++எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள்--விரல் மாறும் தொடர்கதை--பாகம் 15—அ-வேளாங்கண்ணி++

++எறும்பு தேசத்தின் கொண்டை ஊசி வளைவுகள்--விரல் மாறும் தொடர்கதை--பாகம் 15—அ-வேளாங்கண்ணி++


அந்த எவர்ஸ்மைல் .... அவ.. அவ.. எப்படிப்பட்டவ தெரியுமா... அவ என்னெல்லாம் பண்ணினா தெரியுமா??????

என் ... சத்யா... சத்யா... சத்.. யா....????

என்று சொல்லிக் கொண்டிருந்த சரஸ்வதியின் குரல் மெல்ல மெல்ல ஆண்குரலாக மாறியது.....

ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி இரண்டு விநாடிகளுக்கு நின்றுவிட்டு மீண்டும் ஓட ஆரம்பித்தது....

எரிந்து கொண்டிருந்த மின்விளக்கு ஒரு முறை அணைந்து மீண்டும் சிகப்பாக எரியத் தொடங்கியது....

நீதிபதி மைக்கேல் ராணியின் முன்னே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த சரஸ்வதியின் கண்களோ இரத்தத்தின் சிகப்பை தோற்கடிக்கும் படியாக மாறியிருந்தது...

"ஆமா... நான் தான் கொன்னேன்...

நான் வேற யாருமில்ல... நான் சத்யா ... சரஸுவின் காதலன்..."

நீதிபதி மைக்கேல் ராணி ஒரு திகிலுக்குள்ளானார்... இருந்தும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் உட்கார்ந்திருந்தார்.....

"என்னைக் கொன்ன அன்னைக்கே, என் சரஸ்வதிய பாழாக்கின ரவுடிகளை ஜீவாவோட உடம்புல புகுந்து கொன்னது நான் தான்...

அந்த சூழ்நிலையில அது ஜீவாவுக்கே கூடத் தெரியாமப் போச்சு....

அதுக்கப்புறம் தான் அவங்கள காப்பாத்த வந்த எவர்ஸ்மைல் அவங்களோட சேர்ந்தாங்க...

ஆரம்பத்துல அவங்க என் சரஸுவை நல்லாத்தான் பாத்துக்கிட்டாங்க...

போகப்போக அவங்களுக்கு சரஸுவை அடிமனசுல பிடிக்காம போச்சு....

ஏன்னா.. ஒன்னு அவ ஒரு பொண்ணு... இங்க இருக்கற எல்லாரும் அவ மேல ரொம்ப பாசம் காட்ட ஆரம்பிச்சாங்க... இன்னொரு முக்கிய‌மான காரணம் .. அவ முழுகாம இருக்கறது...

ஏன்னா... எவர்ஸ்மைலுக்கு குழந்தைகள்னா ரொம்ப பிடிக்கும்.. அதனால தான் அவங்க தள்ளிவச்ச கணவனோட குழந்தையக் கூட அப்பப்ப பார்த்திட்டு வந்தாங்க‌...

அவங்களுக்கு கிடைக்காத பாக்கியம் கூடவே இருக்கிற பொண்ணான சரஸுக்கு கிடைச்சது அவங்களுக்கு தாங்க முடியல... அது அவங்க அடிமனசுலேயே இருந்து மெல்ல மெல்ல ஒரு வெறுப்ப கொலை செய்ய தூண்டுமளவிற்கு வளர்த்துருச்சு.... அதனால வயித்துல இருக்கற குழந்தையையும், சரஸுவையும் கொல்ல முயற்சி பண்ணிக்கிட்டே தான் இருந்தாங்க....

அவங்களாத்தான் கூவாகம் போலாம்னு எல்லாரையும் கார்ல கூட்டீட்டுப் போனாங்க....

அப்போ சரஸுக்கு ஒருமாசம்கூட சரியா முடியல...

வீட்டிற்கு திரும்ப வரும்போது அவங்கதான் கார... ரொம்ப மேடு பள்ளமான மோசமான ரோட்ல ஓட்டிட்டு வந்தாங்க...

அது கரு கலையணும்னு போட்ட திட்டம்... அவங்கலால அது முடியல...

வீட்டுக்கு வந்தவுடனே எலுமிச்சை ஜூஸ் கலந்து கொடுத்ததும் அவங்க தான்.. அதுல விஷம் கலந்து.... சரஸை வற்புறுத்தி குடிக்கச் சொன்னாங்க... ஆனா அவள அது ஒண்ணும் பாதிக்கல....

அவ வயித்துல வளரது என் குழந்தை இல்ல தான்.. ஆனா அவ என் சரஸு... அந்தக்குழந்தை என் சரஸு குழந்தை...

....நான் எல்லாத்தையும் கூட இருந்து பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்...

கடைசியா நேத்து ராத்திரி எல்லாரும் தூங்கினப்புறம் அவங்க அவள நேரடியாகவே கொல்லவும் துணிஞ்சிட்டாங்க...

அவளால தன்னை காப்பாத்திக்க முடியாத பட்சத்தில தான் நான் அவ உடம்புல புகுந்து எவர்ஸ்மைலை கொலை பண்ணினேன்....

அது மட்டுமில்ல எவர்ஸ்மைலை தூக்கு மாட்டும்படி செட் செஞ்சதும் நானே தான். பாவம் பச்ச உடம்பால அது எப்படி முடியும்?"

என்று சொல்லியவாறே படுபயங்கரமாக சிரித்தபடி மயங்கி விழுந்தாள் சரஸ்வதி...

சிரிப்பின் பயங்கரத்தைக் கேட்ட காவலாளிகள் தானாகவே ஓடி வந்தனர்....

பிரமை பிடித்தவராய் அமர்ந்திருந்தார் நீதிபதி...

ஓடிவந்த காவலாளிகள் மயங்கிக்கிடந்த சரஸ்வதியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர்...

ஒரு பயங்கர நிலநடுக்கத்திலிருந்து மீண்ட அதிர்ச்சியில் இருந்தார் நீதிபதி மைக்கேல் ராணி...

முன்னமே எழுதப்பட்ட சொல்லப்பட்ட வழங்கப்பட்ட தீர்ப்பை இப்போது மாற்றி எதுவும் செய்ய முடியாது....

நீதிக்கு எப்போதுமே சாட்சி வேண்டும்... உண்மை வேண்டாம்...

ஒரு குற்றவாளி வேண்டும்... ஆவியும் பேயும் வேண்டாம்...

சத்யாவையா பிடித்து உள்ளே போட முடியும்...

=========================================================================

தீர்ப்பின் படியே அனைவரும் சிறையிலடைக்கப்பட்டனர்...

சரஸ்வதிக்கு மருத்துவ சிகிச்சைகளும் தொடர்ந்தன....

சரஸ்வதிக்கு பத்து மாதத்திற்குப்பின் சிறையிலேயே அழகான ஆண்குழந்தை பிறந்தது...

அவனுக்கு ஜீவாவும், சரஸ்வதியும் சேர்ந்து "சத்யா" எனப் பெயரிட்டனர்...

சிறைவாழ்க்கையில் மறக்க முடியாத அந்த தருணத்தை, அந்த மழலையின் வரவை ஆறு பேரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடினர்...

=========================================================================

இதற்கிடையில் நாட்டில் ஆங்காங்கே திருநங்கைகளுக்கு தொல்லை கொடுக்கும் பொறுக்கிகள், பெண்களுக்கு தீமை செய்யும் கோழைகள் வாரம் ஒருவரோ, இல்லை மாதம் இருவரோ கொல்லப்பட்டு வருவதாக சிறைக்குள்ளேயே ஒரு செய்தி பரவியது.. ஆனால் அது 'யார்' 'எவர்' 'எப்படி' என்பது இதுவரை காவல்துறைக்கும் புரியாத ஒரு புதிராகவே இருந்து கொண்டிருக்கிறது என்பது பற்றியும் இவர்கள் அடிக்கடி பேசிவந்தனர்......

ஓராண்டு சிறை தண்டனைக்குப்பின் குழந்தையுடன் சரஸ்வதி விடுதலை செய்யப்பட்டாள். அனைத்தையும் அறிந்திருந்த டாக்டர் காருண்யா அவளுக்கு அடைக்கலம் கொடுத்தார்..

மருத்துவமனையிலேயே ஒரு அறையில் தங்கி தன் கணவனின், நண்பர்களின் விடுதலைக்கான நாட்களை எண்ணியபடி குட்டி சத்யாவின் மழலையில் தன்னை மறந்து நாட்களை கடத்திக் கொண்டிருந்தாள் சரஸ்வதி....

=========================================================================

அந்த அழகான நாளும் வந்தது...

அவர்களது நன்னடத்தை காரணமாக இரண்டு மாதத்திற்கு முன்பாகவே ஜீவா, கமலி, ஆனந்தி, திவ்யா, சூர்யா ஆகிய ஐவரும் விடுதலை செய்யப்பட்டனர்....

அவர்களுக்கு காருண்யா டாக்டர் தன் வீட்டிற்கு அருகிலேயே ஒரு வீட்டினைப் பார்த்து வைத்திருந்தார். அங்கேயே சரஸ்வதியும் குட்டி சத்யாவுடன் வந்து சேர்ந்தாள்.

அடுத்த இரண்டு நாட்களில் குட்டி சத்யாவின் முதலாவது பிறந்தநாள் வந்தது...

அதனை சீரும் சிறப்புமாகக் கொண்டாடினர்...

=========================================================================

இவர்கள் சிறைக்கு சென்ற நாள்முதல் இன்றுவரை வெளியே பல கொலைகள் நடந்து அரங்கேறியிருந்தது...

கொல்லப்பட்டோர் அனைவருமே திருநங்கையினரை ஏதேனும் ஒரு விதத்தில் துன்பம் கொடுத்தவர்களாகவே இருந்தனர்...

காவல் துறையோ துப்பறியும் துறையோ ஒரு துரும்பும் கண்டு பிடிக்க முடியவில்லை....

நாட்டில் திருநங்கைகள் மேல் ஒருவித பயம் கலந்த மரியாதை பரவத் தொடங்கியிருந்தது...

கேலி செய்த வாய்கள் இப்போது வாயை மூட ஆரம்பித்திருந்தனர்...

குறை ஒன்று வீட்டில் குரங்காய் குடி கொண்டதாகவே பார்த்தவர்கள் இப்போது குறையத் தொடங்கியிருந்தார்கள்...

சிறைவாழ்க்கையும் இவர்களை ஆசுவாசப்படுத்தி இருந்தது....

சிந்தனையில் ஒருவித தெளிவு பிறந்திருந்தது....

கயவர்களை கண்டு கொலைசெய்யும் வெறித்தனம், தீவிரவாத செயல்களால் மட்டுமே எந்த ஒரு மாற்றத்தையும் கொண்டுவர இயலாது என்று இப்போது உணர்ந்திருந்தனர்....

பாதைகள் வளைந்து கிடக்கையில் நேராய் நீளும் பாதங்களில் காயம் வாங்கி வந்தவர்கள்... முதலில் பாதையை நேர்ப்படுத்தலாம்..... அடுத்து காயம் வாங்காமல் நடக்கலாம்... என எண்ணத் தொடங்கியிருந்தனர்...

இளைப்பாரல்களின் அருகிலேயே கடந்துவந்த பாதை அழைத்து வந்ததாய் தோன்றியது...

அவர்கள் தங்கியிருந்த வீட்டின் வெளியே இருந்த கொய்யாமரம் ஜீவாவிற்கு அவனது பிறந்த வீட்டை ஞாபகப்படுத்தியது...

பக்கத்தில் சென்று தன் வீட்டு எறும்புகள் இங்கு இருக்கிறதா என ஒரு முறை பார்த்து விட்டு வந்தான்... இப்போது ஒரு எறும்பு அல்ல பல எறும்புகள் அவனைப் பார்த்து மகிழ்ச்சியாய் சிரிப்பது போல ஜீவாவிற்கு தோன்றியது...

ஒரு புதுவித எண்ணம் மனதிற்குள் தோன்ற ஆரம்பித்தது...

இரவோ.... உறக்கத்தை வெகுமதியாய் கொடுக்க.... சிந்தனையுடன் தூங்கிப்போனான்...

சட்டென விழிப்பு வந்தபோது விடியலுக்கு கொஞ்ச நேரம் மிச்சமிருப்பதை அறிவித்தது ஊர்க்குருவி...

காலை உணவிற்குப்பின் அனைவரையும் அழைத்து பேசத்தொடங்கினான் ஜீவா...

"நமக்கெல்லாம் ஒரு கனவு இருந்திருக்கும். நண்பன் சத்யாவுடன் சேர்ந்து நானும் ஒரு கனவை கண்ணாடி குடுவையில் வைத்து விண்ணில் விதை போடும்படி வளர்த்து வந்தேன்.. அதை இந்த சமூகமே சீரழித்து விட்டது.. சில காலம் நாமும் சட்டத்தைக் கையிலெடுத்தும் பார்த்து விட்டோம்...

.....நாம் உள்ளேயிருந்த சமயம் திருநங்கைகளுக்கு எதிரானவர்கள் திடீர் திடீரென கொல்லப்படுவது கொலையாளி யாரென்றே யாருக்கும் தெரியாமல் இருப்பதும் நம் மேலே அனைவருக்கும் ஒரு பயத்தையும் மரியாதையையும் கொடுத்திருக்கிறது.. அதனை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்வோம்...

.....நமக்கு முதலில் பாதிக்கப்படுவது கல்வி, பிறகு வெளியேற்றம்.. கல்வி இல்லாததால் தான் நாம் அலைகழிக்கப்படுகிறோம். அது மாறினால் எல்லாம் மாறும்.. மாற்றுவோம்.. எப்படி?

.....தமிழ்நாடு முழுதும் சராசரியாக 30,000 திருநங்கைகள்/திருநம்பிகள் இருக்கிறோம்.. அவர்களுக்கு முடிந்த அளவிற்கு கல்வி அறிவு கொடுப்போம்... அதனை ஒரு இயக்கமாக ஆரம்பித்து செய்வோம்....

.....அவர்களில் படித்தவர்களை தேர்ந்தெடுத்து மற்றவர்களுக்கு கல்வி அறிவு கொடுக்கும் படி சொல்வோம்....

நானும் கரஸில் டிகிரி படிக்கப்போகிறேன்...

இங்கு ஆனந்தி, கமலி இருவரும் கல்லூரி இறுதி ஆண்டு மட்டும் படிக்க வேண்டும்...

சூர்யா இன்னும் இரண்டு ஆண்டுகள் கல்லூரிப்படிப்பு படிக்க வேண்டும்..

திவ்யா முயற்சி செய்து பத்தாம் வகுப்பு முடித்தால்... கரஸில் டிகிரி படித்துக்கொள்ளலாம்....

முதலில் அதை முடிப்போம்...

.....பின்பு ஒவ்வொருவரும், ஒவ்வொரு துறையில் அதாவது சட்டம், ஆசிரியர் படிப்பு, கம்ப்யூட்டார், அக்கவுண்ட்ஸ் என மேற்படிப்பு மேற்கொள்வோம்...

அனைத்து திருநங்கையினருக்கும் நம்மால் முடிந்தவரை இவ்விஷயத்தினை பரப்புவோம்....

எங்கேனும் யாரேனும் திருநங்கைகள் அவர்கள் வீட்டிலிருந்தோ, சமூகத்திலிருந்தோ வெளியேற்றப்பட்டால்... அவர்கள் நம் இயக்கத்தில் வந்து ஆலோசனை பெறும் அளவிற்கு நாம் ஒரு உயர்ந்த நிலையை எட்டுவோம். நம்மை ஒதுக்கி வைத்த நம் உறவினர்களை, நம் சமூகத்தை, நம் நல்ல செயல்களால் வெட்கப்படும்படி செய்வோம்..

என்ன செய்வோமா....?!??!"""

என்று ஜீவா கேட்ட பொழுது குழந்தை சத்யா கைதட்டி அதற்கு ஆதரவு கொடுப்பது போல சிரித்தது...

"நாளை மறுநாள் ஏப்ரல் 15....

நம் திருநங்கையர் தினம்...

அன்றே நமது இயக்கத்தினை துவங்குவோம்.. நமது இயக்கத்திற்குக் கூட நான் ஒரு பெயரினைத் தேர்வு செய்து விட்டேன்...

என்ன சரஸ்.. பேரை நான் சொல்லவா.. இல்லை நீ சொல்கிறாயா..?

ம்.. விடு.. நானே சொல்கிறேன்....

நமக்காக முதன்முதலில் நம்மைப்பற்றி சு.சமுத்திரம் அவர்களால் எழுதப்பட்ட முழு நாவல் "வாடாமல்லி" தான் நம் இயக்கத்தின் பெயரும்...

ஆம்...

"வாடாமல்லி இயக்கம்"

=========================================================================

"வாடாமல்லி இயக்கம்" டாக்டர் காருண்யா அவர்களின் உதவியுடன் ஏப்ரல் 15 அன்று துவங்கப்பட்டது.....

அதற்கு தேவையான உதவிகளை பொதுமக்கள் தானாகவே வந்து செய்ய ஆரம்பித்தனர்...

விழாவின் சிறப்பு விருந்தினராக லிவிங்ஸ்மைல் வித்யா, முதல் திருநங்கை செய்தி வாசிப்பாளர் லோட்டஸ் டிவி பத்மினி பிரகாஷ், சகோதரி இயக்கத்தின் தலைவர் திருநங்கை கல்கி சுப்ரமணியம் மற்றும் கவிஞர் ஆயிஷா பாரூக் ஆகியோர் கலந்து கொண்டனர்....

விழாவின் துவக்கத்தில் கமலி, திவ்யா, ஆனந்தி மற்றும் சூர்யா ஆகியோர் இணைந்து கூவாகம் திருவிழாவின் ஒப்பாரி பாடலைப் பாடினர்....

''''காகிதப் பூவுன்னு கண்மூடிப் போனீரோ - என்ராசாவே
வாடாமல்லின்னு பேசாமல் போனீரோ... நானும்
அப்பனுக்கு வேப்பங்காய் அண்ணனுக்கு எட்டிக்காய்
ஊருக்கு திருஷ்டிக்காய் ஒனக்குக்கூட ஊமத்தங்காய்
செடியாய் முளைச்சிருந்தால் பூவாய் மலர்ந்திருப்பேன்
கொடியாய் வளர்ந்திருந்தால் கொம்புலே படர்ந்திருப்பேன்
நதியாய்ப் பிறந்திருந்தால் கடலிலே சேர்ந்திருப்பேன்
இரண்டாய்ப் பிறந்ததாலே துண்டுபட்டு நிக்கேனே!''''

இப்பாடல் அனைவரின் உள்ளத்தையும் கலங்க வைப்பதாக இருந்தது...

இதற்கு நிச்சயம் மாற்றம் உண்டு என ஜீவா மனதிற்குள் நினைத்துக் கொண்டான்...

லிவிங்ஸ்மைல் வித்யா பேசி முடித்ததும் சொன்ன கவிதை அனைவரின் மனதையும் தொட்டது..

'அப்போது நான்
முழுக்கை சட்டையும், கால் சராயும்
அணிவது வழக்கம்
அப்போது நான்
மாதம் ஒருமுறையென
சீராக முடிதிருத்தி வந்தேன்
அப்போது நான்
ஆண்களுடன்
பள்ளியில்தான் படித்தேன்
இருந்தாலும் அவர்கள்
கிண்டல் செய்தார்கள்
நான் ஆணில்லை என
இப்போது நான்
புடவை கட்டி
ஒத்தசடை பின்னி
பூ முடிந்து
பாந்தமாக வளைய வந்தாலும்
அவர்கள் கண்டுபிடித்துவிட்டார்களாம்
'நான் பெண் இல்லை’என்று.!’

சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும் சகோதரி இயக்கத்தின் தலைவராகிய கல்கி சுப்ரமணியம் பேசி முடித்தவுடன் பேச வந்த கவிஞர் ஆயிஷா பாரூக்....

திருமங்கைகளுக்கான தாலாட்டுடன் தனது பேச்சை தொடங்கினார்....

தாலாட்டு என்ற ஒன்று வாய்க்கப்படாதவர்கள் திருநங்கையர்.. அவர்களுக்கென பாடப்பட்ட தாலாட்டு அதி அற்புதமாக மனதைத் தொட்டது....

'''''பெத்த மனம் அங்கே இருக்க

பிள்ளை மனம் இங்கே ஏங்கி நிக்க
உன் பொறப்ப குறை சொல்லி
வீட்டை விட்டு போக சொல்லி
அழுத மனம் ஆறுதல் தேட
என் மடி தலை சாயி செல்ல மகளே….

முடமா பிறந்தாலும் மனநிலை திரிந்தாலும்
தான் பெற்ற பிள்ளை தனது ஆகாதோ
பாலியல் மாறி பிறந்த நம்ம மட்டும்
ஊருசனம் பேச்சை கேட்டு ஒதுக்குவதேனோ
நம்ம பொறப்பு ஒசந்த பிறப்படி
நீ உறங்கு பெண்ணான ஆண்மகளே….

கருத்தரிக்க வழியுமில்லை
கர்ப்பம் சுமக்க பையும் இல்ல
ஆனாலும் நான் மலடி இல்ல
தாய்மையை உணர்ந்து என் மகளா
தத்து எடுத்தேன் வாழ்க்கை முழுக்க
கவலையின்றி நீ தூங்கு தெய்வ மகளே….

என்று பாடி முடித்தவர் திருநங்கையர் பற்றி ஆறு வரிகளில் சொல்லி தனது பேச்சை முடித்துக் கொண்டார்...

"மங்கையானவள் திருநங்கையானவள்
நிழலின் இருளில் சிரிப்பவள்
அன்பின் ஊற்றாய் பிறந்தவள்
வலியின் வலியை தாங்கியவள்
திறமைகளை தீர்க்கமாய் பெற்றவள்
ஆணாகி பெண்ணாகி யாதுமானவள்"


கூட்ட முடிவில் அந்த இயக்கத்தின் தலைவராக ஜீவா தேர்ந்தேடுக்கப்பட்டான்...

பயணங்கள் அர்த்தப்படும்போது பாதைகள் கடக்கும் பாதங்கள் அனைத்தும் ஆசுவாசப்படும் தானே...

அன்று இரவு,

ஒரு வித மன திருப்தியுடன் தனது அறையில் படுத்திருந்தான் ஜீவா.... குழந்தை சத்யா பக்கத்து அறையில் கமலி, திவ்யா, ஆனந்தி மற்றும் சூர்யாவுடன் விளையாடிக் கொண்டிருந்தான்...

அப்போது அவனது மனைவி சரஸ்வதி,

"ஜீவா", என்று சத்யாவின் குரலில் அழைத்தாள்...

அதிர்ந்து, சிவந்த கண்களுடன் நின்று கொண்டிருந்த சரஸை பயத்துடன் பார்த்தான் ஜீவா...

தமிழ் நாட்டின் மின்வெட்டு 'உள்ளேன் ஐயா' என்பது போல சரியாக அந்த கணத்தில் வந்தடைந்தது....

அடுத்து....

யாரோ...

எவரோ...

எப்படியோ...


அதிர்ச்சியுடன் அ.வேளாங்கண்ணி

(தொடரும்)

பின்குறிப்பு:
மேற்கண்ட படத்தில் காணப்படுபவ‌ரின் பெயர் "கல்கி". இவர் சகோதரி பௌண்டேசன் என்னும் அமைப்பின் நிர்வாகத்தலைவர். பொள்ளாச்சியை பிறப்பிடமாக கொண்ட திருநங்கையான இவர் இந்த அமைப்பின் மூலம் இந்தியாவின் திருநங்கைகளின் சமூக பொருளாதார அடிப்படை குடியுரிமை முன்னேற்றத்திற்காக போராடி வருகிறார். திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக சுப்ரீம் கோர்ட் அறிவித்ததில் இவரது போராட்டமும் பெரும் பங்கு வகிக்கும். (A transgender rights activist, an actor and a transsexual woman herself, Kalki holds two Master’s degrees - First one in Journalism and Mass Communication and the second in International Relations. On the professional side, Kalki is an actress and also makes short documentary films. She works as an independent Media Specialist. She develops web based projects and is a script writer for documentary and animation films. On February 21st 2009, Kalki was awarded the 'Lifetime Achievement Award' by the Lioness Club of Chennai. In October 2010, Ms.Kalki was invited by the government of the United States of America for a 16 days Human Rights activism & Awareness program through IVLP to Washington DC, New York and SaltLake City. She is the first transsexual foreign national to be invited by the United States government.)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (15-Oct-14, 1:06 pm)
பார்வை : 233

மேலே