்லாம் உன்னிடம்தான்...
கம்மாக்கரையோரம்
கண்ணடிச்சிப் போனீரே - உன்
கண்ணு பட்டமனம் கலங்கி கிடக்குதய்யா
காத்திருந்து சாகுதய்யா...
ஆத்தங்கரையோரம் ஆசைகளை சொன்னீரே
ஆசமரம் மொளைச்சி
ஆலம்போல் நிக்கிதய்யா
அத்தானை தேடுதய்யா...
காத்திருந்து காத்திருந்து
கண்ணிரண்டும் பூத்து போச்சி
கலர் கலராய் தெரிஞ்ச படம்
கருப்புவெள்ளை யாகிப்போச்சி...
சமஞ்சி நாளாச்சி
சடங்கு நடந்தாச்சி
கலியாணம் எப்போன்னு
ஊரும் பேசுதய்யா ஒளறி கொட்டுதய்யா...
மச்சான் எப்போ வருவாக
மாலையுந்தான் தருவாக
தோழிகளும் கேட்குறாக
தொல்லையும்தான் செய்யுறாக...
ஊமைச்சிநான் என்ன சொல்ல
ஒன்னும் தெரியலையே
ஒதட்டுவர வந்த வார்த்த
உதிர்ந்து தொலையிலையே...
எம்மனசில் நீ இருக்க
ஒம்மனசில் நானிருக்கேன்
கெழவி ஆனாலும்
ஒனக்காகதா னிருப்பேன்...
பட்டுன்னு வந்துடுங்க
பட்டுசேல தந்துடுங்க
பருவம் தவறிடாம
பத்திரிக்க அடிச்சிடுங்க...!
பிரியராம்.