விதைப்பும் விளைவும்

மனம்
ஒரு மாயவயல்.
அகந்தை அதன்
அடிப்படைத் தன்மை.

விதைப்பு வேறு
விளைப்பு வேறாய்
வித்தை காட்டும்
விந்தை நிலமிது.

துற்குணம் விதைக்க
துக்கம் விளைக்கும்
நற்குணம் விதைக்க
நன்மை விளைக்கும்

ஈர்ப்பை விதைக்க
ஆசை விளைக்கும்
பற்றை விதைக்க
துன்பம் விளைக்கும்

ஏக்கம் விதைக்க
பொறாமை விளைக்கும்
பொறாமை விதைக்க
ஆத்திரம் விளைக்கும்

ஆத்திரம் விதைக்க
அழிவே விளைக்கும்
அழிவின் விதைப்பில்
அனைத்தின் முடிவும்.

ஐயம் விதைக்க
அச்சம் விளைக்கும்
குழப்பம் கவலை
கூடவே விளையும்

அச்சம் விதைக்க
பதற்றம் விளைக்கும்
பதற்றம் விதைக்க
பாதகம் விளைக்கும்

சோம்பல் விதைக்க
சோர்வு விளைக்கும்
சோர்வை விதைக்க
செயலின்மை விளைக்கும்

அகந்தைத் தன்மை
அகன்றிடாவிடில்
விதைப்பும் விளைவும்
வினைச்சுழல் விதியுள்.

ஆர்வம் விதைக்க
தேடல் விளைக்கும்
தேடல் விதைக்க
அநுபவம் விளைக்கும்

அநுபவம் விதைக்க
தெளிவு விளைக்கும்
தெளிவை விதைக்க
அமைதி விளைக்கும்

அமைதி விதைக்க
அகத்தெழில் விளைக்கும்
அகவொளி பெருக
அனைத்துமே இன்பம்.

வயலைக் கொத்தி
அடியுரமாக
அன்பைச் சேர்க்க
அகந்தை அருகும்.

அகந்தை அருகிட
அகவயல் மாறும்
விதைத்ததே விளையும்
விளைவும் அமோகம்.

அகவயல் தன்மை
அறிந்திட நன்மை
அகத்தி லிருத்த
இலங்கிடும் உண்மை.

வாழ்க எவ்வுயிரும்
வாழ்க நலமுடன்
வாழ்க வளமுடன்
வாழ்க வையகம்

எழுதியவர் : இல. சுவாமிநாதன் (15-Oct-14, 5:40 pm)
பார்வை : 60

மேலே