எங்கள் வீட்டு கண்காட்சி

நேற்று இரவு அம்மாவும், அப்பாவும் ஏதோ
மெல்லமாக பேசிக்கொண்டார்கள்...!!!
பக்கத்து வீட்டு அக்கா வேறு, ஒரு மாதிரியாக
பார்த்து சிரித்து வைத்தாள்..!!
பார்க்கும் பொழுதெல்லாம் சடையை இழுத்து விடும் அண்ணன்,
அன்று ஏனோ, தலையை மெலிதாய் கலைத்து விட்டு போனான்.. !!

அம்மா கைப்பிடித்து தூங்கும் நாட்களில்,
"சின்ன குழந்தையா நீ?, ஒழுங்கா தூங்கடி"
என திட்டி விட்டு திரும்பி படுக்கும் அம்மா,
அன்று ஏனோ, என் கைப்பிடித்து தூங்கி போனாள்..!!

அம்மா, அடுத்த நாள் காலையில் தான், அந்த வெடிகுண்டை தூக்கி போட்டாள்..!
"திவ்யா, நம்ம சொந்தகாரங்க இங்க கோயில் பார்க்க வராங்க,
அப்டியே உன்னையும் பாத்துட்டு போலாம்னுனுனு"
அம்மா இழுத்த இழுவையில், என் இதயம் கொஞ்சம் இடம் மாறி தான் போனது.. !!

என் வீட்டில் மட்டும் தான் நிலநடுக்கமா? கொஞ்சம் வீடு ஆடுவது போல் தான் இருந்தது..!!
ஆக, என் வீட்டில் இன்று கொலு, நான் தான் கொலு பொம்மையா..!?
பட்டு சேலை, சிறு அட்டிகை, பூ சகிதம்
கொலு பொம்மை தயாராகி விட்டிருந்தது..!!
வந்த அனைவரும் ஒரு சேர என்னை பார்த்தார்கள்..!!
முதல் முறை மேலிருந்து, கீழாக இரண்டாம் முறை கீழிருந்து மேலாக..,
ஒரு மண் கடிகாரம் போல.. !!
என் வீட்டில், நானே யாரோவாகி போனேன்..!

"திமிர் பிடிச்சவ","பிடிவாதக்காரி", "பிசாசு" என பல பட்டங்களை வாரி இறைக்கும் அம்மா,
அன்று மட்டும் என்னை ஏனோ, அன்னை தெரசா என புகழ்ந்து வைத்தாள்..!!
சிரிப்பு தானாய் வந்தது..!!
வெட்கப்பட்டு சிரிப்பதாய், கூட்டத்தில் யாரோ பேசி கொண்டார்கள்..!

அப்பா எனக்கு செய்ய போகும் சீர் வரிசையை விவரித்தார்.. !!
அப்பா சென்னை விடுதியில், சேர்க்க பணம் கட்டியது
அந்த நேரம் தான் நினைவுக்கு வந்து தொலைத்தது..!!

பையன் பிடித்து இருக்கிறதா? யாரோ கேட்டார்கள்..!!
பையன் நன்றாக இருக்கிறானா? என மாற்றி கேட்டு இருந்திருக்கலாம்..!!
ஏதோ ஏதோ பேசினார்கள் சிரித்தார்கள், முடிவில் சந்தோசமாய் கிளம்பி போனார்கள்..!!

அம்மாவும், அப்பாவும் சந்தோசமாய் பேசி கொண்டார்கள்..!! இந்த முறை கொஞ்சம் சத்தமாக..!
"எல்லாருக்கும் பிடிச்சிருச்சி போல, எல்லாம் நல்ல படியா முடியனும்" என அம்மா
காலண்டர் பிள்ளையார்க்கு வணக்கம் வைத்தாள்..!!

நானும் கூட வணங்கி கொண்டேன்..!!
இந்த கண்காட்சி ஒன்றே போதும்,
இன்னொரு கண்காட்சிக்கு நான் தயாரில்லை என்று..!!!!

எழுதியவர் : நிஷாந்தினி.கே (6-Oct-14, 10:02 am)
பார்வை : 262

மேலே