முகம்மது திருப்புகழ்

எங்கள்நபி திங்கள் ஒளியென
கங்குல்என எங்கும் மடமையும்
தங்கும்ஒரு மங்கும் பொழுதினில் -உதித்தாரே
எட்டுத் திசையெட்டும் வழியினில்
இட்டத் தொடுகிட்டும் முறையினில்
தட்டித் தடைபட்டும் இறைவழி -இசுலாத்தை
சிக்கல் பலதொட்டும் மனவலி
பக்கத் துணைவைத்து இறைமொழி
மக்கத் தொடுபக்கத் தொருநகர் -மதினாவில்
சித்தந் தெளிவுற்று மனிதரும்
நித்தந் தவறற்று விளங்கிட
புத்தித் தருமுத்துத் திருநபி- அருள்வாக்கே
கத்துங் கடல்மற்றும் மலைகளும்
சுத்தும் வளிவெட்ட வெளிகளும்
வித்தின் னுயிர்பெற்றுத் திகழ்வது -அவராலே!
கெட்டப் பலதிட்டம் நடப்பினும்
திட்டித் தினம்முட்டி ஒதுக்கினும்
சுற்றம் அதுவெட்டத் துணிந்துமே -கலங்காரே
தித்தித் திடும்சுத்த மறையது
முத்தித் தரும்மொத்த வடிவது
கத்தன் மொழிஎத்தித் தரும்பணி -புரிந்தாரே
வித்தைப் பலகற்றுத் திகழ்ந்திலர்
சொத்து சுகம்பற்றுத் துறந்தவர்
சுத்தப் பரம்மட்டும் விளக்கிய - பெருமானே!

எழுதியவர் : அபி (17-Oct-14, 7:56 pm)
பார்வை : 119

மேலே