எங்கே போயிற்று எங்கள் கிராமம்

எங்கே போயிற்று எங்கள் கிராமம்
பாவலர் கருமலைத்தமிழாழன்
பனிபடர்ந்த இளங்காலை பச்சைப் பட்டாய்ப்
படர்ந்திருந்த பசும்வயல்கள் கடலைப் போன்றே
இனிமையுடன் அலைதந்த பரந்த ஏரி
இன்னிசையில் மயக்கிநின்ற குயிலின் தோப்பு
அணியணியாய் எழில்மலர்கள் பூத்த தோட்டம்
அனைவரையும் நடுங்கவைத்த குளிரின் போர்வை
மனிதநேயம் மிக்கிருந்த மனிதர் கூட்டம்
மரங்களைப்போல் மொட்டையாகிப் போன தின்று !
ஒற்றையடி மண்பாதை கமுகும் தெங்கும்
ஓங்கிநின்று தென்றலொடு மொழிந்த பேச்சும்
கற்றைகுழல் கார்முகில்கள் கூடிக் கூடிக்
கரைந்ததனால் நிறைந்திருந்த குளங்கள் கேணி
சுற்றிசுற்றி உடன்வந்த ஆடு மாடு
சுந்திரமாய்க் கையிலுண்ட கோழி குஞ்சு
வற்றாதப் பாசத்தால் வாழ்ந்த சுற்றம்
வறிதாகி வெறுமையெனப் போன தின்று !
குடிசைகளின் முற்றத்தில் மாவுக் கோலம்
கிருமிகளை அழிப்பதற்கே மெழுகும் சாணம்
வடிக்கின்ற கைக்குத்தல் அரிசிக் கஞ்சி
வஞ்சனைகள் இல்லாத வெள்ளைப் பேச்சு
நடிப்பறியா உண்மையான உடலு ழைப்பு
நல்லதற்கும் கெட்டதற்கும் உதவும் நெஞ்சு
படிப்பில்லா பட்டறிவின் மேதைத் தன்மை
பழங்கதையாய்க் கனவாகப் போன தின்று !
-1-
களைபிடிங்கி நாற்றுநட்டுப் பாட்டுப் பாடி
களத்துமேட்டில் நெல்லடித்து மூட்டை கட்டி
வனைந்தகொம்பு மாட்டுவண்டி மேலே யேற்றி
வான்நிலவு வெளிச்சத்தில் வீட டைந்து
கிளையசையும் மரத்தடியின் கட்டில் மீது
கிழத்திக்கை வெற்றிலையின் சுவையில் மூழ்கக்
களைப்புதனை நீக்கிவிட்ட தூய்மை காற்று
காலத்தால் மாறியெங்கோ போன தின்று !
நுங்குநுரை யோடுவரும் புதுவெள் ளத்தில்
நீந்திவீர சாகசங்கள் மெச்சச் செய்து
செங்கரும்பு தோட்டத்துள் அத்தைப் பெண்ணின்
செவ்விதழில் தேனள்ளிக் குடித்துக் காய்த்துத்
தொங்குகின்ற மாங்கனிகள் பறித்துக் கங்குல்
தெருக்கூத்தில் மாமனறி யாமல் தந்து
நங்கையொடு வரப்புதனில் நடந்த காட்சி
நனவேட்டின் சுவடுகளாப் போன தின்று !
குருவிகளின் கூடுகளும் கீச்கீச் சென்று
குலவுவதும் மரத்தினிலே கொத்திக் கொத்தி
அருங்கிளிகள் விட்டபழம் சுவையே யென்று
அணில்கடித்துத் தின்னுவதும் செடியில் பூத்து
அருகழைக்கும் வாசமலர் அழைப்பை ஏற்று
அழகாகப் பறந்துவரும் பட்டாம் பூச்சி
கருவண்டின் ரீங்காரம் தும்பிக் கூட்டம்
கவிதைக்குள் கிராமத்தைப் புதைத்த தின்று !
-2-
விளைநிலங்கள் கூறுபோட்டு விற்க லாச்சி
விண்முட்டும் மாடிகளாய் முளைக்க லாச்சு
களைகளெனக் கம்பிவேலி வளர லாச்சு
கபடுகளும் கயமைகளும் பெருக லாச்சு
விளைந்திருந்த மனிதநேயம் புதைய லாச்சு
வீண்பகட்டு நாகரீகம் படர லாச்சு
துளைவிழுந்த ஓசோனின் படலம் போன்றே
தூய்மையிலா புதியமாற்றம் வந்த தின்று !
மண்வாசத் தெருவினிலே தாரின் நாற்றம்
மலர்வாசக் காற்றினிலே புகையின் நாற்றம்
கண்மகிழ்ந்த தோப்பினிலே தொழிலின் கூடம்
காதினித்த புள்ளொலியில் சங்கின் ஓலம்
தண்ணீரில் தொழிற்சாலைக் கழிவின் தேக்கம்
தரையெல்லாம் சாக்கடையின் கால்வாய் ஓட்டம்
வெண்ணிலவாய்க் குளிர்ந்திருந்த சுற்றுச் சூழல்
வெப்பத்தால் மாசாகிக் கெட்ட தின்று !
புதுமுகங்கள் பழகுதற்கே அஞ்சு கின்ற
புதுமனங்கள் பார்க்கின்ற போது மட்டும்
வெதுவெதுப்பாய்ப் புன்னகைக்கும் வெளிமு கங்கள்
விஞ்ஞான வளர்ச்சியிலே குதித்து வந்த
புதுமைகளின் தோரணங்கள் எந்தி ரங்கள்
புரிகின்ற அதிசயங்கள் மனிதர் கூட
அதுவான அவலங்கள் செக்கு மாட்டின்
அரிதாரம் பூண்டதுவே கிராம மின்று !
-3-
தொடர்வண்டி பேருந்து பலவாய் ஆகி
தொடர்கின்ற பயணங்கள் எளிதாய் ஆகி
நடக்கின்ற விபத்தாலே குருதி சிந்தி
நாள்தோறும் உயிர்பலிகள் மலிவாய் ஆகி
இடநெருக்கம் மக்கள்தம் பெருக்க மாகி
இயல்பான நடைமுறைகள் வேக மாகி
கடல்நடுவில் அமைதியென இருந்த வாழ்வில்
கரையலையின் ஆரவாரம் வந்த தின்று !
வன்முறைகள் ஆபாச விளம்ப ரங்கள்
வகைவகையாய்க் கல்விதனை ஏலம் போட்டே
நன்முறையில் விற்கின்ற கலைக்கூ டங்கள்
நடுப்பகலில் கற்பழிப்புக் கலவ ரங்கள்
புன்மைகளின் தேரோட்டம் பொழுது போக்காய்ப்
புதுமுறையில் கணினிகளில் சூதாட் டங்கள்
கன்றுயென வைக்கோலைக் காட்டிப் பாலைக்
கறக்கின்ற போலிகளே நிறைந்த தின்று !
அலங்கார வண்டிகளின் அணிவ குப்பு
அரசியலின் தில்லுமுல்லு வெற்றுப் பேச்சு
இலஞ்சத்தின் கோரமான தாண்ட வங்கள்
இலவுகாத்த கிளிகளென ஏழை மக்கள்
மலர்ந்துள்ள புதியமாற்றம் எல்லாம் இங்கே
மணமில்லா மலர்களென காட்சி நல்க
புலராதோ நற்காலம் என்ற ஏக்கப்
பெருமூச்சில் தகிக்கிறது கிராம மின்று !
-4-