படிமப் பயணங்கள்
யாருமில்லா
தூரங்களுக்கு
பயணப்பட்டிருப்போம்....
பின்னிரவுக்கும்
அதிகாலைக்குமிடையிலான
மூன்று மணிநேரங்களை
உறக்கம்
தனதாக்கியிருக்கும்...!
வதக்கிய வாழையில்
கெட்டியாய் புளிச்சோறு...
முழுநேர
உணவாகியிருக்கும்...
தொப்பிச் சிப்பந்திகளின்
வறுவல் சிரிப்புகள்
வந்திருக்கவில்லை எங்களோடு...
குளிருக்கு கம்பளி
இருக்கும்.... குளிர்ச்சிக்காய்
கண்ணாடி இருக்காது..!
முப்பத்தியாறு
சிமிட்டல்களுக்கு
மட்டுமே அனுமதித்திருக்கும்
யாஷிகாத் தேவதை...!!
சுழித்திருந்தாலோ
சிரித்திரிந்தாலோ... அது
அப்படித்தான்..
சிமிட்டல் தீர்ப்புகள்
திருத்தப் படாது...!!
தீர்ப்புகள் வரும்வரை
திகட்டப் பேசியிருப்பது
ஞாபகங்களாய்
ஊறிக்கொண்டிருக்கும் ...!
கூட்டங்களினுள் தனிமை
இருக்காது...
கூட்டங்கள் தனித்தே
இருக்கும்...!!
அப்பொழுதைப் போலவே
இப்பொழுதும்
களைத்திருக்கவே இல்லை..
பயணங்களில்
பயணித்திருக்கையில்...!!