நாய் ரகசியம்
நாய் ரகசியம்
தெருநாய்க் குட்டிக்கு
அடைக்கலம் தந்தேன்
முழுநாய் ஆனஅதற்கு
ஒன்றரை வயது இன்று
அழைப்புஒலி கேட்டாலே
வெறித்தனமாய்க் குரைக்கும்
படிக்கட்டுச் சந்தில்
சிறைவசம் இருப்பதால்
கடிக்குமென்ற அச்சம்
எவருக்கும் வேண்டாம்
வந்தவர் அச்சத்தோடே
ஆர்வக்கோளாறு பொங்க
“கோம்பையா ராஜபாளையமா?”
என்றெமைக் கேட்பார்.
மனதுக்குள் சிரித்துக்கொண்டே
உண்மையை மழுப்பி
“நாட்டுநாய்” என்றிடுவோம்
அதன்மதிப்பைக் குறைக்காமல்.
வெறித்தனமாய்க் குரைப்பதும்
சொட்டுச் சொட்டாய்ச் சிறுநீரைப்
படிக்கட்டில் சிதறடிப்பதும்
அச்சத்தினால் என்பது
வந்தவர்க்குத் தெரியாத
நாங்களறிந்த ரகசியம்.
நடுநடுங்கி வாலைச் சுருட்டி
முன்னால் எகிறிப் பாய்ந்துவந்து
படியிலேறி ஓடமுயன்றால்
சங்கிலிப் பிணையால் தடுக்கப்பட்டு
தொடரும் குரைப்பால் தெருவே அதிரும்.
நீரறிந்த ரகசியத்தை
ஊரறியச் செய்திடாதீர்
”நாட்டு நாயின் கோழைத்தனம்”
காட்டுத்தீயாய்ப் பரவிவிட்டால்
எங்கள்தெரு நாய்க்கூட்டமும்
ஏளனமாய் எங்களைப் பார்த்து
குரைத்துக் குரைத்துச் சிரித்திடக்கூடும்