கிளை பிரிதல்
வியாதியின் முகம் வியாபிக்க
கதையை கத்தரித்து
வைத்தியர் வாள் வீசுகிறார்
அப்பச்சிக்கு அறுவை சிகிச்சை
அவசியமாகி விடுகிறது
ஆச்சிக்கு உள்ளூர உயிர் கசியும் வலி
வழியற்றவர்களுக்கு வலிகள்தானே மிச்சம்?
கீரிப் பிள்ளைகள்
பாம்புகளின் மகுடிக்கு பணிய
பந்த,பாசம் படமெடுத்து ஆடுகிறது
விஷப்பைகள் வெடித்து விடும் அளவு
துளிர்க்கவிருந்த ஈரமும் உலர
நம்பிக்கையின் வேர் அறுகிறது
அரவணைப்பின் இறுதி தருணமும்
பிடிமானம் தளர கைவிடப்பட்ட களம் மீண்டு
தோற்று திரும்புகிறது மனம்
வாழ்வென்ற விதி வீதிக்கு வர
பிழைப்பு என்னும் பின் நாட்கள்
கேலிக்குரியதாய் ஆயிற்று
ஆச்சிக்கும்,அப்பச்சிக்கும்
பசிக்கு படியளந்து உலையிட்ட பசுவின்
கயிறு கைமாற
வேர் உடைய கிளை பிரிகிறது
அரசன் சிரித்தபடியிருந்த
ஆயிரம் நோட்டுகளை கணக்கிட
விரலில் உமிழ் நீர் தொடுகையில்
பாலின் மொச்சை
கிளை பிரியும் பசு,கன்று
கேள்விக்குரியதாகும் நாளைய சாதம்
திரி படுகிறது பசிவயிறு
கண்கள் பனிக்க கவலை தொனிக்க
மனசு கவனைக்குள்
கிளை பிரிந்த வருத்தத்தில்
எதையோ தேடியலையும் கணம் பார்த்து
ஆச்சி அள்ளி வைத்த சாணியை
அளைந்து சீய்த்து கேவும்
கோழிப் பேடுகள் மின்னி மறைகின்றன.
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.