இல்லற ஞானி

மிகச் சமீபமாக ஒரு சமகாலத்துப் படைப்பாளியின் வலைத்தளத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். அதிலிருந்த ஒரு கருத்து வாசித்த நிமிஷத்திலிருந்து மனசை உறுத்திக்கொண்டிருக்கிறது. அந்த எழுத்தாளர் கூறுகிறார் - ‘‘குடும்பப் பொறுப்பையும் பொருளாதாரப் பொறுப்பையும், குழந்தைகள் கவனிப்பையும் என் மனைவி முற்ற முழுக்கச்செய்வதால்தான் என்னால் எழுத முடிகிறது” என்று. ‘‘எனக்கு அவற்றைப் பற்றி ஒன்றும் தெரியாது. எழுதுவது மட்டுமே என் வாழ்க்கை...”என்கிற ரீதியில் போகிறது அந்த வலைத்தள பேட்டி.

எழுத்தாளர், படைப்பாளி, சமூக மாற்றத்துக்குக் காரணியாக இருப்பவர், சிந்தனையாளர், மரியாதைக்குரியவர் என்று பல முகங்கள் அவருக்கு இருந்தாலும் - இன்னமும், இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டிலும் கூட மனைவியை சமையலறையோடும், உப்பு, புளி, மிளகாயோடும், குழந்தை வளர்ப்போடும், வரவு செலவு கணக்கோடும் உறைய வைத்துவிட்டு - இவர் எழுதுவதும், பேசுவதும் என்ன நேர்மை? மேடையேறிப் பெண் முன்னேற்றம், பெண்ணுரிமை, பெண் சுதந்திரம் பேசும் பல ஆண்கள் - தங்கள் மனைவியை சமையலறைக் கதவுக்குள்தான் குடி வைத்திருக்கிறார்கள்.

பல பெண்களுக்கு கணவனின் புகழில் குளிர் காய்வதும், அவரின் நிழலாகக் கூடவே செல்லுவதும், தனக்கென ஏதுமில்லாமல் அவனின் திருமதியாக இருப்பதே போதும் என்பதான மாயையிலும், போதையிலும் நாசூக்காகத்தள்ளி விடுகிறார்கள் பல ஆண்கள். மகாகவி பாரதி - காளியிடம் கோபப்பட்டான். ‘‘வெறும் உப்புக்கும், புளிக்கும் என்னை அல்லாட வைக்கிறாயே? அப்புறம் நான் எப்படி அமரகாவியங்கள் படைப்பது?’’ என்று ரௌத்ரம் கொள்ளுகிறான். ஆனால், வரகவி, எரிமலைக்கவி, சமூக மாற்றக்கவி பாரதி - குடும்பத்தை, குழந்தைகளை, செல்லம்மாவை, முற்ற ஒதுக்கினவனில்லை.

பெண் படைப்பாளிகள் குறித்து என்னிடம் கேள்விகள் கேட்கப்படும்போது - தவறாமல் வரும் ஒரு கேள்வி - ‘‘ஏன் பெண்கள் 400, 500, 1000, 2000, 4000 பக்கமுள்ள படைப்புகளைத் தருவதில்லை? ஆண்கள் தருகிறார்களே?’’ என்று கேட்கிறார்கள். பெண்களாக இருப்பதால்தான் இவர்களால் தரமுடிவதில்லை. ஆண்களாக இருப்பதால்தான் அவர்களால் தரமுடிகிறது. ஆண் எழுதும்போது அவனுக்கெனத் தனி அறை, டீ போட்டுத் தர மனைவி, தொந்தரவு செய்யாத அழைப்பு மணி, குக்கர் விசில், கீரைக்காரம்மா, குழந்தைகளின் அழுகை இல்லாத சூழல் கிடைக்கும்.

குழந்தை கேவிக் கேவி அழுதாலும், ‘‘ஏய் இந்தச் சனியன் ஏன் அழுவுது பாரு. மனுசனை ஒரு வார்த்தை எழுதவிடறீங்களா?’’ இப்படிச் சிடுசிடுக்கமுடியும், இடத்தை விட்டு நகராமலே. குழந்தையை அழ விட்டு, எந்தப் பெண்ணாலும் பேனா பிடிக்க முடியாது. ‘‘அம்மா பசிக்குது” என்ற வார்த்தைக்குச் சோறு போடாமல், அடுத்த அட்சரம் எழுத முடியாது. ‘‘வீட்டில ஆயிரம் வேலை. எதையும் கவனிக்காம என்ன எழுதி என்ன ஆகப்போகுது?” என்கிற குத்தல் குரல்களும் கேட்கும்.
ஆண் எழுதினால் வெட்டி வேலை இல்லை. பெண் எழுதினால் வெட்டி வேலை என்கிற சமூக சிந்தனை எவ்வளவு குரூரம்!

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, இரவில் கழிப்பறைக்குள் போய் உட்கார்ந்து கவிதையும், கதையும் எழுதும் பல தோழிகள் எனக்கு உண்டு. புளி கரைக்கும்போதும், சோறு சமைக்கும் போதும், காய்கறி நறுக்கும்போதும், நாலு நாலு வார்த்தைகளாக எழுதிக் கவிதையை முடிக்கும் பல தோழிகள் எனக்கு உண்டு. இதே காரணத்தால்தான் ஞானம் பெற வேண்டும். முக்தி பெற வேண்டும். கடவுளை உணர வேண்டும் என்று பரிதவிப்பு இருக்கின்ற பெண்களால் எதையுமே உதறித்தள்ளிவிட்டு, ‘‘எல்லாமே என் புருஷன் பார்த்துப்பார். நான் சந்நியாசி ஆகப் போறேன்‘‘ என்று சொல்லமுடியாது.

தாமரை இலைத் தண்ணீர் போல் இருக்கும் ஆணுக்குத் துறவறம் சுலபம். தொப்புள் கொடி நறுக்கப்பட்ட பின்னாலும் அரூபமாக அதைத் தூக்கிக் கொண்டே அலைந்து குழந்தைகள் வாசனை, வீட்டு வாசனை, குடும்ப வாசனை என்கிற வாசனை மண்டலத்தில் இருக்கும் பெண்ணுக்குத் துறவறம் சாத்தியமல்ல. அதனால்தான் காவியங்களும், புராணங்களும், நெடுங்கதைகளும், ஆயிரக்கணக்கான பக்கங்களில் படைப்புகளும் பெண்களுக்குச் சாத்தியமாவதல்ல. மனைவி எழுதுபவளாக இருந்தாலும், எந்தக் கணவனும் அவளை மகாராணியாக நினைத்து வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தருவதில்லை.

குடும்பப் பொறுப்பிலிருந்து ஆசுவாசம் தருவதில்லை. ‘‘என் குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்றே எனக்குத் தெரியாது. என் வீட்டின் குடும்பப் பொறுப்பு, பொருளாதாரம், குழந்தைகள் கவனிப்பு எல்லாமே என் கணவர்தான் பார்த்துக் கொள்கிறார். அதனால்தான் என்னால் எழுத முடிகிறது,” என்று எந்தப் பெண் படைப்பாளியும் சொல்ல முடியாது. எந்தப் பெண்ணும் துறவறமும் மேற்கொள்ள முடியாது. காரணம் மனைவியின் புகழில் குளிர் காய்வது ஆணுக்கு இயல்பு அல்ல. பெண் அந்தக் கணவனின் பெருமையை இயல்பாகத் தனதாக ஸ்வீகரித்துக் கொள்வது மாதிரி ஓர் ஆணால் ஸ்வீகரிக்க முடியாது.

அது அவனுக்கு அவமானம். தலைக்குனிவு. ‘‘பெண் தத்துவம் சொல்லி நான் கேட்பதா?” என்கிற சனாதன உணர்வு முற்றிலுமாகக் களையாததால்தான் பெண் துறவிகள் அதிகமாகக் காணப்படுவதில்லை, விதிவிலக்குகளாக இருக்கும் ஒரு சிலர் தவிர. காரணம், பெண் ஓர் இல்லறத் துறவி. இல்லறச் சாமியார். பனிக்குட நீரே அவளின் அபிஷேக நீர். கருவறையே சாமி குடியிருக்கும் கருவறை. தாய்ப்பாலே பாலாபிஷேகம், தொப்புள் கொடியே அவளுக்கான ருத்ராட்ச மாலை, இல்லறமே அவளின் துறவறம்.

எல்லா வேர்களோடும் இருப்பாள். மனதளவில் எல்லாவற்றையும் துறந்து பற்று இல்லாமலும் இருப்பாள். ஆசையோடும் இருப்பாள். ஆசை துறந்தும் இருப்பாள்.பெண்ணின் வாழ்வே துறவால் ஆனது. அதனால்தான் அவள் இல்லற ஞானி. ஆணுக்குத்தான் தெரியும் கைவிட்டு ஓடுவதும், தப்பித்துக் கொள்வதும், ஞானத்தை வெளியே தேடுவதும். பெண் முற்ற முழுக்கத் துறவி, ஞானி, முற்றும் அறிந்தவள்.

எழுதியவர் : ஆண்டாள் பிரியதர்ஷினி (10-Oct-14, 9:58 pm)
Tanglish : yillara njaani
பார்வை : 248

மேலே