தோற்றினும் முயற்சி செய்======போட்டிக் கவிதை

தோல்வி தரும் வலி(மை)
உணரப்படாத இதயங்களில்
வெற்றி வாழ்வதில்லை

தோல்வி பிறந்ததே
வெற்றிக்காக எனும்போது
தொடர்ந்து முயற்சிக்க
முயலாமை அறியாமையே

அடி சறுக்கியதற்காக
அஞ்சி நின்றால் நகர வாய்ப்பின்றி
கால்கள் புதைந்துவிடும்
ஓரிடத்திலேயே

முயற்சி அறியாதோர்க்கு
வெறும் தோல்வி அது,
முழுமுயற்சி கொண்டோர்க்கு
வெற்றிப்பாதைக்கான வழி சொல்லும்

அறுந்த வலைகளுக்காக
அழுதிருந்தால் இரையின்றி
என்றோ மரித்திருக்கும்
பொறுமையும் சிலந்தியும்

மேலிருந்து விழுந்த
தோல்வியை எந்த மலரும்
ஒப்புக்கொள்வதில்லை ,
பூமிக்கு மலர்த்தூவி
மனமகிழ்கிறன

தோற்கடிக்கப்படுகிறது
தோல்வி அதனின்று
ஏதாவது ஒன்றை
கற்றுக்கொள்ளும் போதினிலே

யாரும் ரசிக்கவில்லை
என்பதற்காக அழுகுரலில்
கானமிசைப்பதில்லை
கானக் கருங்குயில்கள்

விழுந்தவுடன் எழுந்து
ஓடாமலிருந்தால் என்றோ
தேங்கித் தொலைந்துபோயிருக்கும்
(வி)வேக நதிகள்

தோல்வியை ஏற்க
மறுக்கும் கண்களுக்கு
வெற்றிக் கனவுகள்
சொந்தமில்லை

விடா முயற்சி அக்னியில்
தொட்ட தோல்விகள் பொசுங்கிட
அச்சம் விடுத்து
ஆற்றிய செயல்களில்
மிஞ்சிய நெஞ்சுரங்கொண்டு
இலக்குகளை வீழ்த்த
தோற்றினும் முயற்சி செய் !!

எழுதியவர் : கார்த்திகா AK (19-Oct-14, 11:09 am)
பார்வை : 942

மேலே